“தொடர் மழையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்”- ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சேதமடைந்துள்ள விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு  அரசு நிச்சயம் வழங்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளையும், சேதமடைந்த விவசாய பயிர்களையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதன் பின்னர் மழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,image

“அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்பில் உள்ளவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும். தாமிரபரணி ஆற்றுப்படுகைக்கு மக்கள் அவசியமின்றி செல்லக்கூடாது.

வடகிழக்கு பருவமழையின்போது சேதமடைந்த பயிர்களுக்கு 565 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 487 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் பருவம் தவறிய மழையால் நெல் அறுவடை செய்யும் காலங்களிலும், மானாவாரி பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளன. 

image

விவசாய சேதங்கள் பற்றி போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படும். மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு நிச்சயம் கிடைக்கும், விவசாயிகள்  கவலைப்பட வேண்டாம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM