சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தைத் தற்போதைய அளவான ஆண்டுக்கு 24.66 மில்லியன் டன்னில் இருந்து ஆண்டுக்கு 320 மில்லியன் டன்னாக விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் முன்னெடுப்புகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது என்பதே ஒட்டுமொத்தச் சூழலியாளர்களின் கருத்தோட்டமாக உள்ளது.

எண்ணூர் கழிமுகத்துடன் சேர்த்து பக்கிங்காம் கால்வாய், கொற்றலை ஆற்றுப்பகுதி மற்றும் பழவேற்காடு நீரமைப்பு ஆகியவை அங்கு வாழும் மீனவர் சமுதாயங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதிகளாக உள்ளன; பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும் எண்ணூர் கழிமுகத்தின் பங்கு அளப்பரியது. சதுப்பு நிலக்காடுகள் மற்றும் அலையாத்திக் காடுகளைக் கொண்ட இந்தப் பகுதியானது மீன் வளங்களின் நிலையான மீளுருவாக்கத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், மழைப்பொழிவு, உயர் அலைகள் மற்றும் சூறாவளிக் காலங்களில் வெள்ளப்பெருக்கினைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் பெற்ற எண்ணூர் கழிமுகமானது ஏற்கனவே அப்பகுதியில் இருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளாலும், அனல் மின் நிலையங்களாலும் பெரும் பாதிப்படைந்திருக்கிறது. காற்று மற்றும் நீர்நிலை மாசு நிறைந்திற்கும் இப்பகுதியில் துறைமுக விரிவாக்கம் என்பது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை சூழலையும் அடியோடு அழிப்பதற்குச் சமமாகும்.

image

அதானி துறைமுகங்களின் துணை நிறுவனமான மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் (எம்.ஐ.டி.பி.எல்) என்ற நிறுவனத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திட்டம் செயல்படுத்துவதற்காகச் சொல்லப்படும் நன்மைகளைக் காட்டிலும், இதனால் ஏற்படும் ஈடுசெய்ய முடியாத அழிவுகளே அதிகம். இத்திட்டத்திற்குத் தேவைப்படும் 6,111 ஏக்கரில் ஏறக்குறைய 2,300 ஏக்கர் மக்கள் பயன்பாட்டிலும், வாழ்வாதாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த புறம்போக்கு நிலங்கள் அவைகள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும், 2000 ஏக்கர் அளவில் கடல் பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில், சுமார் 6 கி.மீ வரையிலான கடல் பகுதிகளில் மணல் கொட்டப்படவுள்ளது. இவ்வாறு கடற்பரப்பில் மணலைக் கொட்டி அதன் இயல்புத் தன்மையிலிருந்து மாற்றுவது திரும்பப்பெறவியலா சூழலியல் மாற்றங்களை ஏற்படுத்தும். நிலமீட்பிற்கான வேலையில் பாலாற்றிலிருந்தே பெரும்பாலான அளவு மணல் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கனவே பாதிப்படைந்துள்ள பாலாற்றினை இத்திட்டம் மேலும் சீரழிக்கும்.

மேலும், இத்திட்டதின் மூலம் 2,000 ஏக்கர் அளவிலான பழவேற்காடு நீர்ப்பகுதிகளும், கொற்றலை ஆற்றின் உப்பங்கழிகளும் தொழிற்பூங்காக்களாக மாற்றப்பட உள்ளன. குறைந்தது, 6 முக்கியமான மீன்பிடித்தளங்கள் இத்துறைமுகத்தால் அழிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மேலதிகமாக இறால்கள் மற்றும் நண்டுகளைக் கையால் எடுக்கும் பல்லாயிரம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உப்பங்கழிகள் ஆதரிக்கின்றன. பண்ணை மற்றும் மேய்ச்சல் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலமும், அதன் தன்மைகளை மாற்றுவதன் மூலமும் இத்திட்டம் அப்பகுதியின் பண்ணை மற்றும் கால்நடைப்பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

துறைமுகத்தால் ஏற்படும் கடலரிப்பு அளவில் சிறிய காட்டுப்பள்ளி தீவை எளிதில் சுரண்டிவிடும். இது நடந்தால், பழவேற்காடு காயல் பகுதி இனி இருக்காது; ஏனெனில், அது வங்காள விரிகுடாவில் ஒன்றிணைந்துவிடும். இதனால், பழவேற்காடு பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடற்றவர்களாக மாற்றப்படுவார்கள். பழவேற்காட்டின் காயல் பகுதி, கொற்றலை ஆறு, எண்ணூர் கழிமுகம் ஆகியவையே சென்னையில் பெருமழைக்காலங்களில் வெள்ளத்தின் வடிகாலாக அமைகின்றன.

துறைமுகத்தை விரிவுப்படுத்துவதன் மூலம் ஏற்படும் கடல் அரிப்புகளால் இந்த இயற்கை வெள்ள வடிகால்களையும் இழப்பதால் மழைக்காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளத்தின் அளவு வரும் காலங்களில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில் தற்போது அமைந்துள்ள துறைமுகங்களினால் ஏற்பட்ட கடல் அரிப்புகளே கடலோரக் கிராமங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டுப்பள்ளியில் இருபது மடங்கு அளவில் துறைமுக விரிவாக்கம் செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் அழிவை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்களான சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆகியவை இணைந்து 2019-20ல் 12.2 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. மொத்த சரக்கு கையாளுதல் திறன் ஆண்டுக்கு 27.4 கோடி டன். துறைமுகத்திறனில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை செயலற்றவை மற்றும் பயன்படுத்தப்படாதவையாகவே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் ஆண்டிற்கு 32 கோடி டன் சரக்குகள் கையாளும் விதத்தில் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் கோருவது தேவையற்றது. இத்துறைமுகம் நிலைபெறுமானால் அதிகச் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காகவும் அதனை வகைசெய்யும் விதத்திலும் மீண்டும் எட்டு வழிச்சாலையை அமைக்கும் பணி கட்டாயமாக்கப்படும்.

5,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை இத்துறைமுக விரிவாக்கம் ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அப்பகுதியின் சூழலுக்கு ஏற்ப மக்கள் தங்கள் தொழில்களைச் செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதி இருளர் உள்ளிட்டப் பல பழங்குடி சமூகங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. ஏற்கனவே, மக்கள் வழமையாகப் பின்பற்றிவரும் தொழிற்முறைகளிலிருந்து வெளியேற்றிவிட்டுக் கட்டுமானப்பணிகளில் தற்காலிக வேலை வழங்குவது ஏற்புடையதல்ல. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிப்பின்படி, உயர்மட்ட கடல் அரிப்புகளைக் கொண்ட கடற்கரைகளில் துறைமுகங்கள் இருக்க முடியாது. காட்டுப்பள்ளிக் கடற்கரையோ வேகமாக அரிக்கப்படும் ஒன்று. மேலும், 10 கிமீக்குள் வனவிலங்கு சரணாலயம் இருக்கும்பட்சத்தில் துறைமுகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதானியின் துறைமுகம் பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திற்கு மிக அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, விசத்தாக்கம் ஏற்படக்கூடிய வட்டத்தில் காட்டுப்பள்ளி கிராமம், காட்டுப்பள்ளி காலனி ஆகியவை உள்ளன. எதிர்பாரா இயற்கைச்சீற்றங்கள் மூலமோ, கவனக்குறைவின் மூலமோ எதிர்காலத்தில் விபத்து ஏற்படுமாயின் இப்பகுதி முழுவதும் அழிந்துவிடும். குறிப்பாக, மக்கள் வாழும் பகுதியில் இதனை அமைப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

இதற்கிடையில் இத்திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 22.01.21 அன்று காலை 11 மணியளவில் மீஞ்சூர் பகுதியிலுள்ள சந்திரபிரபு ஜெயின் கல்லூரியிலுள்ள பகவன் மகாவீர் ஆடிட்டோரியத்தில் நடத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மக்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படாததும், கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அதிகளவுகூட இயலாத சூழலில் இத்தகைய கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தத் திட்டமிருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்த மக்கள் கருத்துக் கேட்பானது வாயலூர், காட்டூர், எப்ரகாமபுரம், புழுதிவாக்கத்தில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை வளாகத்துக்கானது போலக் கட்டமைக்கப்பட்டாலும் உண்மையில் களஞ்சி மற்றும் காட்டுப்பள்ளியில் வரவிருக்கின்ற துறைமுகம் மற்றும் துறைமுக வளாகம் ஆகியவை பற்றிய கருத்துக்கேட்பே நடக்கிறது. திட்ட இடத்திலிருந்தும், பாதிக்கப்படவிருக்கும் மக்கள் வாழும் இடத்திலிருந்தும், மக்கள் கருத்துக்கேட்பு நடக்கும் இடமானது 20 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் பிற்சேர்க்கை IV, முதல் பிரிவின்படி பொது மக்கள் கருத்துக்கேட்பு திட்டம் அமையுமிடத்தில், அல்லது அதற்கு மிக நெருக்கமான இடத்தில் நடைபெற வேண்டும் என்று தெளிவாக வகுத்துரைக்கிறது. எனவே, மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு அதிகத் தூரம் பயணித்து வந்து தங்கள் கருத்துக்களை முன்வைப்பதில் சிரமம் உள்ளது. இதனால், பலரது கருத்துக்கள் கேட்காமல் போக வாய்ப்பிருப்பது மட்டுமின்றி, பொது மக்கள் கருத்துக்கேட்பின் நோக்கத்தையே முறியடித்துவிடுகிறது. பாதிக்கப்படும் மக்கள் வராத பட்சத்தில் தொழிற்சாலையின் சார்பில் ஆட்கள் வரவழைக்கப்பட்டு மக்களின் கருத்துக்கு மாறான கருத்துக்களைப் பதிய வைக்கும் அபாயமும் இருக்கிறது. எனவே, மக்களின் கருத்துகளைச் சரியான முறையில் கேட்கும் விதத்தில், கருத்துக்கேட்புக்கான இடத்தை காட்டுப்பள்ளிக்கு மாற்றி, கொரோனா நோய் தடுப்பு விதிகள் பின்பற்றுவதற்கான அனைத்து வசதிகளையும் மக்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் எனக் கோருகிறேன்.

பொன்னேரி, திருவொற்றியூர், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளில் இருக்கும் நாம் தமிழர் உறவுகள் வரும் சனவரி 22ஆம் தேதியன்று நடைபெறும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தவறாமல் பங்குபெற்று, இத்திட்டத்தினால் ஏற்படும் கொடிய விளைவுகளை எடுத்துக்கூறி தங்கள் கருத்துக்களைப் பதிய வைப்பார்கள். இத்தோடு, பொது மக்களும் பெருமளவு பங்கேற்று கருத்துகளைப் பதியச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, சூழலியல் செயல்பாட்டாளர்கள், அரசியல் இயக்கங்கள், சூழலியல் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரது கருத்துக்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தாக விளங்கக்கூடிய அதானியின் துறைமுக விரிவாக்கத்திற்கான அனுமதியை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வழங்கக்கூடாதெனவும், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணூர் கழிமுகத்தில் இனி மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும், திட்டங்களும் வராதபடி தடை பிறப்பிக்க வேண்டுமெனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.