தீங்கிழைக்கும் பதிவுகள், கணக்குகளை கட்டுப்படுத்துவதில் ஃபேஸ்புக், ட்விட்டர் மேம்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு, விளம்பரதாரர்களுக்கு அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குதல், தவறான தகவல்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சங்களில் சிறப்பாக செயல்பட்ட சமூக வலைத்தளங்கள் குறித்து, விளம்பர நிறுவனமான ஐபிஜி மீடியாபிரான்ட்ஸ், சமீபத்தில் ‘ஊடக பொறுப்புக் குறியீடு’ (Media Responsibility Index) என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட 9 சமூக ஊடக தளங்கள் இந்த குறியீட்டு ஆய்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டன. இந்த ஆய்வறிக்கையில், சதி கோட்பாடு தொடர்பான பக்கங்கள் மற்றும் குரூப்புகளை அகற்றுவதிலும் தவறான உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் ஃபேஸ்புக், ட்விட்டர் மேம்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல் கொள்கைகளில் யூடியூப் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவில்லை என்றும் அதேநேரம் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளின் நல்வாழ்வை மேம்படுத்துவது போன்ற முயற்சிகளில் யூடியூப் தளம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்புகின்ற கணக்குகளை பின்ட்ரெஸ்ட் சஸ்பெண்ட் செய்கிறது என்றும் தேர்தல் மற்றும் சுகாதார உள்ளடக்கம் போன்ற வகைகளுக்கான உண்மைச் சரிபார்ப்புக்கு ரெடிட் முன்னுரிமை அளிக்கிறது என்று மீடியாபிரான்ட்ஸ் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM