பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை அடுத்த வாரம் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு எந்த ஒரு கொரோனா தடுப்பூசிக்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. ஃபைசர், சீரம், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் அவசரத் தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளன. மூன்று நிறுவனங்களும் அளித்த தரவுகளை மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அமரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை அடுத்த வாரம் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது தடுப்பூசி நிர்வகிப்பதற்கான கடைசி கட்டம்தான் ஒத்திகை.
பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை நடைபெற உள்ளது. இதற்காக கோ-வின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஒத்திகை எதற்கென்றால், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்லும் போது ஏற்படும் சிக்கல்களை களைவதற்காகவே. இதற்காக மருத்துவக்குழுவினருக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த நாடு முழுவதும் மாவட்ட அளவில் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களை கொண்டு ஒத்திகை பார்க்கும் போது ஏற்படும் பிரச்னைகளை புரிந்து கொள்வதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
ஒத்திகையின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் கோ-வின் செயலி மூலம் ஆன்லைனில் கண்காணிக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மற்றும் ஷகீத் பகத்சிங் நகர் ஆகிய மாவட்டங்களில் ஒத்திகை நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் முதல் கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள், 50 வயதுக்கும் அதிகமானவர்கள், இணை நோய் இருக்கும் 50 வயதுக்கும் குறைவானவர்களுக்கு செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM