1. ரேகா ஜோசபின்

ரேகா ஜோசபின்

பிக்பாஸ் இல்லத்தில் மிகக் குறைவான நாட்கள், அதாவது வெறும் 14 நாட்கள் மட்டுமே இருந்தவர் நடிகை ரேகா. சக போட்டியாளர்களுடன் ஈடுகொடுத்து விளையாட முடியாததே காரணம். சமையலில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ரேகா. இவரது சுவையான உணவால் மற்ற போட்டியாளர்களை கட்டிப்போட்டார். சக போட்டியாளர்களில் பாலாவிடம் மிகுந்த அன்பும் வைத்தார். இவருக்கு மீனுக்குட்டி என்ற செல்லப் பெயரையும் சக போட்டியாளர்கள் வைத்தனர். அதேநேரம் சுத்தமாக இருக்க வேண்டும், எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள்போல தொணதொணவென்று சொல்லிக் கொண்டே இருந்தார். இதைப் பொறுக்கமுடியாமலேயே சக போட்டியாளர்கள் இவரை நாமினேட் செய்தார்கள்… மக்களும் இவரை முதல் ஆளாக வெளியில் அனுப்பி விட்டனர்!

2. வேல்முருகன்

பிக்பாஸ் | வேல்முருகன்

பிக்பாஸ் வீட்டில் 28 நாட்கள் இருந்தவர் நாட்டுப்புறக் கலைஞர் வேல்முருகன். இவருக்கு இந்த ஆட்டத்தின் அடிப்படைத் தன்மையே புரிபடவில்லை என்பதே வெளியேற்றுத்துக்கானக் காரணம். இவரால் தன்னுடைய ஆட்டத்தை மற்றவர்களுடன் இணைந்து அவர்களுக்கு நிகராக விளையாட முடியாமல் போனது. அதே சமயம் தன்னுடைய பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தார் வேல்முருகன்.

3. சுரேஷ் சக்ரவர்த்தி

சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் இல்ல தாத்தா. முப்பத்தி ஐந்து நாட்கள் வீட்டுக்குள் இருந்தார். பிக்பாஸ் சீசன் 4-ன் `நவரச நாயகன்’ சுரேஷ் சக்கரவர்த்தி என்றே சொல்லலாம். முதல் மூன்று வாரங்களுக்கு ஆட்டத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றவர் இவர்தான். சக போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்தார். ஆனால் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் இவரது விளையாட்டின் போக்கு மாறியது. கிட்டத்தட்ட இருக்கும் இடமே தெரியாமல் போனது. இதனாலேயே இவர் மூன்றாவது போட்டியாளராக வெளியேறினார்.

4. சுசித்ரா ராமதுரை

பிக்பாஸ் சுசித்ரா

பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து 28-ம் நாள்தான் வைல்ட் கார்டு என்ட்ரி (wild card entry) மூலம் உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் இல்லத்திற்குள் மூன்று வாரங்களே இருந்தார். சரியாக 21 நாட்கள். ”இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை” என்று வெளியேறியதும் வருத்தப்பட்டார் சுச்சி. இவரது பங்களிப்பு பிக்பாஸ் இல்லத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது. அதிக நேரத்தை சக போட்டியாளர் பாலாவுடனேயே செலவிட்டார். மற்ற போட்டியாளர்களிடம் சரியாக கலக்கவில்லையா அல்லது அது பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படவில்லையா என்று தெரியவில்லை. சுசித்ராவே இதுபற்றி கமலிடமும் வருத்தப்பட்டார். ஆனால், கிடைத்த வாய்ப்பை சுசித்திரா சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறவிட்டு விட்டார் என்பதே உண்மை.

5. சம்யுக்தா ஹெக்டே

சரியாக 56 நாள்… அதாவது எட்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். சம்யுக்தா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முக்கிய காரணம் ‘வளர்ப்பு’ என்கிற வார்த்தை. ஆரி அர்ஜுனாவின் வளர்ப்பு குறித்து மூன்று, நான்கு இடங்களில் குறிப்பிட்டு பேசினார் சம்யுக்தா. இதுவே அவருக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்து வெளியேறக் காரணமாக இருந்தது.

பிக்பாஸ் சம்யுக்தா

8-வது வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தார்கள். அப்போதுதான் பிக்பாஸ் Topple card என்னும் ஆயுதத்தை அறிமுகப்படுத்தினார். நாமினேஷனில் இருந்த ஏழு பேரும் தங்களுக்குள் கலந்தாலோசித்து Topple cardஐ ஒருவரிடம் கொடுக்க வேண்டும். அந்த நபர் அவருக்குப் பதிலாக நாமினேட் செய்யப்படாத வேறொரு போட்டியாளரை நாமினேட் செய்யலாம். நாமினேஷனில் இருந்த ஏழு போட்டியாளர்களும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர். கடைசியில் அந்த Topple card அனிதா வசமானது. அனிதா அவருக்குப் பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்தார். இதற்காகவே காத்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் சம்யுக்தாவை வெளியேற்றினர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த எட்டு வாரங்கள் சம்யுக்தா பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பிக்பாஸ் இல்லத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பாலாவின் கருணையில்தான். அதுவே பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாகவும் மாறியது.

6. சனம் ஷெட்டி

சனம் பிக்பாஸ் வீட்டில் 63 நாட்கள், ஒன்பது வாரம் இருந்தார். இவர் தனித்தன்மையுடன் மிகவும் திறமையாக விளையாடினார். தைரியமாகத் தன் கருத்துக்களை வெளியிட்டார். தன்னம்பிக்கையும் மன உறுதியும் மிக்க போட்டியாளர்.

சனம் ஷெட்டி

இவரது குறை, மற்றவர்கள் பேசும்போது, அவர்களை முழுவதுமாகப் பேசவிடாமல் பாதியிலேயே இடைமறித்து பேசுவது. தமிழ் சரியாகப் புரியாததால் தவறாகப் புரிந்து கொண்டு பல நேரங்களில் வாதிட்டார். அதேசமயம் யாருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் சிறிது நேரத்திலேயே அதை மறந்து சுமூகமாக பேச ஆரம்பித்துவிடுவார். இவர் எந்தக் குழுவிலும் சேராமல் தனித்தன்மையுடன் விளையாடியது பார்வையாளர்களிடையே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. இருந்தாலும் இவர் ஒன்பதாவது வாரம் வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் வருத்தப்பட்டாலும், சனம் மன மகிழ்ச்சியுடன், மனத்திருப்தியுடன் வெளியேறினார்.

Also Read: பிக்பாஸ் வின்னர் ஆரி நல்லவரா, கெட்டவரா… அவரது 105 நாள் பயணம் எப்படி இருந்தது?! #Aari #BiggBoss

7. ஜித்தன் ரமேஷ்

பிக்பாஸ் – ‘ஜித்தன்’ ரமேஷ்

முதல் இரண்டு வாரங்கள் சிறப்பாக விளையாடிய ரமேஷ், அர்ச்சனாவின் நுழைவுக்குப் பின் மெத்தனமாக விளையாட ஆரம்பித்தார். அர்ச்சனா உருவாக்கிய அன்பு குழுவில் ஐக்கியமானார். இலவசமாக மசாஜை அனுபவித்து கொண்டிருந்தார். ராஜா வீட்டு கன்னுக்குட்டியாகவே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார். இது ஒரு கேம் ஷோ என்பதையும், விளையாட வந்திருக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டார். அதனாலேயே 69-ம் நாள் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறிய வாரம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஆம் 10-ம் வாரத்தில் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர்.

8. அறந்தாங்கி நிஷா

நிஷா

பிக்பாஸ் இல்லத்தில் தனக்காக விளையாடவில்லை என்றும், தம்பி ரியோவுக்காக மட்டுமே விளையாடுவதாகவும், ரியோ ஜெயிக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்றும் சொல்லி சொல்லியே காலியானார் நிஷா. அர்ச்சனா வந்த பிறகு அன்பு குழுவில் சேர்ந்து காணாமல் போனார். கமல் பலமுறை அறிவுறுத்தியும் நிஷா மாறவில்லை.

அதேசமயம் நிஷா அனைவரிடமும் இலகுவாகப் பழகினார். எவரிடமும் அவருக்குச் சுணக்கம் இல்லை. அனைத்து போட்டியாளர்களுக்கும் பிடித்தமானவராகவே இருந்தார். நிஷா தன் தனித்தன்மையை இழந்து அன்பு குழுவில் சிக்கிக் கொண்டார். அதுவே இவர் டபுள் எவிக்‌ஷனில் வெளியேறக் காரணமாகியது.

9. அர்ச்சனா

பிக்பாஸ் சீசன் 4 தொடங்கிய பதினோராம் நாள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார் அர்ச்சனா. இவர் உள்ளே போனதும் எல்லாமே மாறியது. அர்ச்சனா வருவதற்கு முன், வந்த பின் என்று!

அர்ச்சனா, நிஷா

அந்த அளவு எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியது அர்ச்சனாவின் நுழைவு. அர்ச்சனாவை Game spoiler என்றே சொல்லலாம். அதேசமயம் அர்ச்சனா திறமையான போட்டியாளர். டாஸ்க்கில் அவரது பங்கு அபரிதமாக இருந்தது. சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் சிறப்பாகப் பணியாற்றினார். அர்ச்சனா உருவாக்கிய அன்பு குழுவினால் அவருடைய திறமை விழலுக்கிரைத்த நீராக வீணாகியது. மக்கள் இவரது சர்வாதிகார போக்கை விரும்பவில்லை. அர்ச்சனாவின் பெயர் எப்போது நாமினேஷனில் வரும் வெளியேற்றலாம் என்பதிலேயே குறியாக இருந்தனர். அவரது பெயர் நாமினேஷனில் வந்தவுடன் 11வது வாரம் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் இல்லத்தில் 67 நாட்களுடன் இவரது பயணம் முடிந்தது. அர்ச்சனா அவரது அன்பை எல்லா போட்டியாளர்களிடமும் சரிசமமாகக் காண்பித்து அவரது விளையாட்டை தனியாக விளையாடி இருக்க வேண்டும். தனது திறமைகளை எதிர்மறையாகப் பயன்படுத்தாமல் விளையாடியிருந்தால் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக இருந்திருப்பார்.

10. அனிதா சம்பத்

பிக்பாஸ் அனிதா

பிக்பாஸ் இல்லத்தில் தனித்தன்மையுடன் விளையாடியவர் அனிதா. தைரியசாலி. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பிக்பாஸ் இல்லத்தில் முற்போக்கான கருத்துகளைப் பதிவிட்டார். அக்கருத்துகள் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றன. ஆனால் அவரது முன்கோபம் அவரை பிரச்னையில் தள்ளியது. அனிதா எப்போது கோபப்படுவார், எதற்காக கோபப்படுவார் என்று யாராலும் கணிக்க முடியாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற பழமொழிக்கு இவருக்கு சரியாக்ப் பொருந்தும். ஆரி என்ன பேச வருகிறார் என்று தெரியாமலேயே, அவரை முழுமையாக பேசவிடாமல், நிலைதடுமாறி உச்ச ஸ்தாதியில் ஆரியைக் கத்தினார். இதுவே அவர் வெளியேற காரணமாகியது. ஆரியின் ரசிகர்கள் அனிதாவின் மீது வெகுண்டெழுந்தனர். 77-ம் நாளில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அனிதா.

11. ஆஜித் காலிக்

பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே மிகவும் இளையவர் ஆஜித். இவருக்குப் போதுமான அனுபவமோ, வெளிப்பாடோ இல்லாததால் இவர் மற்ற போட்டியாளர்களால் எளிதாகக் கையாளப்பட்டார். சக போட்டியாளரான பாலாஜியின் ஸ்டைல், உடல்மொழி இவற்றால் ஈர்க்கப்பட்டு, அவருடைய கைப்பாவையாகவே இருந்தார் ஆஜித். இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. டாஸ்க்கிலும் இவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.

ஆஜித்

மூன்றாவது வாரமே இவர் வெளியேறி இருக்கவேண்டும். இவரிடம் Eviction pass இருந்ததால் அந்த வாரம் வெளியேறுவதில் இருந்து தப்பித்தார். அதற்குப் பிறகும் அவர் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் மக்கள் ஆரியை எதிர்ப்பவர்களை முதலில் வெளியில் அனுப்ப முடிவு செய்ததால் இவர் பிக்பாஸ் இல்லத்தில் 91 நாட்கள் இருந்தார்.

இவரும் ஆரியிடம் இணக்கமாகப் பழகவில்லை. ஆனால் மற்ற போட்டியாளர்களை விட இவரிடம் வீரியம் குறைவாக இருந்ததால் இவரால் 91 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. பிக்பாஸில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அஜித்தின் விளையாட்டை பார்த்த பிறகு குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தினால் நன்றாக இருக்கும்.

12. ஷிவானி நாராயணன்

சக போட்டியாளர்கள் குறித்து அதிகம் புறம் பேசாத போட்டியாளர் ஷிவானி. அதிகமாக எந்த சர்ச்சையிலும் ஈடுபட்டதில்லை. அதேசமயம் இவர் வீட்டு வேலைகளிலும் சமையலிலும் அதிகம் பங்கேற்றதில்லை. டாஸ்க்கிலும் கூட தீவிரமாக பங்கேற்றதில்லை.

பிக்பாஸ் ஷிவானி

அதே சமயம் Ticket to finale ல் நடைபெற்ற கடைசி Rope Task-ல் சிறப்பாக ஆடி முதல் இடத்தைப் பிடித்தது, இத்தனை நாள் அவர் எதிலும் சரியாக பங்கேற்காததையும் அவரது குறைகளையும் மறைத்துவிட்டது. ஷிவானியின் வயதுக்கு மீறிய முதிர்ச்சியும் பாராட்டத்தக்கது. அவரது அம்மா பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்து கோபப்பட்டு உணர்ச்சிவசப்பட்ட போதும், ஷிவானி நிதானம் தவறவில்லை. கடைசி இரண்டு வாரம் இவர் விளையாடிய விளையாட்டை முதல் நாளிலிருந்து விளையாடியிருந்தால் அவர் ஆசைப்பட்டபடி முதல் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக வந்திருப்பார். இதனாலேயே 98-ம் நாள் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

13. கேப்ரில்லா

பிக்பாஸ் இல்லத்தில் தினமும் காலையில் போடும் பாட்டிற்கு உற்சாகமாக ஆடும் ஒரே போட்டியாளர் இவர்தான். தைரியமான போட்டியாளர். அன்பு குழுவில் இருந்தாலும், டாஸ்க்கில் தனித்தன்மையுடன் போட்டியிட்டார். பிறரின் தவறுகளை எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை.

பிக்பாஸ் கேபி

இவருக்கு வயது 21 தான். ஆனால் பல விஷயங்களை பக்குவமாகவும், முதிர்ச்சியுடனும் கையாண்டார். சிறந்த யதார்த்தவாதி. அதனால்தான் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக வந்தாலும் தன்னால் முதல் இடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பிடிக்க முடியாது என்று அறிந்து ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்ற முடிவை எடுத்தார். 102-ம் நாள் ஐந்து லட்சத்துடன் வெளியேறினார் கேப்ரில்லா.

14. சோம் சேகர்

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அன்பு குழுவை அமைத்தவுடன் அந்தக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டவர் சோம். பின்னர் ரியோவும், சோமுவும் நட்புடன் பழக ஆரம்பித்தனர். ரியோவுடன் சேர்ந்து நகைச்சுவை செய்யும் தருணங்களில் வெளியே தெரிய ஆரம்பித்தார் சோம். இவர் எந்தப் போட்டியாளரிடமும் கத்தி கோபப்பட்டு சண்டை போட்டதில்லை. சிறு சிறு சண்டைகள், விவாதங்கள் வந்தாலும் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார். எல்லா போட்டியாளர்களிடமும் இணக்கமாகப் பழகினார்.

பிக்பாஸ் சோம்

இவருடைய இந்த குணங்கள்தான் Ticket to finale லவ் இவருக்கு முதல் இடத்தை வாங்கி தந்தது. ஃபைனலுக்குள் நுழையும் முதல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்த சோமுசேகர், 105-ம் நாள் குறைந்த வாக்குகள் பெற்றதால் நான்காவது ரன்னர் அப் (4th runner up) ஆக வெளியேறினார்.

15. ரம்யா பாண்டியன்

முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த ஒரே பெண் போட்டியாளர். இவர் ஆரியைத் தவிர மற்ற அனைவரிடமும் இணக்கமாகப் பழகினார். ஆரியிடம் இரண்டு முறை கோபப்பட்டு கத்தியது மக்களிடையே அவருக்கு வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்தது. பிக்பாஸ் இல்லத்தில் பாலாவுக்கென்று ஒரு குழுவும், அர்ச்சனா உருவாக்கிய அன்பு குழுவும் இருந்தாலும், எந்தக் குழுவிலும் சேராமல் சமயத்துக்கு ஏற்றவாறு எந்த நேரத்தில் எந்தக் குழுவில் இருந்தால் ஆதாயமோ அந்தக் குழுவுடன் சேர்ந்து இருப்பார். ஆனால் ஆரியுடன் யார் சண்டை போடுகிறார்களோ அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவார். அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவார், அவர்கள் பக்கம் நியாயமே இல்லையென்றாலும்!

ரம்யா பாண்டியன்

சிரித்துக்கொண்டே புறம் பேசுவதால் இவருக்கு soft hurt என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. Rope Task-ல் ஆண்களுக்கு நிகராக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆரியிடம் பகைமை பாராட்டாமல் இருந்திருந்தால் முதல் மூன்று இடத்தில் வந்திருக்கலாம்.

16. ரியோ

ரியோவின் பயணம் பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வருவதற்கு முன், வந்த பின் என்று இருவகையாக பிரிக்கலாம். அர்ச்சனா வருவதற்கு முன்பு தனித்துவமாக விளையாடிக் கொண்டிருந்தவர், அர்ச்சனா வந்த பிறகு அவரது அன்பு குழுவில் சேர்ந்து அந்த குழுவுடன் தன்னை முழு மூச்சாக இணைத்துக்கொண்டு ஆட்டத்தில் தனது தனித்தன்மையை முழுவதும் இழந்துவிட்டார். இதைத்தவிர நிஷா, விளையாட்டில் அவருக்குப் பாரமாக இருந்தார். நிஷாவை இவரால் ஒதுக்கவும் முடியவில்லை. அக்கா பாசம் தடுத்தது. இத்தனை தடைகள் இருந்தாலும், தன்னுடைய நகைச்சுவை உணர்வால் பிற போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்வித்தார்.

பிக்பாஸ் ரியோ

நிஷா, அர்ச்சனா வெளியேறிய பின்பு அவருடைய ஆட்டம் திரும்பவும் சூடுபிடித்தது. Ticket to finale Task-ல் சிறப்பாக விளையாடி ரசிகர்களது பாராட்டுதலை பெற்றார். ஆனால் கடைசி வாரத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து அளித்த தகவல்களில் காற்று போன பலூனாகிவிட்டார். கடைசி வரையில் அவரால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.

தேவதாஸ் முகத்துடன் 2nd Runner up ஆக 105-ம் நாள் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

Also Read: பிக்பாஸ் சீஸன் 4… வென்றது அன்பா, நேர்மையா, உண்மையா?! கற்றதும், பெற்றதும், தெளிந்ததும்!

17. பாலாஜி

பிக்பாஸ் இல்லத்தில் பாலாஜியின் ஆட்டம் அர்ச்சனா வந்தப்பிறகு சூடுபிடித்தது. அர்ச்சனாவின் அன்பு குழுவால் வெறுப்படைந்த பார்வையாளர்கள், பாலாஜி அர்ச்சனாவை எதிர்த்து பேசியதுடன், அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்ட ஆரம்பித்தவுடன் பாலாவிற்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. சாதாரணமாகவே அவருடைய உடற்கட்டு, இளமையான தோற்றம், உயரம் என்று தோற்றத்தில் மயங்கி உருவான கூட்டம், இவருடைய பயமின்மை, எதிராளியை சொல்லி அடிப்பது, கையை உயர்த்திக் காண்பித்து “வெச்சுக்கோ” என்று சொல்லும் மேனரிசம், இவருடைய கோபம் எல்லாம் இளைஞர்களையும் இளைஞிகளையும் வளைத்துப் போட்டது. நேர்மையாக விளையாடாமல் இருப்பது, விதிமுறைகளைப் பின்பற்றாமல் மைக்கை கழற்றி வைப்பது, அதிக நேரம் உறங்குவது என்று பல நெகட்டிவ் விஷயங்கள் இவரிடம் இருந்தாலும் நான் இப்படித்தான், இதுதான் என் ஆடும் முறை என்று விளையாடினார்.

பிக்பாஸ் பாலாஜி

கோபத்தில் கத்திவிட்டு பிறகு கோபம் தணிந்தவுடன் மன்னிப்பும் கேட்பார். சக போட்டியாளர்களுக்கு ஏதேனும் துன்பம் என்றால் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். “இளங்கன்று பயமறியாது” என்ற பழமொழிக்கேற்ப விளங்கிய பாலாஜி கடைசி வாரத்தில் வெளியிலிருந்து வந்த போட்டியாளர்கள் அளித்த விவரத்தில் சில நாட்கள் மனம் தளர்திருந்தார். ஆனாலும் ரியோவைப் போல் இல்லாமல் சுதாரித்துக் கொண்டார். பாலாவிடம் ஹீரோ, வில்லன் இரண்டு முகங்களும் தென்பட்டன. அதனால்தான் இவர் first runner-up ஆக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.

18. ஆரி அர்ஜுனன்

ஆரியை முதல் மூன்று வாரங்கள் வெளியே தெரியவேயில்லை. எதாவது கருத்து சொல்லிக் கொண்டே இருக்கின்றார் என்று இவரிடம் யாரும் அதிகமாக நெருக்கம் காட்ட விரும்பவில்லை. அர்ச்சனா வந்த பிறகு இவர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டார். அன்பு குழு அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். பாலாவின் குழு அவர்களுக்குள் நட்பு பாராட்டிக் கொண்டனர். தனித்து விளையாட வேண்டும் என்ற முடிவிலும் இந்த பிக்பாஸ் இல்லத்தில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை என்ற கொள்கையுடனும் உள்ளே நுழைந்த ஆரி தனித்தன்மையுடன் தப்பென்றால் தட்டிக்கேட்டும், நல்லதென்றால் தட்டிக்கொடுத்தும் விளையாடினார்.

பிக்பாஸ் வின்னர் ஆரி

Also Read: பிக்பாஸ் சீசன் 4 – ஆரியின் வெற்றியை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

நேர்மை, உண்மை, விதிமுறைகளைப் பின்பற்றுதல் என்ற பல நல்ல குணங்கள் இவரிடம் இருந்தாலும் எப்பொழுதும் குறைக்கூறி விளையாடுதல், நீளமாகப் பேசிக்கொண்டே இருப்பது போன்ற குணங்களால் சக போட்டியாளர்களுக்கு இவரைப் பிடிக்காமல் போனது. சக போட்டியாளர்கள் இவரை 11 முறை நாமினேட் செய்தார்கள். ஆனால், மக்கள் 11 முறையும் காப்பாற்றினர். நான்கு முறை இவர் போட்டியாளர்களால் ஓய்வு அறைக்கு அனுப்பப்பட்டார்.

சக போட்டியாளர்களால் இவர் தனிமைப்படுத்தப்பட மக்கள் இவரது நேர்மையையும், பெண்களிடம் இவர் காட்டும் மரியாதையையும், சக போட்டியாளரை மறப்போம், மன்னிப்போம் என்று மன்னித்து அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பதையும் பார்த்து அவரை வெகுவாகப் பாராட்டி அவரை பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் ஆக்கினார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.