மெக்ஸிகோவில் தனது காதலியின் வீட்டிற்கு, தனது வீட்டிலிருந்து சுரங்கப்பாதை அமைத்த திருமணமான நபர், அந்த காதலியின் கணவரால் பிடிபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மெக்ஸிகோவை சேர்ந்தவர் ஆல்பர்டோ. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது காதலி வில்லாஸ் டெல் பிராடோவின் டிஜுவானா பகுதியில் வசித்துவருகிறார். அவருக்கும் வேறொரு நபருடன் திருமணம் ஆகிவிட்டது. தனது திருமணமான காதலியின் இல்லத்திற்குச் செல்வதற்கு தன் வீட்டிலிருந்து ஒரு நீண்ட சுரங்கத்தை தோண்டியுள்ளார் ஆல்பர்டோ. இந்த சுரங்கப்பாதை வழியாக ஆல்பர்டோ, தன் காதலியின் கணவர் ஜார்ஜ் வீட்டில் இல்லாதபோது அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த ஜோடி யாருக்கும் தெரியாமல் இப்படி பல நாட்கள் சந்தித்து வந்துள்ளனர். ஆனால் ஒரு நாள், ஜார்ஜ் வழக்கத்தை விட முன்னதாகவே வீட்டிற்கு வந்ததால் இந்த ஜோடியை கையும் களவுமாக பிடித்தார்.
இந்த ஜோடி சிக்கியபோது, ஆல்பர்டோ ஒரு சோபாவின் பின்னால் மறைவதைக் கண்டார், மேலும் அவர் அந்த இடத்தில் தேடியபோது தனது வீட்டின் படுக்கைக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை துளை இருப்பதைக் கவனித்தார். பின்னர் அவர் சுரங்கப்பாதை வழியாக செல்லும்போது, அது அவரை ஆல்பர்டோவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றது.
இந்த சுரங்கப்பாதையின் அளவு மற்றும் நீளம் உள்ளூர் ஊடகங்களால் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், நுழைவாயிலின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. ஜார்ஜ் சுரங்கப்பாதை வழியாக தன்னுடைய வீட்டை அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஆல்பர்டோ. அவர் இந்த விவகாரத்தை தனது மனைவியிடமிருந்து மறைக்க முயன்று, ஜார்ஜை வீட்டை விட்டு வெளியேறும்படி அவரிடம் கெஞ்சினார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மோதலால் இந்த பிரச்னையில் காவல்துறை தலையிடும் சூழல் உருவானது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM