உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசியாவில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, மலேசிய மன்னர் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா அந்நாட்டில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறார்.

அவசர நிலை பிரகடனத்தால் அரசின் நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும் என்றும், தொற்று எண்ணிக்கை குறைவதை பொறுத்து அவசர நிலை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூழ்ச்சி?

இந்த அவசரநிலை பிரகடனத்தை மலேசிய எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ள. காரணம், உருமாறிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருப்பதாக மலேசிய பிரதமர் முகைதீன் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தடுக்கும் நோக்கில் அவசரநிலையை வேண்டும் என்றே பிரதமர் முகைதீன் அமல்படுத்தியுள்ளார் என்பது எதிர்க்கட்சிகள் வாதம். கொரோனவை முன்வைத்து பிரதமர் அரசியல் செய்கிறார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

image

மலேசியா முன்னாள் பிரதமர் மஹாதிர் முகம்மத் மகள் மரினா மஹாதீர் “இது அவசரநிலை பிரகடனம் கிடையாது. தோல்வியைப் பிரகடனம் செய்துள்ளனர் பிரதமர் முகைதீன்” என்று கூறியுள்ளார். இதே கருத்தை பல எதிர்க்கட்சித் தலைவர்களும் முன்வைத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மலேசிய அரசியலில் குழப்பமான சூழ்நிலையே நிலவி வருகிறது. பிரதமர் முகைதீன் அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்திலும் போர்க்கொடி தூக்கி வந்தனர். அதற்கேற்றாற்போல், முகைதீன் அரசுக்கு ஆதரவு கொடுத்துவந்த இரண்டு எம்பிக்கள் திடீரென சமீபத்தில் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் முகைதீன் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.