கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், அதிமுகவில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ எஸ்.தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

image

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் வெளியிட்ட கருத்துகள்:

துக்ளக் ரமேஷ், மூத்த பத்திரிகையாளர்: “அதிமுகவில் ஜெயலலிதா நல்ல நாள் பார்த்துதான் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார். அதே பாணியில்தான் இந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனால், கூட்டணி கட்சிகளுக்கு எந்த சிக்கலும் இல்லை. வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதால் விரைவில் கூட்டணி குறித்த விஷயங்கள் இறுதி வடிவம் பெறும் என்றும் எதிர்பார்க்கலாம். இப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள தொகுதிகள், ஸ்டார் தொகுதி என்று சொல்லலாம். இந்தத் தொகுதிகளில் ஓபிஎஸ், இபிஎஸ், சி.வி.சண்முகம் போன்றோருக்கு நல்ல வாய்ப்புள்ள சூழல் தற்போது நிலவுகிறது என்றே தகவல்கள் சொல்கிறது.”

கணபதி, மூத்த பத்திரிகையாளர்: ”இந்தப் பட்டியல் மூலமாக விரைவில் கூட்டணி இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கலாம். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆறு வேட்பாளர்களும், வெவ்வேறு சமூகங்களை சார்ந்தவர்கள் என்பதால் சமூக நீதியை காட்டுவது போல உள்ளது. தற்போதைய பட்டியலில் அனைவரும் கடந்தமுறை போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிடுகிறார்கள், இனிவரும் பட்டியல்கள் மூலம்தான் யார், யாருக்கு சீட் கிடைக்கிறது, எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்று பார்க்கலாம்.”

துரை.கருணா, மூத்த பத்திரிகையாளர்: ”அதிமுக எப்போதும் அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாகவே அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும், அந்த வகையிலேயே முதல் கட்டமாக இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வாய்ப்பில்லாத 6 தொகுதிகளுக்கு பட்டியல் வெளியாகியிருக்கிறது. இன்னும் இரு தினங்களுக்குள் கூட்டணிகளுக்கான தொகுதிகள் பட்டியல் வெளியாகலாம். புதன்கிழமைக்குள் எந்தத் தொகுதிகள் என்ற விபரங்கள் வெளியாகும் என தெரிகிறது. 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவேண்டும் என அதிமுக விரும்புகிறது என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.”

இதனிடையே, அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ”234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தமிழகமே அதிமுகவின் கோட்டை என தெரிவிப்போம். பாஜக, தேமுதிகவுடன் ஒருமித்த கருத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் கூட்டணிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை, தொகுதிகள் விபரம், தேர்தல் அறிக்கை அனைத்தும் வெளியிடப்படும். தற்போது ஏழாவது முறையாக ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன், நிச்சயமாக இந்த முறையும் மாபெரும் வெற்றி பெறுவேன்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.