நீலகிரி : தாயைப் பிரிந்த குட்டியானை உயிரிழப்பு – நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் கார்குடி வனப்பகுதியில், தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானை நெற்றியில் காயத்துடன் சுற்றித் திரிந்த நிலையில் மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது.

கார்குடி வனப்பகுதி, நீலகிரி கார்குடி வனப்பகுதியில் உள்ள, பிதர்லா பாலம் அருகே குட்டி யானை ஒன்று தனியாக நடமாடுவதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குட்டியானை, தாயை பிரிந்து சுற்றித்திரிவதை அறிந்தனர். அந்த குட்டியானையின் நெற்றியில் பெரிய காயம் இருந்தது.

இதையடுத்து முதுமலையில் இருந்து வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குட்டி யானையை அதன் தாயிடம் சேர்க்க வனத்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குட்டி யானை உயிரிழந்தது. யானையின் இறப்புக்கு அதன் நெற்றியில் ஏற்பட்ட காயத்தை ஒரு முக்கியமான காரணமாக கூறும் வனத்துறையினர், தாயை பிரிந்த நிலையில் உணவு கிடைக்காமலும் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM