தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகின்றது. தமிழகத்தில் இன்று 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும், 6 இடங்களில் கோவாக்சினும் வழங்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு முடிவுகட்டும் விதமாக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 பகுதிகளில் கோவாக்சினும் வழங்கப்படுகின்றன.

26 அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் 6 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இதில் மருத்துவர்கள், செவிலியர், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அடங்குவர். ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு என்ற அடிப்படையில் ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவ்வாறாக இன்று 166 மையங்களில் 16,600 பேருக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. சென்னையைப் பொறுத்தவரை 4 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு தனியார் மருத்துவமனை உட்பட 12 இடங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

image

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மருத்துவமனை முதல்வர்கள் உட்பட தமிழகத்தில் தலைசிறந்த 10 மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளவுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் , ஸ்டான்லி முதல்வர் பாலாஜி , ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி என அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளனர்.

தடுப்பூசி வழங்கும் நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருக்கின்றார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி காலை 11 மணியளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலுத்தப்படுவது எப்படி?

தடுப்பூசியை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து மருத்துவர்கள், செவிலியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மருந்து பாட்டிலிலும் 5 மில்லி லிட்டர் மருந்து இருக்கும், அதில், ஒவ்வொருவருக்கும் 0.5 மில்லி என்ற அளவில் 10 பேருக்கு தடுப்புமருந்து செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி போடுவதற்கான சிரின்ஜுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களும் தடுப்பூசி போட்டுகொள்ளலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு எழும் கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களை போக்குவதற்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையேடு வெளியிடப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM