”வளமான புதுவை; வலிமையான பாரதம் என்பதே எனது நோக்கம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் வளமான புதுவை அமையும். அந்த வளர்ச்சியை கொடுக்க பாஜகவால்தான் முடியும் என்பதால், அக்கட்சியில் இணைந்தேன்” என்று அழுத்தமாகப் பேசுகிறார், புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக்கூறி சமீபத்தில் ராஜினாமா செய்தவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், பாஜகவில் இணைந்து அதிர்ச்சியூட்டியிருக்கிறார். டெல்லியிலிருந்து திரும்பியவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,

புதுச்சேரியைப் பொறுத்தவரை பாஜக ஒரு வளர்ச்சியடையாத கட்சியாக இருக்கும்போது ஏன் இணைந்தீர்கள்?

 “எந்தக் கட்சியுமே ஆரம்பிக்கும்போது வளராது. போகப்போகத்தான் வளரும். இனிமேல், பாஜகவை வளர்ச்சியடைய வைக்க முழுமையாக பாடுபடுவோம். விரைவில் புதுவையில் தாமரை 100 சதவீதம் மலந்தே தீரும். அதனை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும். அதுதான், எனது லட்சியம். கூட்டணிக் கட்சியின் ஆதரவோடு மக்கள் ஆதரவோடு பாஜக ஆட்சிதான் புதுவையில் மலரும்”.

image

பொதுப்பணித்துறை, கலால்துறை என முக்கியத் துறைகளின் அமைச்சராக  பதவிகளை அனுபவித்துவிட்டு  ஆட்சி முடியப்போகும் சமயத்தில் பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறதே? இதை முன்னரே செய்திருக்கலாமே?

”காங்கிரஸில் முக்கியமான பதவிகள் கொடுத்தார்கள்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. இத்தனைநாள் முதல்வர் நாராயணசாமியின் நிர்வாக சீர்கேட்டை எப்படியாவது சரிப்படுத்திவிடலாம் என்று பொறுத்துப் பார்த்தோம். பலமுறை பேசியும் பார்த்தோம். ஆனால், அவரது செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. நாராயணசாமியின் செயல்பாடுகளை கட்சித் தலைமையிடமும் நேரடியாகவும் பொறுப்பாளர்கள் மூலமாகவும் சொல்லி வந்தோம். ஆனால், தலைமையும் பாராமுகமாக இருந்துவிட்டது. ஆரம்பத்திலேயே, எங்களை அழைத்து சரிப்பண்ணி இருந்தால், பிரச்சனை வந்திருக்காது. நாராயணசாமிக்கே முழு சப்போர்ட் செய்து வந்தது.

நாராயணசாமியும் எங்களை ஓரங்கட்டுவதில்தான் குறியாக இருந்தாரே தவிர மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை. புதுவை மாநிலம் வீணாகப் போவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதுபோன்ற காரணங்களால்தான், கட்சியை விட்டு வெளியேறினோமே தவிர பதவியை அனுபவித்துவிட்டு வெளியேறவில்லை.

மேலும், ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவே பதவியில் இருந்து மக்கள் சேவை செய்திருக்கிறேன். பதவி என்பது சுகம் கிடையாது. சுகமான சுமை. அந்த சுமையையும் ஏற்றுக்கொண்டுதான் மக்கள் பணி செய்திருக்கிறோம். அரசு கார்களுக்கே சொந்த செலவில்தான் டீசல் போட்டு போய்கொண்டு வந்தோம். அதனால், பதவியில் பெரிதாக எதையும் அனுபவிக்கவில்லை”.

image

முதல்வர் பதவி கொடுக்காத அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறதே?

”டெல்லி அரசியலில் இருந்துவிட்டு மக்களை சந்திக்காத நாராயணசாமியை முதல்வராக்கியது காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு. அப்போதே, என்னைக்கூட வேண்டாம், சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்துகூட ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்று எனது ஆட்சேபத்தை தெரிவித்தேன். ஆனால், கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. ’எனக்கு முதல்வர் பதவி கொடுக்கவில்லை. அதனால்தான் அதிருப்தி’ என்றால், நான் எப்போதே விலகி இருப்பேனே? ஆரம்பத்தில் முதல்வர் ஆக்கவில்லை என்று வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனால், அதன்பிறகு கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு பொறுமையாகவே இருந்தேன். இவ்வளவு விட்டுக்கொடுத்தும் முதல்வர் நாராயணசாமி என்னை ஓரங்கட்டுவதிலும், கிரண்பேடியை எதிர்ப்பதிலேயுமே கவனம் செலுத்தினார். மாநில வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் செய்யவில்லை. இதனையெல்லாம் பொறுத்துப் பொறுத்து பார்த்து முடியாத பட்சத்தில்தான் இந்த முடிவை எடுத்தேன்”.

ஆனால், புதுச்சேரியின் வளர்ச்சியை பாஜகவும் ஆளுநர் கிரண்பேடியும்தான் தடுக்கிறார்கள் என்று நாராயணசாமி சொல்கிறாரே?

”கிரண்பேடியும் பாஜகவும் புதுவையை வளரவிடவில்லை என்றால்,  அதனை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே நாராயணசாமி? ஏன் செய்யவில்லை?. இதே நாராயணசாமிதான் என்னிடம் ‘கிரண்பேடியை சமாளிக்க நான்தான் சரியான ஆள் என்பதால் சோனியா அம்மா என்னை முதல்வர் ஆக்கினார்’ என்றார். பிறகு ஏன் கிரண்பேடியை சமாளிக்க முடியவில்லை? அப்போது, தோல்வியை ஒப்புக்கொள்ளுங்களேன்? இவரது, தனிப்பட்ட ஈகோவால் புதுவையை 20 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டார். மக்கள் இந்த ஆட்சியில் அல்லோபட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதுவையின் வளர்ச்சி திட்டங்களை ஆளுநரும் முடக்கவில்லை. பாஜகவுமும் முடக்கவில்லை. எதற்கும் அணுகுமுறைதான் காரணம். நாராயணசாமி மாநில வளர்ச்சிக்காக நிதிக்கேட்டு உள்துறை அமைச்சரைப் போய் பார்ப்பார். ஆனால், பார்த்துவிட்டு வெளியில் வந்து விமர்சனம் செய்து பேட்டிக் கொடுப்பார்.  அப்படி செய்தால் எப்படி நிதி கொடுக்கும் மத்திய அரசு? ஆனாலும், 300 கோடிக்குமேல் நலத்திட்டங்களை செய்துள்ளது மத்திய அரசு”.

image

உங்களை ஓரங்கட்டுவதில் நாராயணசாமிக்கு என்ன நோக்கம்?

முதல்வர் வேட்பாளர் போட்டியில் நான் இருந்தது மட்டுமே காரணம். வேறு எந்தக் காரணமும் இல்லை. நாராயணசாமி என்மீது இதனாலேயே  காழ்ப்புணர்ச்சியாக இருந்தார். இம்முறை என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார். என் வளர்ச்சி அவருக்குப் பிடிக்காமலேயே,  கட்சியில் இருந்து ஓரங்கட்ட செயல்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை கட்சியின் தலைவராக இருந்து நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக கட்சிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறேன். எந்தத் தேர்தலிலும் தோல்விக்கு இடமே இல்லை. அப்படி இருக்கும்போது என்னை தலைவர் பதவியிலிருந்து கடந்த வருடம் ஏன் நீக்கவேண்டும்? நான் காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

 விலகுவதற்கு முன்  கட்சித் தலைமை உங்களை சமாதானம் செய்தார்களா?

தலைமை என்னிடம் பேசவில்லை. ஆனால், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட மேலிடப் பொறுப்பாளர்கள் சமாதானம் செய்யும் முயற்சியாக பேசினார்கள். தலைமை கொடுத்த உத்திரவாதத்தைக்கூட நாராயணசாமி  கேட்கவில்லை. கட்சியினர் 40 பேருக்கு வாரியத்தலைவர் பதவிக்காக பரிந்துரை செய்து லிஸ்ட் கொடுத்தோம். சோனியா காந்தி அம்மாவும் அனுமதி கொடுத்தார்கள். அதற்கு, புதுவை ஆளுநர் ஒப்புதல் கொடுத்தும் நாராயணசாமி  வேண்டுமென்றே மறுத்துவிட்டார். இதுபோன்ற, பல்வேறு உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக உங்களை எதிர்பார்க்கலாமா?

”அதனைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். இன்னும் கூட்டணி இருக்கிறது. கட்சியை வளப்படுத்தவேண்டியுள்ளது. இளைஞர்களை கட்சிக்குள் இழுப்பது, எங்கள் தொண்டர்களையும் பாஜகவில் இணைப்பது போன்றவற்றை திட்டமிட்டுள்ளேன். நான் ராஜினாமா செய்துள்ளதால், எனது ஆதரவாளர்களும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்கள். வரும் 31 ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் நட்டா புதுவை வருகிறார். அவரது தலைமையில், எனது ஆதரவாளர்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள்”.

image

இத்தனை வருடங்கள் காங்கிரஸ் கொள்கைகளுடன் பயணித்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளீர்களே? பாஜக மீது மதவாதக் கட்சி என்ற முத்திரை இருக்கிறதே?

”புதுவையின் வளர்ச்சிக்காக மத்திய அரசோடு இணக்கமாக சென்று திட்டங்களை நிறைவேற்றுவதுதான் எங்களது நோக்கம். மதத்தின் பெயரால் ஒரு கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜகவில் எல்லாக் மதத்தினரும்தான் இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுமே இருக்கிறார்கள். பாஜக மதவாதக் கட்சி அல்ல”.

எதிர்கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களை பாஜக பேரம் பேசித்தான் இழுக்கிறது என்ற விமர்சனம் இருக்கிறதே? உங்களையும் பணம் கொடுத்துதான் இழுத்ததாக சொல்லப்படுகிறதே?

  “பணம் வாங்கிக்கொண்டு பாஜகவில் சேரவேண்டிய அவசியம் இல்லை. அப்போ காங்கிரஸ் கட்சியில் சேரும்போது பணம் வாங்கிக்கொண்டா சேர்ந்தேன்? யாரிடமும் பணம் வாங்கி சேரவில்லை. யாரும் பேரமும் பேசவில்லை. எதிர்கட்சிகளிலிருந்து ஏன் பாஜகவில் சேர்கிறார்கள் என்றால் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு சரியான பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. இதுதான் காரணம். அதோடு, இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்துள்ள பிரதமர் மோடியை பார்த்து பிரமிப்பதும் கட்சியில் சேரக்காரணம். இதுபோன்ற காரணங்களால்தான் பாஜகவில் இணைகிறார்களேத் தவிர பணத்திற்காக சேர்வதில்லை”.

வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.