(கோப்பு புகைப்படம்)

ஆன்லைன் ஆப்மூலம் கடன் கொடுத்து கந்துவட்டி வசூலித்த கும்பல், சட்டவிரோதமாக 1,600 சிம்கார்டுகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என அல்லல்படும் நடுத்தர வர்க்கத்தினரிடம், ‘நொடியில் கடன் தொகை வழங்கப்படும்’ என்பதுபோன்ற விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட பலர் ஆன்லைன் லோன் ஆப்-களை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் கடன்பெற்று கந்துவட்டி கும்பலின் வலையில் சிக்கிவிடுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற விவேக், மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதுபோல் மேலும் பலர் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர்.

image

இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்னை காவல்துறைக்கு குவிந்ததால் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை முடுக்கினர். பெங்களூருவில் செயல்படும் ஹிண்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு வைத்து லோன் ஆப்-களை செயல்படுத்தி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகியோரை கைதுசெய்த காவல்துறை, அவர்களுக்கு பின்புலமாக இருந்த சீனாவைச் சேர்ந்த ஷி யமாவோ, வூ யான்லும் ஆகியோரையும் கைது செய்தது. அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியபோது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

image

மேலும் லோன் ஆப்களில் கடன் கொடுப்பது, கந்துவட்டி வசூலிப்பது போன்றவற்றை பெங்களூருவில் கால் சென்டர் அமைத்து தொழிலாகவே செய்து வந்ததும், இந்த தொழிலை சீனாவிலிருந்து ஹாங்க் என்பவர் கண்காணித்து வந்ததும் தெரியவந்தது. அவர் டிங் டாங் என்ற ஆப் மூலம் கண்காணித்து வந்ததாககவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதவிர, ஆன்லைனில் கடன் வாங்குபவர்களின் மொபைல் தகவல்களை திருடுவதற்காக 1,600 சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர். 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களில் ஊழியர்களுக்கான ஆவணங்களை சமர்பித்து மொத்தமாக சிம் கார்டுகளை வாங்கியுள்ளனர்.

image

ஆப்களில் கடன் பெறுபவர்கள் தவணைத் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால், அவர்களது தனிப்பட்ட தகவல்களை திருடி, அதைவைத்து மிரட்டுவதற்கு சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். கடன் பெற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களின் தொலைபேசி எண்களை எடுத்து, அவதூறு பரப்புவதையும் அந்த கும்பல் வாடிக்கையாக கொண்டிருக்கிறது. தற்போது, சிம் கார்டுகளை பெற தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.