சமீப ஆண்டுகளில் விளையாட்டு வீரர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. யுவராஜ் சிங், தோனி, விராட் கோலி உள்ளிட்டோர் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றனர். இதுவரை செய்த முதலீடு எதுவும் பெரிய அளவுக்கு விவாதமாக இருக்கவில்லை. ஆனால், தற்போது கோலியின் முதலீடு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

பெங்களூருவை தலைமையாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் கேலக்டஸ் (Galactus) பன்வேர் டெக்னாலஜி. ஆன்லைன் விளையாட்டு செயலியான மொபைல் பிரீமியல் லீக் (எம்.பி.எல்) இந்த நிறுவனத்தின் ஒரு பிராண்ட். தவிர, எம்பிஎல் நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராகவும் விராட் கோலி இருக்கிறார்.

இந்த நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், இந்த முதலீடு தற்போது செய்யப்பட்டது அல்ல. 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் முதலீடு செய்திருக்கிறார். இந்தச் செய்தி தற்போது வெளியாக, விளையாட்டு – தொழில் துறை சார்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ‘கிட்’ ஸ்பான்சரான Galactus நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், பிசிசிஐ ஸ்பான்ஸராக இருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது’தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

விராட் கோலி 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் முதலீடு செய்கிறார். 2020 ஜனவரியில் பிராண்ட் தூதுவராக இணைகிறார். பிசிசிஐ ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு நவம்பரில் கிடைக்கிறது. ஆண்கள் கிரிக்கெட், பெண்கள் கிரிக்கெட் மற்றும் 19 வயதுக்கு உள்பட்டவருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட் ஸ்பான்ஸராக Galactus நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ரூ.33.32 லட்சத்துக்கு சிசிடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கட்டாயம் பங்குகளாக மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கடன் பத்திரங்களை பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியும். ரூ.48,990 மதிப்பில் 68 பங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

image

தவிர, கார்னர்ஸ்டோன் என்னும் நிறுவனத்துக்கும் 16 லட்ச ரூபாய்க்கு (34 கடன் பத்திரங்கள்) ஒதுக்கப்பட்டிருக்கிறது. கார்னர்ஸ்டோன் நிறுவனம் விளையாட்டு பிரபலங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கே.எல்.ராகுல், சானியா மிர்ஸா, திபிகா பலிலிகல், ஹர்மன்பிரீத் கவுர், ஜஜேடா என பல துறையை சேர்ந்த விளையாட்டு பிரபலங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், விராட் கோலியும் வேறு இரு நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார்கள். அதனால் Galactus நிறுவனத்தில் கார்னர் ஸ்டோன் செய்திருக்கும் முதலீடு சர்ச்சையாகி இருக்கிறது.

கார்னர் ஸ்டோன் நிறுவனத்தின் சஞ்தே கூறும்போது, “நாங்கள் Galactus நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கும் விராட் கோலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் விருப்பப்பட்ட முதலீட்டை நாங்கள் செய்ய முடியும். கோலி விருப்பப்பட்ட முதலீடுகளை அவர் செய்ய முடியும். தவிர, கோலி எங்கள் நிறுவனத்தில் (கார்னர்ஸ்டோன்) முதலீடு செய்யவில்லை” என கூறியிருக்கிறார்.

சில பிசிசிஐ அதிகாரிகள், “கோலி முதலீடு செய்தது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது, தவிர ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் எங்கெல்லாம் முதலீடு செய்கிறார்கள் என்பதை எங்களால் கண்காணிக்க முடியாது” என தெரிவித்திருக்கிறார்கள். மற்றொரு பிசிசிஐ அதிகாரி கூறும்போது, “கோலி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபர், பிசிசிஐ சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யும்பட்சத்தில் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படலாம்” என தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி இதற்கு முன்பும் சில முதலீடுகளை செய்திருக்கிறார். Chisel என்னும் ஜிம் நிறுவனத்தில் ரூ.90 கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார். தவிர, எப்சி கோவா கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்கிறார். இதுதவிர வேறு சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் கணிசமான முதலீட்டை செய்திருக்கிறார். அப்போதெல்லாம் இதுபோன்ற சர்ச்சை எழுந்ததில்லை.

விளையாட்டு வீரர்கள் முதலீடு செய்வதை தடுக்கவோ, குறைகூறவோ முடியாது. ஆனால், முக்கிய பொறுப்புகளில் இருக்கும்பட்சத்தில் அந்த முதலீடு சந்தேகத்துக்கு இடமின்றி இருப்பது அவசியம்.

– வாசு கார்த்தி

தகவல் உறுதுணை: The indian Express

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.