கர்நாடக மாநிலத்தில் ஆட்கொல்லி புலியால் 16 நாள்களில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பிரபலமான மலைவாசத்தளம் குடகு மாவட்டம். இங்கு கடந்த சில வாரங்களாக ஆட்கொல்லி புலி ஒன்று உலா வருவதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆனால் இது எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அந்தப் புலி 8 வயது சிறுவனை தாக்கி கொன்றுள்ளது. இந்தச் சம்பவம் பெல்லூரு கிராமத்தில் நிகழ்ந்தள்ளது. அதனால் குடகு மாவட்டமே பீதியில் உறைந்துள்ளது. அந்த ஆட்கொல்லி புலி ஏற்கெனவே 2 பேரை கொன்ற நிலையில் இப்போது சிறுவனையும் கொன்றுள்ளது.

image

இதனையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு புலியை கண்டறிந்து சுட முயன்றுள்ளனர். ஆனால் அதிலிருந்து தப்பிய புலிக்கு, பாய்ந்த தோட்டாவால் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கர்நாடக மாநில வனத்துறையின் தலைமை வனக்காவலர் “காயமடைந்த புலியை வனத்துறை ஊழியர்கள் அதன் இடத்தை சுற்றி வளைத்துவிட்டனர். நாங்கள் நிச்சயமாக அந்தப் புலியை பிடித்துவிடுவோம் அச்சமடைய தேவையில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் புலியால் கொல்லப்பட் 8 வயது சிறுவன் குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது வனத்துறை.

எப்போது ஒரு புலி மேன் ஈட்டராக மாறுகிறது ?

பொதுவாக ஒரு புலி எப்போதும் மனித மாமிசத்தை விரும்பாது. மனிதனின் வாடையை நுகர்ந்தாலே புலி பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிடும். உதாரணத்துக்கு ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்றுவிடாது. அந்த மானை சில மணி நேரம் வைத்து அதன் மாமிசம் லேசான பின்புதான் உண்ணும். அப்படிப்பட்ட நிதானமான குணமுடையது புலி. ஒரு புலியின் அதிகப்பட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள். வயதான புலிகளே பொதுவாக மேன் ஈட்டராக மாறும் என்று சில விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

image

மேலும் ஒரு சில புலிகள் காயத்தின் காரணமாகவும் மேன் ஈட்டராக மாறும். அதாவது, வயோதிகம் காயம் காரணமாக அதனால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாது. எனவே, அப்போது ஒரு மனிதனின் ரத்தத்தை ருசித்துவிட்டால், பின்பு அது மனிதனை மட்டுமே வேட்டையாடும் மேன் ஈட்டராக மாறிவிடும். ஒரு பெண் புலி மேன் ஈட்டராக மாறிவிட்டால் அதன் குட்டிகளும் எதிர்காலத்தில் அதாவது வயதான பின்பு மேன்ஈட்டராக மாறிவிடும் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஊருக்குள் புகும் மேன் ஈட்டர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காகவே வனத் துறை அதிகாரிகள் புலிகளை சுட்டுக் கொல்கின்றனர் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு 1997 ஆம் ஆண்டு வால்பாறை பகுதியில் சுற்றித் திரிந்த மேன் ஈட்டர் புலி மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பிறகு, இந்தப் புலி வன உயிரியல் காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டது. பின்பு அந்தப் புலி இயற்கையாகவே மரணம் அடைந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.