‘லவ் ஜிஹாத்’ சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள், ஊழியர்கள் என 224 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
`லவ் ஜிஹாத்’துக்கு எதிராக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் சட்டங்கள் இயற்றியுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் 28-ம் தேதி முதல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. சட்டம் நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்தில் இரண்டு வழக்குகளும், 9 நாட்கள் ஆன நிலையில் 56 வழக்குகள் பதிவாகியது. மேலும், மணப்பெண் உள்ளிட்ட வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் கொடுக்கப்படும் புகாரின் கீழ் கைது நடவடிக்கை செய்யப்படுவதாக யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம் உத்தரப் பிரதேச அரசின் ‘லவ் ஜிஹாத்’ சட்டம் மிகவும் ஆபத்தானது எனக் கூறி ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் என முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் 104 பேர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி இருந்தனர். அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய இந்த சட்டம் ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில், மாநிலத்தை “வெறுப்பு, பிளவு மற்றும் மதவெறி அரசியலின் மையமாக” மாற்றிவிட்டது, போன்ற கடுமையான வாதங்கள் மற்றும் கருத்துக்களை கொண்டு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அரசு ஊழியர்கள், மேலும் அந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி யோகியை வலியுறுத்தி இருந்தனர்.
இந்த 104 பேரில் முக்கியமாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் மற்றும் பிரதமரின் முன்னாள் ஆலோசகர் டி.கே.ஏ நாயர் உள்ளிட்ட முன்னாள் அரசு ஊழியர்கள் “சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இவர்களின் கடிதத்துக்கு யோகி அரசு இதுவரை எந்த பதிலும் தராமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது லவ் ஜிஹாத் சட்டத்துக்கு ஆதரவாக 224 முன்னாள் அரசு ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பல்வேறு உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் என மொத்தம் 224 அரசு ஊழியர்கள் இணைந்து சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யோகிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் இந்த 224 பேரும் கையெழுத்திட்டத்துடன் இந்திய ஜனநாயகம் மீதான தங்கள் நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM