‘ஜல்லிக்கட்டு நாயகன்’ ஓபிஎஸ்! – அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கிவைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, “நம் பாரம்பரியத்தை, கலாசாரத்தை காப்பது ஜல்லிக்கட்டு விளையாட்டுதான்” என்றார்.

“ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டில் கலந்துகொண்டு துவக்கிவைத்த கழகத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த அனைவரையும் வரவேற்கிறேன்” என்று பேசிய முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்துரையில் துணை முதல்வர் ஓபிஎஸுக்கு ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழாரம் சூட்டினார்.

image

தொடர்ந்து பேசிய அவர், ’’உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்றால் அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த மண்ணில் பிறந்த வீரர்கள் அனைவரும் சீறிவரும் காளைகளை பக்குவத்தோடு அடக்க இங்கு வந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுள்ளனர். நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தை காக்கக்கூடிய இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அதிமுக அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதை இந்நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்’’ என்று பேசினார்.

மேலும் காளைகளை அடக்க வந்துள்ள இளைஞர்களுக்கும், அவற்றை வளர்த்த விவசாயிகளுக்கும், வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது உரையை முடித்தார் முதல்வர் பழனிசாமி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM