எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாக இருந்தாலும் அரசாங்கம் நினைத்தால், அது தரைமட்டமாக்கப்படும் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக, சீனாவில் ஒரு மிகப் பெரிய ‘சம்பவம்’ நிகழ்ந்துள்ளது. ஜாக் மா எழுப்பிய ‘அலிபாபா’ என்னும் வர்த்தக சாம்ராஜ்ஜியமும் அப்படித்தான் தற்போது சீன அரசின் நெருக்கடி காரணமாக சிதைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கடந்த அக்டோபர் 24-ல் சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அரசின் வங்கித்துறை தொடர்பாக பொதுவெளியில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் ஜாக் மா.

“சீன நிதித்துறை காலத்துக்கேற்ப புதுமைகளைப் புகுத்த, வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க போதுமான நிறுவனங்கள் எதுவும் இல்லை. சர்வதேச பேசல் குழு வயதானவர்களின் கூடாரமாக இருக்கிறது. அவர்கள் காலத்துக்கேற்ப மாறவேண்டும்” என்று பொதுவெளியில் அவர் விமர்சனம் செய்தார். இங்கிருந்துதான் சீன அரசுக்கும், ஜாக் மாவுக்கு பிரச்னை தொடங்கியது.

image

ஜாக் மாவின் விமர்சனத்துக்கு அடுத்த சில நாட்களில் அலிபாபா நிறுவனத்தில் தலைமையில் இயங்கும் ஆன்ட் (Ant) நிறுவனம் பொதுப் பங்குகளை (ஐ.பிஓ) வெளியிட தீர்மானித்து இருந்தது. ஆனால், விதிமுறையை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அதனை வெளியிடுவதை தடுத்தது சீன அரசு. ஆன்ட் (Ant) வெளியிட இருந்த ஐ.பி.ஓ-வின் மதிப்பு ரூ.3,700 கோடி டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,73,800 கோடி ஆகும். இவ்வளவு பெரிய மதிப்பிலான ஐ.பி.ஓ வெளியாகி இருந்தால், உலக அளவில் மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாக இருந்திருக்கும்.

இதனால், அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பு இந்த ஆண்டு 30 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவை சந்தித்தது. இதேபோல் ஜாக் மாவின் மதிப்பு 11 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது. இதோடு நிற்கவில்லை ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு. மற்றொரு பிரச்னை மூலம் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது.

அலிபாபாவின் மோனோபாலி (Monopoly) கொள்கையில் கை வைத்தது. ‘மோனோபாலி’ கொள்கை என்பது அலிபாபா நிறுவனத்துக்கு பொருள்கள் விற்கும் ஒரு நிறுவனம் அதேபொருளை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முடியாது. அதேபோல், வேறு நிறுவனங்களில் விற்பனை செய்யும் பொருளையும் அலிபாபாவில் விற்க முடியாது. அலிபாபாவின் இந்தக் கொள்கை, அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி, அதற்கு எதிராக சம்மன் அனுப்பியது சீன அரசு.

சீன அரசின் இந்த சம்மன் காரணமாக அலிபாபா பங்கு விலை 9 சதவிகிதம் அளவுக்குச் சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

image

இதற்கிடையே, சீன அரசின் தொடர் நெருக்கடி காரணமாக ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசு நெருக்கடி கொடுக்க தொடங்கிய நவம்பர் மாதத்தில், இளம் தொழில்முனைவோர்களைக் கண்டறியும் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ ஒன்றின் நடுவராக ஜாக் மா பங்கேற்க இருந்தார். எதிர்பார்த்தபடி அவர் அதில் பங்கேற்கவில்லை. மாறாக, அவருக்கு பதில் அலிபாபா நிறுவனத்தின் மற்றொரு உயரதிகாரி பங்கேற்றார். அவர், ஜாக் மா வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ப சென்றிருப்பதால், அவர் வர முடியவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.

ஆனால், அதன் பிறகு ஜாக் மா வெளியில் தலைகாட்டவில்லை. வழக்கமாக இவ்வளவு நாள்கள் ஜாக் மா வெளியில் தென்படாமல் இருந்தது இல்லை. அலிபாபா நிறுவனத்தின் பொறுப்புகளை கவனிக்க வேறு ஒரு அதிகாரி நியமித்த பிறகு சமீப காலமாக அதிகமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார் ஜாக். அப்படிப்பட்டவர் திடீரென இரண்டு மாதங்களாக தலைகாட்டாமல் இருப்பதுதான் சீன மக்கள் மற்றும் உலக தொழில் துறையினர் மத்தியில் சந்தேகம்கொள்ள வைக்கிறது.

image

சர்வதேச வர்த்தக அரங்கில் அலிபாபா மூலம் ஜாக் மா கட்டமைத்திருப்பது சாதாரண சாம்ராஜ்ஜியம் அல்ல. உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த விவகாரத்தில் சீன அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.