“இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! – கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி மூலம் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, “தடுப்பூசிகளை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது” என்றார்.

நாட்டில் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும்படி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேரைத் தொடர்ந்து 27 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணைநோய் உள்ள 50 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணிகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி காணொலியில் தொடங்கி வைத்தபிறகு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், ‘’சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எழுந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகல் பாராமல் உழைத்தனர். அவர்களின் உழைப்பால்தான் குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசி அல்ல, இரண்டு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். தடுப்பூசிகளை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. பாடுபட்ட விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

image

நாட்டுமக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி போடப்படும். அதேபோல் ராணுவ வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது.

அடுத்த 2-3 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிதான் உலகிலேயே விலை குறைவானது. அதேசமயம் இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல.

இந்தியாவில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம்.  தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவுடன் முகக்கவசங்களை நீக்கிவிட வேண்டாம்’’ என்று பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM