நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Also Read: சசிகலா உடல்நிலை: `அரசியல் உள்நோக்கம் இருக்கலாம்!’ – தஞ்சையில் சீமான் பேச்சு
இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், தென் மண்டலத்திற்கு உட்பட்ட 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். அத்துடன், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அமைப்பு, ரீதியாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வலுவாக இருக்கின்றன. வளர்ந்துவரும் நாங்கள் மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்று வாக்குகளைப் பெற்று வருகிறோம்.

பெரிய கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருக்கிறது. அதையும் மீறி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துத் தேர்தல்களில் வாக்களித்து வருகிறார்கள். தன்னலமற்ற தூய தமிழர் ஆட்சிதான் எங்களின் கொள்கை, தடையற்ற மின்சாரம், தரமான கல்வி, உயர்தர மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்குவதே எங்களின் லட்சியம்.
எங்களின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிப்போம். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் 12 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வாக்கு இயந்திரத்தை என்னிடம் கொடுத்தால் எத்தனை தொகுதி வெற்றிபெறுவோம் என இப்போதே தெரிவித்து விடுவோம்,
கடந்த நான்கு ஆண்டுகளாக சசிகலா நல்ல உடல் நலத்துடன் சிறையில் இருந்து வந்தார். அவர் விடுதலையாக நான்கு நாள்கள் இருந்த நிலையில் திடீரென உடல்நலம் குறைந்து போயிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் எடப்பாடி ப்ழனிசாமியின் டெல்லி பயணத்துக்கும் சசிகலாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதற்கும் தொடர்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
Also Read: சசிகலா உடல்நிலை: `அரசியல் உள்நோக்கம் இருக்கலாம்!’ – தஞ்சையில் சீமான் பேச்சு
கச்சத்தீவை இலங்கையிடம் கொடுத்ததால்தான் நமது மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதுவரை 846 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உயிரிழப்பது தமிழர்கள் என்பதால் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

போர் தொடுத்தே கச்சத் தீவை மீட்க முடியும். மத்திய அரசு நினைத்தால் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் இறங்க முடியும். காட்டுபள்ளியில் 6,011 ஏக்கரில் அதானி துறைமுகம் அமைப்பதை எதிர்க்கிறோம். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது போல அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்” என்று தெரிவித்தார்.