தொடர் கனமழையினால் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையோர வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா நதி உள்ளிட்ட அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், தற்போது பெய்துவரும் தொடர் கனமழையினால் அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து அணைகளிலிருந்தும் சுமார் 50 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

image

இதனால் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, ஆத்துார், ஏரல், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது பிசான நெல் பயிர் நடவு பணிகள் முடிந்து ஒன்றரை மாதம் ஆகும் நிலையில் வெள்ளம் நெற்பயிர்களையும், வாழைகளையும் சூழ்ந்து சேதப்படுத்தியுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரு மாவட்டங்களிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்தனர்.

image

திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட உறைகிணறுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் மோட்டார்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள மேலப்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

image

தூத்துக்குடியில் அதிக பாதிப்பு

குறிப்பாக தூத்துக்குடி நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகர சாலைகளில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

image

மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைபுரண்டோடும் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் புன்னக்காயலை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் சுமார் 1,000 பேர் புன்னக்காயல் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திலும், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் நடைபெறும் விவசாயம் தாமிரபரணி ஆற்றின் கடைசி பகுதி ஆகும். இதில் ஆறுமுகநேரி பகுதியில் மட்டும் 3 குளங்களின் மூலம் சுமார் 1000 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது நாற்றுகள் நடப்பட்டு வயல்கள் பச்சைப்பசேல் என காட்சியளித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால் நெற்பயிர்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி விட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.