கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பஸ் நிலைய நடை பாதையிலேயே பரபரப்பாக ஆன்லைன் தேர்வு எழுதிய பட்டதாரி வாலிபரை பலரும் பாராட்டிச்சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த விழுந்தயம்பலம் என்ற கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அரிசந்திரன் – தங்கம்மாள் தம்பதியரின் இளைய மகன் ரமேஷ் (29). இவரின் இரண்டு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு திருமணமான நிலையில் வறுமை காரணமாக வயதான பெற்றோர் ரமேஷை பன்னிரெட்டாம் வகுப்புவரை படிக்க வைத்துள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ரமேஷ் தமிழ்மொழி மீது கொண்ட பற்றால் தன்னை பி.ஏ., தமிழ் பட்ட படிப்பில் சேர்க்க தனது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்டுள்ளார்.

ஆனால் யாரும் அவர் மேல்படிப்பு படிக்க உதவிசெய்ய முன்வராத நிலையில் தனது நண்பர்களின் உதவி மற்றும் சிறு சிறு வேலைகள் செய்து சேமித்து வைத்திருந்த பணம் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து பி.ஏ தமிழ் மூன்று வருட பட்ட படிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து எம்.ஏ படிக்க போதிய பொருளாதார வசதி இல்லாத நிலையில் மீண்டும் கூலி வேலைக்கே சென்றுள்ளார். குடும்பத்தாரும் கண்டுகொள்ளாத நிலையில் நாடோடி வாழ்கையாக நாட்கள் கடந்து செல்ல, ஓடிஓடி உழைத்து சேமித்த பணத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், அதே கல்லூரியில் எம்.ஏ தமிழ் மேற்படிப்பிற்கு சேர்ந்து படிப்பை தொடர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதலாமாண்டு எம்.ஏ முதல் செமஸ்டரில் கவிதை மற்றும் நாடகம் என்ற பாடப் பிரிவில் தோல்வி அடைந்துள்ளார்.

image

இதனையடுத்து அந்த பாடப் பிரிவை தேர்வு எழுதி வெற்றிபெற முயற்சி செய்தபோது கொரோனா காலகட்டம் தடையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அரியர் தேர்வை ஆன்லைனில் எழுதலாம் என கல்லூரிகள் அறிவித்து, அதற்கான தேதியையும் வெளியிட்டது. இதையறிந்த ரமேஷ் தேர்வு கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும் தன்னிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லாததால் துவண்டுபோன அவர் பலரிடம் உதவி கேட்டுள்ளார். ஆன்லைன் தேர்வு இன்று நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் ஸ்மாட்போன் மற்றும் இணைய வசதிகளுக்காக இன்று தக்கலை வந்த ரமேஷ், மதியம் முட்டைக்காடு பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை தேடி கண்டுபிடித்து அவர் மூலமாக கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்ததோடு தக்கலை பேருந்து நிலைய நடைபாதையிலேயே அமர்ந்து நண்பரின் செல்போன் உதவியுடன் பரபரப்பாக ஆன்லைன் தேர்வை எழுதினார்.

image

இதைக்கண்ட பொதுமக்கள் அவரை வியப்போடு பார்த்து சென்றனர். இதுகுறித்து அவரிடம் கேட்டப்போது ஏழ்மையான குடும்பத்தில் இளைய மகனாக பிறந்த தன்னை படிக்கவைக்க குடும்பத்தார் யாரும் முன்வராத நிலையில் படித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் பி.ஏ பட்டபடிப்பை முடித்ததாகவும், தற்போது எம்.ஏ பட்டபடிப்பை முடித்தவுடன் தமிழில் டாக்ட்ரேட் பட்டம் பெறுவதே தனது நோக்கம் எனவும் ஆதங்கத்துடன் உருக்கமாக தெரிவித்தார். கல்வி செல்வத்திற்காக கஷ்டப்பட்டு பஸ் நிலையத்திலேயே பரபரப்பாக தேற்வு எழுதியை ரமேஷை பலரும் பாராட்டி சென்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.