“தலைக்கு மேல ஒரு கூரை இருந்தால் போதும்…”, “கொஞ்சம் தூரமா இருந்தா என்ன, சொந்த வீடுதான் பெட்டர்…”, “வாடகை கொடுத்து கஷ்டப்படுறதுக்கு, சொந்தமா ஒரு வீட்டை வாங்கிட்டா நாளைக்கு நம்ம பசங்க அனுபவிப்பாங்க…”, “எப்படியாவது கஷ்டப்பட்டு கடன்பட்டாவது ஒரு வீட்டை மட்டும் வாங்கிட்டா போதும்…” – இப்படி நம் அடிப்படை தேவையில் ஒன்றான வீடு, நமக்கு சொந்தமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்று நம் சமூகம் பல வடிவில் சொல்லி வருக்கிறது.

சொந்த வீடு என்பது நாம் சேர்க்கும் சொத்து மட்டும் அல்ல… இங்கே ‘வீடு’ என்பது மகிழ்ச்சியைக் குறிப்பது; மன நிறைவைத் தருவது. சரி, ‘மகிழ்ச்சி என்றால் என்ன?’ – நம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக சொந்த வீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அவரவர் சக்திக்கு முடியாவிட்டாலும், எப்படியாவது கடன்பட்டாவது சொந்த வீடு வாங்குவது ஒரு கௌரவமாகவும் கருதப்படுகிறது. அந்த கெளரவம் மன நிறைவை தரும் என்பது நம் நம்பிக்கை. உண்மையிலேயே அந்த கெளரவம் நமக்கு மன நிறைவைத் தருகிறதா? அல்லது மன நிறைவில் இருப்பது போல் நம்மை நம்ப வைக்கிறதா?

நாம் அதிகமாக ‘பயன்படுத்தக்கூடிய’ வீடு, நவீன பொருளாதாரக் கோட்பாட்டின்படி மன நிறைவை தரும் ஒரு விஷயமாக அல்லாமல், அதிக பயன்பாட்டை தரக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. மக்கள் விரும்புவதை அடைந்தார்கள் என்றால், அதுவே நல்ல பயன்பாடு என்று நவீன பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், சமத்துவப் பொருளாதார வல்லுநர்களோ, செல்வந்தர்களின் பயன்பாட்டைவிட ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் பயன்பாட்டையே மதிப்பிடுவார்கள். ஆனால், அடிப்படையில் அனைத்துமே மக்கள் விரும்புவதை வழங்குவதைப் பற்றியதே.

image

இந்த தத்துவ அணுகுமுறை உண்மையிலேயே நடைமுறைக்கு பொருந்துமா? இதை விமர்சிக்க நிச்சயமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மக்கள் சிலசமயங்களில் தங்கள் தேர்வுகளை நினைத்து வருத்தப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக ‘தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை, சொந்தவீடு வாங்கியே தீரணும்’ என்று அடம்பிடித்து புறநகர் பகுதிகளில் வீடு வாங்குவதை எடுத்துக்கொள்ளலாம்.

இதன் காரணமாக, தினசரி நீண்ட தூர பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுவது, மகிழ்ச்சிக்கும் பயன்பாட்டிற்கும் இடையில் உள்ள விரிசலுக்கு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். வீட்டுக்கும் வேலைக்குமான நீண்ட பயணங்கள் மகிழ்ச்சியற்ற தன்மையுடன் தொடர்புடையவை என்பதை பொருளாதார வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் கண்டறிந்துள்ளனர். ஆயினும், மக்கள் தொலைதூர புறநகர்ப் பகுதிகளில் வாழ, நிறைய பணம் செலவிடுகிறார்கள். பொருளாதார வல்லுநர் ராபர்ட் எச்.ஃபிராங்க், புறநகர் வாழக்கையுடன் வரும் பெரிய வீடுகளும், அதில் வசிக்கும் மகிழ்ச்சியும் நீண்ட பயண நேரங்களில் தொலைந்துவிடும் என்பதைக் கண்டறிந்துள்ளார்.

மற்றொரு உதாரணமாக, சிகரெட் பிடிப்பவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களில் பலரும் “இன்னைக்கே சிகரெட் பிடிக்கிறதை விட்டுடணும்” என்று நினைப்பதோடு சரி, ஒருபோதும் அதைச் செய்வதில்லை. அவர்கள் தங்கள் முடிவை வேறொரு நாளுக்குத் தள்ளிவைக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து, ‘இன்னும் கொஞ்சம் மனவலிமையுடன் இருந்து புகைப்பிடிப்பதை அன்றே நிறுத்தி இருக்கலாம்” என்று பின்னாளில் வருந்துபவர்களும் உண்டு.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்த சமூகம் எப்போதுமே மனித ஆசைகளுக்கு தீனிபோட வேண்டுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எந்த ஒரு சமுதாயம் தன் மக்களை மகிழ்விக்கின்றதோ, அதுவே நல்ல சமுதாயம் என்று பொருளாதார நிபுணர் பெந்தாமின் ‘பயன்பாட்டுவாதம்’ கருதுகிறது. ஆனால், மக்கள் விரும்பும் விஷயங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால் என்ன செய்வது, மகிழ்ச்சியை எவ்வாறு அளவிடுவது என்பதில் தெளிவான ஒருமித்த கருத்து இல்லை. ஆகவே, இந்த சமூகம் மக்களின் தற்போதைய நிலை பற்றி கவலைப்பட வேண்டுமா அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா?

பொருளாதார வல்லுநர்கள் சிலர் தங்களது ஆராய்ச்சிகளின் மூலம் ‘மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?’ என்று தெரிந்துகொள்ள ‘விரும்பினர்’. அந்த ஆய்வில், மக்கள் மகிழ்ச்சியற்ற சில விஷயங்களைத்தான் இதுநாள் வரை தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களாக நினைத்து செய்து வந்திருப்பது தெரியவந்தது. ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம். இந்த ஆராய்ச்சியில் சில ஆச்சரியமானதும் சிக்கலானதுமான விஷயங்களைக் கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றுதான், உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை மக்கள் பயன்படுத்தும் போக்கு.

மக்களில் சிலரை தன்னார்வலராக வருவதற்கு அணுகியபோது, அவர்களில் பலரும் தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்டை செயலிழக்கச் செய்வதற்கு முன்வரவில்லை. இதற்காக, அவர்களுக்கு சராசரியாக 100 முதல் 180 டாலர்கள் வரையில் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி மக்கள் தங்களின் ஃபேஸ்புக் பயன்பாட்டை ஆய்வுக்காக செயலிழக்கச் செய்தால், தங்களுக்கு அடுத்த ஒன்றிரெண்டு மாதங்களுக்கு மன அழுத்தமும் கவலையும் ஏற்படக்கூடும் என்றே மக்கள் கருதினர். ஆனால், இந்த ஆய்வின் மூலம் வந்த ரிசல்டோ வேறு மாதிரியாக இருந்தது.

இந்த ஆய்வில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், ஒரு பகுதியாக ஃபேஸ்புக்கை செயலிழக்கச் செய்தவர்கள் பின்னர் முன்பைவிட கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதை பொருளாதார வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதை நிறுத்தியவர்கள் முன்பைவிட அதிக அளவு வாழ்க்கை திருப்தியாக இருப்பதாகவும், மனச்சோர்வும் பதற்றமும் குறைந்திருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர்.

image

ஃபேஸ்புக்கை செயலிழக்கச் செய்தால் இவ்வளவு நன்மை இருக்கும் என்றால், மக்கள் தங்கள் மகிழ்ச்சியைக் குறைக்கும் ஒரு விஷயத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

‘லைக்’ வரவில்லை என்றால் ஏற்படும் பதற்றம், ‘யாருக்குமே நம்மை பிடிக்கலையா’ என்ற எண்ணம், நம் போஸ்டுக்கு திட்டித் தீர்த்து கருத்துகள் வந்தால் எப்படி எதிர்கொள்வது? – இதெல்லாம் ஒன்றுமே இல்லாமல் நம் மனம் அமைதியுடன் இருக்க முடியும் என்றால், அது வேண்டாம் என்று நாம் ஏன் ஒதுக்கிவைக்கவோ, பயன்படுத்துவதைத் தவிர்க்கவோ மறுக்கிறோம்?

ஒருவேளை சமூக ஊடகங்கள் ஒரு போதை மருந்துபோல செயல்பட்டு, அதனால் அதிலிருந்து வெளியே வர மக்களுக்கு விருப்பம் இருந்தாலும், வெளியே வர முடியாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் மகிழ்ச்சியைத் தேடுவதைத் தவிர, வேறு உந்துதல்களால் கட்டாயப்படுத்தப்பட்டு, அதைத் தேடவே ஃபேஸ்புக் போன்ற சேவைகளைப் பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, பயன்பாட்டை அடிப்படையாக கொண்ட விஷயங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தராது.

எனவே, பயன்பாட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க சமூகம் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் செய்ய விரும்பாத விஷயங்களை, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று நினைத்து செய்யத் தூண்டுவது அரசின் வேலையா, நிறுவனங்களின் வேலையா அல்லது பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்கும் விதமா?

எல்லாவற்றையும் ஆய்வுகளின் மூலம் கண்டறிவது கஷ்டம்தான். இவை எல்லாம் உண்மையா என்று நினைத்தால், நிச்சயம் உண்மையே. இத்தகைய ஆய்வுகள், மக்கள் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதை அவர்களின் கலாசார எதிர்பார்ப்புகளோடு பிரதிபலிப்பவையாகும். மகிழ்ச்சியை அளவிட கடினமாக இருப்பதால்தான் மகிழ்ச்சிக்கும் பயன்பாட்டிற்கும் இடையிலான தொடர்பை வெறுமனே நிராகரிப்பதும் விவேகமற்றது. ஒரு சமூகம் மக்களின் மகிழ்ச்சியைக் கூட்டுவதற்கு தவறான வழிகளைக் காட்டுகிறது என்றால், அது கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை. இதை அரசு மட்டுமே சரி செய்யவேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் அது முடியாது.

உதாரணமாக, எவ்வளவுதான் சொன்னாலும் கேட்காத சில ‘மர’மண்டைகளுக்கு ஹெல்மெட் தேவை இல்லை என்று அரசு அப்படியே விட்டுவிடாது. இயன்றவரை விழிப்புணர்வு, இல்லாவிட்டால் தண்டனை என்கிற அணுகுமுறையை அரசு கையாளும். ஆனாலும்கூட சிலர் ஹெல்மெட் அணியாமல் உலவுவதைப் பார்க்கலாம். உண்மையிலேயே ஹெல்மேட் அணிந்தால் நமக்குதான் பாதுகாப்பு என்பது உரைக்கவேண்டும்.

அதுபோலவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் செய்யும் எல்லா விஷயத்திற்கும் அடுத்தவர்களின் அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்துதான் நிறைய கற்றுக்கொள்கின்றனர். ஓர் ஆரயோக்கியமான நாளைய சமுதாயம் உருவாக வேண்டுமென்றால், உங்கள் பிள்ளைகள் அவர்களாவே இருப்பது மிகவும் முக்கியம். முதலில் அவர்கள் தங்களின் சுயத்தை அங்கீகரிக்க கற்றுக்கொடுங்கள். சுய அங்கீகாரமும், சுயநலமும், சுயமதிப்பீடும் வேறு வேறு என்பதையும் உணருங்கள்.

மனிதர்கள் மாறுபட்டவர்கள். இதை முதலில் புரிந்துகொண்டு வாழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்கும். மகிழ்ச்சி என்பது அடுத்தவர்களின் அங்கீகாரத்திற்கு ஏங்குவது அல்ல; மகழ்ச்சி என்பது தன் சுயத்தை மதித்து, தவறு செய்வது இயல்பான மனித குணம் என்பதை புரிந்த்துக்கொள்வதாகும். செய்த தவறை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், அந்த செயல்முறையில் தன்னம்பிக்கை குறையாமல் தளர்வடையாமல் இருப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இக்கரைக்கு அக்கரை பச்சைதான். எனவே, வாழும் வாழ்க்கையை பிறருக்காக இல்லாமல், உங்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கள். உங்கள் தனித்துவம் எவ்வளவு சிறந்ததோ, அதேபோல்தான் மற்றவர்களின் தனித்துவமும் என்று புரிந்துகொள்ள கற்றுக்கொடுங்கள். தன் வாழக்கையை மற்றவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல், அவர்களின் அங்கீகாரத்திற்கும், அதில் வரும் வீணான கௌரவத்திற்கும் ஏங்காமல் உண்மையான மன நிறைவுடன் வாழுங்கள், வாழக் கற்றுக்கொடுங்கள். மகிழ்ச்சி வசப்படும்.

மகிழ்ச்சி வசப்படுவதற்கு ஃபேஸ்புக் போன்றவற்றை துறக்க வேண்டும் என்பது அல்ல விஷயம். அந்த ஆய்வு சொல்ல வருவது, நாம் மகிழ்ச்சி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது மகிழ்ச்சி அல்ல என்பதை சுட்டிக் காட்டுவதற்கான உதாரணம் மட்டுமே. ஒருவர் ஃபேஸ்புக்கில் லைக்குகளை தினம் தினம் அள்ள முற்படுவதும், சொந்தமாக வீடு வாங்குவதற்கு ஒப்பான மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதான். இங்கே கெளரவம்தான் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதாகக் கருதுகிறோம். ‘ஊரு கண்ணு படக் கூடாது’ என்று என்னும் அதே மக்கள்தான் ஊரே பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் அடிக்கடி டிபி மாற்றுகிறது. அதற்கு வரும் லைக், கமெண்ட்ஸ் மட்டுமின்றி, ஹார்ட் சிம்பல் ஏதோ அல்கரிதம் பிரச்னையால் குறைந்துவிட்டால்கூட இதுவரை இருந்து வந்த மகிழ்ச்சி பறந்துபோய்விடும் சாத்தியம் அதிகம். சரியான நிதி திட்டமிடல் இல்லாமல், சொந்த வீடு வாங்குகிறேன் என்ற பெயரில் வாழ்நாள் முழுவதும் இஎம்ஐ கட்டுவதற்காக மட்டுமே வேலை செய்து வாழ்க்கையைத் தொலைக்கும் போக்கும் இப்படியானதுதான்.

ஆம், நாம் ஃபேஸ்புக்கிலும் இருக்கணும்; சொந்த வீடும் வாங்கணும்… இதிலெல்லாம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த மாதிரியான விஷயங்களை எப்படி அணுகுவது, எப்படிப் பயன்படுத்துவது என்பதில்தான் உங்களின் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது என்பதையும் மனதில்கொள்ளுங்கள்.

– முனைவர் தமிழ்செல்வி

தகவல் உறுதுணை: Bloomberg

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.