வாட்ஸ்அப் நிறுவனம் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், மக்கள் மிகவும் பாதுகாப்பான மெசேஜிங் செயலிக்கு செல்ல விரும்பும் நேரத்தில், சென்னையைத் தளமாகக் கொண்ட மென்பொருள் ஒரு சேவை (சாஸ்) நிறுவனமான ‘ஜோஹோ’ (Zoho) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘பாதுகாப்பான’ மெசேஜிங் செயலி என்ற வாக்குறுதியுடன் ‘அரட்டை’ (Arattai) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ‘அரட்டை’ செயலி தற்போது சோதனை வெளியீட்டின் கீழ் உள்ளது.

சில வாரங்களில் இந்த செயலி முறையாக தொடங்கப்படும் என்று ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ட்வீட் செய்துள்ளார். இருப்பினும், கடந்த சில வாரங்களாக ஊழியர்களுடன் பீட்டா சோதனையில் இருந்த இந்த செயலி, பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் இரண்டிலும் பொது பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது. ஏற்கெனவே 10,000-க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கண்டிருப்பதை Google Play Store காட்டுகிறது. நேற்றைய தினம் இது அப்படியே 20,000-க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை கண்டுள்ளது.

`அரட்டை’ செயலி பயனாளர்களின் தரவை சேகரிக்கிறதா?!

வாட்ஸ்அப் போலவே, சுயவிவரப் பெயர், நாட்டின் குறியீட்டைக் கொண்ட தொலைபேசி எண், முகவரி, பயன்பாட்டுத் தரவு மற்றும் உங்கள் முகவரி புத்தகத்தில் சுயவிவரப் படம் மற்றும் தொடர்புகள் போன்ற பிற விருப்பத் தகவல்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கலாம் என்று அரட்டை மென்பொருள் தரப்பில் கூறப்படுகிறது.

அதேபோல் பயன்பாட்டுத் தரவில் நீங்கள் பயன்படுத்தும் “மொபைல் சாதனத்தின் வகை, உங்கள் மொபைல் சாதனத்தின் தனிப்பட்ட ஐடி, உங்கள் மொபைல் சாதனத்தின் ஐபி முகவரி, உங்கள் மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் பிரௌசர்கள் போன்ற தகவல்கள் இருக்கலாம்” என்று அரட்டை தனியுரிமைக் கொள்கை கூறுகிறது.

image

மெசேஜ்: அரட்டை மெசேஜ் தற்போது end-to-end encrypted செய்யப்படவில்லை. எனினும், இந்த அம்சத்தை சேர்ப்பதற்கான வேலைகள் நடந்துவருவதாகவும், செயலியின் முறையான அறிமுகத்தின்போது அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதன் நிறுவனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

end-to-end encrypted என்பது செயலி மற்றும் சேவை வழங்குநர் அல்லது மூன்றாம் தரப்பினரால் உங்கள் மெசேஜ்களை அணுகவோ, படிக்கவோ முடியாது. end-to-end encrypted-க்கு எடுத்துக்காட்டு, வாட்ஸ்அப் மெசேஜ்கள்.

‘அரட்டை’ உங்கள் தரவை பகிர்ந்து கொள்கிறதா?

பயனரின் முன் அனுமதியின்றி எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும், அது சேகரிக்கும் தகவல்களைப் பகிரவோ வெளியிடவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மேம்பட்ட சேவையை வழங்குவதற்காக நிறுவன பணியாளர்கள் வணிக கூட்டாளர்கள், மறுவிற்பனை கூட்டாளர்கள் மற்றும் செயலி பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள பிற மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் பயனர் தரவைப் பகிர வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இத்தகைய பகிர்வு தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையில் மட்டுமே நிகழ்கிறது மற்றும் பொருத்தமான ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பவர்களுடன் மட்டுமே நிகழ்கிறது. (I) பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க, (ii) எங்கள் பயனர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாத்தல் மற்றும் (iii) மோசடிகளைத் தடுப்பதற்காக, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பினருடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்” என்று தனியுரிமைக் கொள்கை இதனை விரிவாக எடுத்துரைக்கிறது.

image

எவ்வாறாயினும், பயனர்களின் பயன்பாடு தொடர்பாக சேகரிக்கும் தகவல்களை விற்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ இல்லை என்று அரட்டை உறுதி அளித்திருக்கிறது.

மேலும், “செயலி பயன்பாட்டிற்கு பதிவு செய்ய பயனர்கள் அடிப்படை தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டியிருக்கும். தனியுரிமைக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயனரின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த முடிவு செய்தால், அது பயனர்களுக்கு `உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியை வழங்கும்’ என்று அரட்டை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அரட்டை’யில் என்னென்ன அம்சங்கள்?

மற்ற மெசேஜிங் செயலிகளில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் அரட்டையிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், மற்ற பல செயலிகளில் இல்லாத வகையில் குரூப் சாட்டில் 1000 பேரை இணைக்கும் வகையிலும், ஒரே நேரத்தில் ஆறு பேர் வீடியோ கால் செய்யும் வகையிலும் அரட்டை அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நேற்று பதிவிட்ட ட்வீட்டில், `இன்னும் நிறைய அம்சங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். இதனால் கூடுதல் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

அரட்டையின் வலைதளம்: https://www.arattai.in/

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.