வரலாறு காணாத மின்வெட்டு… இருளில் மூழ்கிய பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள்!

பாகிஸ்தானின் மின்பகிர்மான முறையில் மிகப்பெரிய கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டின் பல நகரங்கள் நேற்றிரவு இருளில் மூழ்கின.

பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென  மின் தடை ஏற்பட்டது. இதனால், அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான இஸ்லமாபாத், கராச்சி, லாகூர், முல்தான் உள்பட பல நகரங்கள்  நள்ளிரவில் இருளில் மூழ்கின.

மின் தடைக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் ஒமர் ஆயுப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘’தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண்கள் ஐம்பதில் இருந்து திடீரென பூஜ்ஜியத்திற்கு சென்றதே மின்விநியோகம் தடை பட்டதற்கு காரணம். அதிர்வெண்கள் திடீரென சரிந்தது எதனால் என விசாரணை நடக்கிறது. மின் விநியோகத்தை வழங்குவதற்கான மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்”என பதிவிட்டார்.

image

இதற்கிடையே, மின் தடையால் கடும் அவதி அடைந்த பாகிஸ்தானியர்கள் சமூக வலைத்தளங்களில் மின் தடை குறித்து பதிவிட்டனர். இதனால்,   ட்விட்டரில் மின் தடை குறித்த பதிவுகள் ட்ரெண்ட் ஆனது.

பல மணிநேரத்துக்குப்பின் இன்று அதிகாலை முதல் பல்வேறு நகரங்களில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டது. இதுதொடர்பாகவும் மின்துறை அமைச்சர் கான் ட்விட்டரில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM