அகமதாபாத்தில் கடந்த 2 நாட்களில் மூன்று குழந்தைகள் உயிருடனும், ஒரு குழந்தை சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வெஜல்பூர் பகுதியில் ஷியாம் சுந்தர் சொசைட்டியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் ஒரு பெண் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அக்குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தை சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதேபோல் வேஜல்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மற்றொரு பச்சிளம் குழந்தை ஒன்று, சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த குழந்தையை தெரு நாய்கள் கடிக்க முயன்றதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அக்குழந்தையை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டுச் சென்றார். பின்னர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார். போலீசார் குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும், குழந்தைகளை கைவிட்டதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 317 ன் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அகமதாபாத் நகரின் எல்லிஸ் பிரிட்ஜ் பகுதியில் உள்ள அகமதாபாத் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஒரு பெண் குழந்தையின் சடலம் ஒன்று பிளாஸ்டிக் பையினுள் சுருட்டி வீசப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 318-ன் கீழ் வழக்குப் பதிந்து குழந்தையை வீசிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீப நாட்களாக அகமதாபாத்தில்பிறந்த குழந்தைகளை சாலை ஓரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் தூக்கி வீசிச் செல்லும் நிலைமை அதிகரித்து வருவது குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM