இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், திடீரென பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்து, குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று முறைப்படி தகவல் சொல்லிவிட்டார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அங்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக அவருடைய இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

போரிஸ் ஜான்சன் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க முடிந்திருந்தால், 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து தலைவர் இந்திய நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட முதல் நிகழ்வாக இது இருந்திருக்கும். ஆனால், அது நடக்க முடியாமல் போயுள்ளது

குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்ட கடைசி இங்கிலாந்து தலைவர், 1993-ல் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் ஆவார். தற்போது வர இயலாமல் போனாலும்கூட, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இறுதியில் ஜி-7 கூட்டத்தில் விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன்பு போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருவார் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது.

போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்தால் தற்போது குடியரசு தின அணிவகுப்புக்கு மாற்று தலைமை விருந்தினரை இந்தியா தேடி வருகிறது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவுக்கு நடப்பது இது முதல்முறை கிடையாது.

image

மன்மோகன் சிங் அரசாங்கம் 2013 குடியரசு தின அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக பங்கேற்க ஓமன் சுல்தானான கபூஸ் பின் சையத் அல் சையத்தை அணுகியிருந்தது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்டவர், பின்னர் முதன்மை விருந்தினராக வர மறுத்துவிட்டார்.

இந்தியாவின் அழைப்பை ஓமன் சுல்தான் நிராகரித்த பின்னர், வெளியுறவு அமைச்சகம் பூட்டான் அரசாங்கத்துடன் இணைந்து மன்னர் ஜிக்மே கேசர் நம்கீல் வாங்சக்கை குடியரசு தின அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக அழைத்தது. குடியரசு தினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பூட்டானுக்கு பயணித்த அப்போதைய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இதற்கான முறையான அழைப்பை வழங்கினார்.

இதேபோல் 2019-ல் குடியரசு தின அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட அமெரிக்கா, பின்னர் மறுத்துவிட்டது. இதன்பின், இந்தியா தென்னாப்பிரிக்க அரசாங்கத்தை அணுகியது. இறுதியில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா குடியரசு தின கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். 1995 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு குடியரசு தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இரண்டாவது தென்னாப்பிரிக்கர் மட்டுமே அவர்.

இது மட்டுமில்லை. 1952, 1953 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் பிரதான விருந்தினர் இல்லாமல் குடியரசு தின அணிவகுப்பு நடந்தது நினைவுகூரத்தக்கது.

தற்போது, கொரோனா பேரிடர் காலம் முடிவுக்கு வராத நிலையில், இந்த ஆண்டும் சிறப்பு விருந்தினர் இல்லாமலேயே குடியரசு தின விழா நடப்பதற்கான சாத்தியமே அதிகம் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால், 55 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு விருந்தினர் இல்லாத குடியரசு தின விழாவாக இது இருக்கும்.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.