டெல்லியில் நடைபெற்று வரும் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களிலும் போலீஸ் தடையை மீறி பேரணியும் போராட்டமும் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் டிராக்டர் பேரணி வெற்றிபெறவும் தமிழகம் முழுவதும் பேரணியும் போராட்டமும் நடைபெற்றது.

திருவையாறு: திருவையாறு வரகூரில் திமுக திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன் தலைமையில் கூட்டணி கட்சியினர், தஞ்சையில் நடைபெறும் டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள சுமார் 10 டிராக்டர், மற்றும் இரண்டுசக்கர வாகனத்தில் சென்றார்கள் அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே நின்று மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த ஆர்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டனி கட்சியினர், விவசாயிகள் என பெரும்திரளாக கலந்து கொண்டார்கள்.

சேலம்: சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி விவசாயிகள் சிலர் டிராக்டரில் வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போவதாக குற்றம்சாட்டிய தொழிற்சங்கத்தினர் மத்திய அரசு தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொமுச சிஐடியு ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் 4 அடுக்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

image
தருமபுரி: தருமபுரியில் தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தேசிய கொடியேந்தி அமைதிப் பேரணி நடைபெற்றது. ராஜகோபால் பூங்கா முன்பு தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக தொலைபேசி நிலையம் வரை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்: டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் நல்லாக் கவுண்டர் தலைமையில் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். பேரணியில் பங்கேற்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் முயற்சித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 11 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரி புதுச்சேரி மாநில ஏஐடியூசி விவசாயி சங்கம் சார்பில் இருசக்கர பேரணி நடைபெற்றது. உழைப்பாளர்கள் சிலையில் இருந்து தொடங்கிய பேரணியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தேசிய கொடியுடன் பேரணியாக சென்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சென்ற பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

கோபிசெட்டிபாளையம்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகனப்பேரணியில் ஈடுபட்டனர். இப்பேரணி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொடங்கி கச்சேரிமேடு, கள்ளிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் கடைவீதி வாய்க்கால்ரோடு வழியாக சென்று கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இப்பேரணியின் முடிவில் இந்திய அரசியல் சட்ட உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவிநாசி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையிலும் மற்றும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையிலும் விவசாயிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் அவிநாசியை அடுத்து ஆட்டையம் பாளையத்திலிருந்து அவிநாசி புதிய பேருந்துநிலையம் வரை தேசியக்கொடியை வாகனத்தில் ஏந்தியபடி இருசக்கர வாகனப் பேரணி மேற்கொண்டனர்.

ஆட்டையம்பாளையத்திலிருந்து துவங்கிய பேரணி அவிநாசி முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தை கடந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு இப்பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் உள்ளிட்டோர் மூன்று வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழியேற்று கோஷமிட்டனர்.

image
திருச்சி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 10க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்களுடன் திருச்சி – நெ.1 டோல்கேட் ரவுண்டானாவில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில்குமார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் வரையில் எங்கள் போராட்டம் தொடருமென கூறி சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு, அனைத்து வாகனங்களும் திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலம் வழியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாகண்ணு உள்ளிட்ட 30 விவசாயிகள் மீது கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

பெரம்பலூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூரில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த இருப்பதால் அனுமதி மறுத்த காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வானொலிதிடலுக்கு டிராக்டர் மற்றும் பிற வாகனங்களில் வந்த விவசாயிகள் பேரணி நடத்த முயன்றனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதும் விவசாயிகள் போலிசாரின் தடுப்புகளையும் எச்சரிக்கையும் மீறி பேரணி நடத்தினர்.
அவர்களை மடக்கி பிடிக்க முயன்றதால் போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவழியாக போலீசாரின் ஒருமணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு விவசாயிகள் பேரணியை கைவிட்டு கலைந்து சென்றனர். டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று காட்டுமன்னார்குடி வடக்கிலிருந்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வரை புதிய 3 வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எருமை மாட்டுடன் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020-ஐ ரத்து செய்யக்கோரியும், மின்சார ஒழுங்கு முறைசட்டம் மற்றும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், 60 தினங்களாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் போலீசார் தடையை மீறி தேசிய கொடிகளுடன் இருசக்கர வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பின் போது மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன, இந்த இருசக்கர வாகன அணிவகுப்பு திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மணிக்கூண்டை அடைந்தது.

திருத்துறைப்பூண்டி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து குடியரசு தினமான இன்று நாடு முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் பல இடங்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள், கார்கள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியாக சென்றனர். விவசாயிகளின் இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி சென்றதாக கூறி காவல்துறையினர் தடுத்த போது விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

கடலூர்: புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணிக்கு விவசாய சங்கங்கள் இன்று அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. டிரக்டர் பேரணி வந்தால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

 இதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி சார்பாக கடலூரில் இரண்டு சக்கர வாகனத்தில் பேரணி படைவீரர் மாளிகையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல தயாரானது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி பேரணி செல்வோம் என அனைத்துக் கட்சி சார்பாக நூற்றுக்கணக்கானோர் படைவீரர் மாளிகை அருகே குவிந்து பேரணியாக சென்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.