ட்ரெண்டிங்கில் ‘விருமாண்டி’ ட்ரெயிலர் – பொங்கலுக்கு படம் ஓடிடியில் ரீ-ரிலிஸ்!

கமல் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ‘விருமாண்டி’ திரைப்படம், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் மீண்டும் திரையிடப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்த திரைப்படம்தான், ‘விருமாண்டி’. இப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘விருமாண்டி’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனையொட்டி ‘விருமாண்டி’ படத்தின் ட்ரெயிலர் யூடியூப்பில் நேற்று வெளியானது. தற்போது இந்த ட்ரெயிலர், 6 லட்சம் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘17 வருடங்கள் கழித்து பார்த்தாலும் புதிய படம் போன்ற ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது; விருமாண்டி காலத்திற்கும் பேசப்படும்’ என்று ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM