அஜித்தின் ’வலிமை’ படத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளார் என்கிற தகவலை அஜித் தரப்பு மறுத்துள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தினை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். ‘நேர்கொண்ட பார்வை’-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது. ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ‘காலா’ புகழ் ஹீமா குரேஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதன்படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் நடந்துவந்தது. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். தற்போது ராஜஸ்தானில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் தொடர்ந்து வருகின்றன. இப்படத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. சமீபத்தில்கூட வலிமை பட அஜித்தின் பைக் ரேஸ் புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் வலிமை படத்தில் இணைந்துள்ளதாகவும், அவரும் பைக் ரேஸராக வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவல் உண்மையா என்பதை அறிய அஜித்தின் மேனஜெர் சுரேஷ் சந்திராவை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இல்லை. அந்த தகவல் பொய்யானது’ என்று உறுதியாக மறுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM