இந்தியாவே மேற்கு வங்க தேர்தலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. காரணம், மத்திய அரசின் எல்லா பந்துகளையும் அசராமல் சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய பாஜகவுடனான அதிருப்தி காரணமாக ஆளுநரை அழைக்காமல் முதல்நாள் கூட்டத்தை முடித்து வரலாற்றை மாற்றியுள்ளார். இது போதாதென்று, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தைரியமிருந்தால் மேற்கு வங்கத்தில் போட்டியிட்டு ஜெயித்து காட்டட்டும்; வென்றால் அமைச்சர் பொறுப்பு தருகிறேன்” என சவால் விட்டிருக்கிறார். மத்திய அரசை உரசிக்கொண்டிருக்கும் மம்தாவின் செயல்பாடுகள் பாஜகவின் கௌரவத்தை சீண்டி பார்க்கிறது. இந்தச் சூழலில்தான் மேற்கு வங்க தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. மம்தா Vs பாஜக என்ற புள்ளியிலிருந்து இந்தத் தேர்தலை அணுக வேண்டியுள்ளது.

ஒருபக்கம் அமித்ஷா வோ, ‘மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 200 தொகுதிகளை பாஜக கைப்பற்ற வேண்டும்’ என்று கூறி வருகிறார். மறுபுறம் மம்தா, கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெற்ற சீட்டுகளை விட கூடுதல் இடங்களை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். கடந்த முறை திரிணாமூல் காங்கிரஸ் 211 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதை விட கூடுதலாக இந்தமுறை வென்று பாஜகவுக்கு தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முழங்கி வருகிறார் மம்தா. இருவருக்குமான அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

image

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு காலமாக நடந்து வந்த இடதுசாரி ஆட்சிக்கு 2011-ல் முற்றுப்புள்ளி வைத்தவர் மம்தா. மக்கள் நம்பிக்கையை தனது வாக்குகளாக அறுவடை செய்தவர். மாநிலத்திலிருந்து அவரது ஆட்சியை அகற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளைப்போல மேற்கு வங்கத்திலும் பாஜகவின் கால்தடத்தை பதிக்க விரும்பும் அமித் ஷா, மாநில மக்கள் மாற்றத்தை விரும்புவதாக பிரசாரம் செய்து வருகிறார்.

மம்தாவின் நம்பிக்கை எதை நோக்கியது?

2011-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி செய்துவரும் மம்தா, மாநிலத்துக்கு ஏற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதாகவும், வங்கத்தில் வாழும் 100 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை ஏதோ ஒருவகையில் மேம்படுத்தியுள்ளதாகவும் உறுதியாக நம்புகிறார். “மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசுதான் இந்த அரசு. விவசாயிகள், தொழிலாளர்கள், அனைத்து சாதியைச் சேர்ந்தவர்கள், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். வளர்ச்சியில் பாஜக எங்களுடன் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவர்கள் சிபிஐ, வருமான வரித்துறையினரை பயன்படுத்தி அச்சுறுத்தி பார்க்கின்றனர். மேலும் சாதி மற்றும் மத ரீதியாக மக்களை துண்டாட துடிக்கின்றனர்” என்கிறார் மம்தா.

வங்கத்து மக்களின் மனதையும், எண்ணங்களையும் ஒருபோதும் பாஜகவால் வெல்ல முடியாது என்பதில் மம்தாவுக்கு எப்போதும் ஒரு கர்வம் உண்டு. காரணம், அந்த மக்களின் கலாசாரம், பண்பாட்டு அடையாளங்கள் குறித்து அவர்களுக்கு எதுவுமே தெரியாது என நம்புகிறார். பிரதமர் மோடியின் நீண்ட தலைமுடியும், தாடியும் தாகூரைப்போல இருக்கலாம். ஆனால் இந்த வித்தைகளையெல்லாம் வைத்து மேற்கு வங்க மக்களை கவர்ந்திட முடியாது என்பது அங்குள்ள அரசியல் நோக்கர்களின் பார்வை.

image

“வங்கத்து மக்கள் எப்போதும் வங்காளத்தைச் சேரந்த ஒருவரால் ஆளப்படுவதையே விரும்புவார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்களால் அல்ல. குஜராத்தை சேர்ந்த இரண்டு பேர் தான் நாட்டை ஆள்கிறார்கள். அவர்கள் நாட்டையே அழிக்க பார்க்கிறார்கள். பாஜகவின் கொள்கை, மதத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதாகும்” என்று கிடைக்கும் கேப்பில் எல்லாம் அடித்து நொறுக்கிவிடுகிறார் மம்தா.

கடந்த ஜனவரி 23-ம் தேதி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், மம்தா உரையாற்ற வரும்போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ முழங்கங்கள் எழுப்பப்படவே உரையாற்றாமல் கிளம்பிவிட்டார் அவர். இதுதான் சமயம் என நினைத்துக்கொண்டிருந்த பாஜக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை மம்தா வெறுப்பதாக கூறியது. இதற்கு பதிலளித்த மம்தா, ராம் மற்றும் சீதா இரண்டையும் இணைத்து ‘ஜெய் சியரம்’ என்று சொல்வதாகக் கூறினார்.

மேலும், நேதாஜியைக் குறைத்துப் பேசுவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியல் முழக்கத்தால்’ உரையாற்றவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். சுபாஷ் சந்திரபோஸுக்காக நடத்தப்பட்ட நிகழ்வை சிறுமைபடுத்தும் வகையில் எழுப்பப்பட்ட’ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எந்த வங்காளியும் பாராட்ட மாட்டார்கள் என்று பாஜக எய்த அம்பை அந்தப் பக்கமே திருப்பிவிட்டார்.

அதேபோல மற்ற எந்த அரசியல் கூட்டணியாலும் திரிணாமுல் கட்சியின் வாக்குகளை பிரிக்க முடியாது என அவர் நினைக்கிறார். 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் போல இடதுசாரிகளில் வாக்குகள் பாஜகவுக்கு பிரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார்.

அமித் ஷா வகுக்கும் வியூகம்!

மேற்கு வங்க தேர்தலை தனது அடுத்தக்கட்ட அசைன்மென்டாக எடுத்துக்கொண்டிருக்கும் அமித் ஷா, அம்மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என நினைக்கிறார். மாற்றம் வேண்டும் என்ற மக்களின் மனநிலையை பரவலாக்கி அம்மாநிலத்தில் அஸ்திவாரத்தை அமைக்கப் பார்க்கிறார். மேற்கு வங்கத்தில் தற்போது இருக்கும் நிலையின் திசையை மாற்ற வேண்டும் என்றும், திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்.

image

மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த பாஜக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமித் ஷா, ‘இது வெறும் முழக்கம் மட்டுமல்ல; அதில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது’ என கூறியிருந்தார்.

மேற்கு வங்கத்து தேர்தல் பாஜகவுக்கான மைனஸை ப்ளஸாக மாற்றும் என்பது அமித் ஷாவின் தேர்தல் கணக்கு. காங்கிரஸ் இடதுசாரிகளின் இருப்பு பாஜகவுக்கான பலம் என கருதுகிறார். காரணம், பிஜேபிக்கு எதிரான வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகளால் பிரிக்கப்படும். இதனால் மம்தாவின் 211 சீட்டுகளுக்கும் மேலான வெற்றி என்பது கனவாகிவிடும் என அவர் நம்புகிறார். மற்ற மாநிலங்களில் கூட பாஜகவின் வெற்றி, சிதறும் வாக்குகள் மூலமாகத்தான் சாத்தியமாகியிருக்கிறது.

“ஆளும் கட்சியின் மோசடி, தேர்தல் முறைகேடுகளை மேற்கு வங்க மக்கள் எதிர்ப்பார்கள். மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள். பாஜகவின் முதல்வர் முகமாக ‘மண்ணின் மைந்தன்’ இருப்பார். வங்காளிகள் வங்காளத்தை ஆளுவார்கள். பாஜக அரசாங்கத்தின் கீழ் நல்லாட்சியை பெறுவார்கள். வன்முறை இல்லாத மாநிலமாக மேற்கு வங்கம் மாறும்” என்று அமித் ஷா முழங்கியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.