இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டுக்கான விமான சேவைக்கு தற்காலிகத் தடை உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அதன் முழு விவரம்:
> இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் நாளை (டிசம்பர் 22) முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். புதிய வடிவில் கொரோனா தொற்று ஒரு சில நாடுகளில் பரவி வருவதையடுத்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
> இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் வரும் 31-ஆம் தேதி இரவு 23:59 வரை தடை விதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடை 22-ஆம் தேதி இரவு 23:59 மணியிலிருந்து அமலுக்கு வரும். எனினும், சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் போக்குவரத்துத் துறை இயக்குனரகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது.
> மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள், இங்கிலாந்திலிருந்து பயணிகள் யாரையும் நம் நாட்டிற்கு அழைத்து வரக்கூடாது.
> இங்கிலாந்திலிருந்து இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயணிகள் அழைத்து வரப்படவில்லை என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
> முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களின் (ஏற்கனவே புறப்பட்ட விமானங்கள், 22ஆம் தேதி இரவு 23:59 மணிக்குள் இந்தியாவிற்கு வரும் விமானங்கள்) பயணிகளையும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கான மருத்துவ செலவுகளை ஏற்க வேண்டும்.
> இதனிடையே, ஜனவரி 5-ஆம் தேதி வரை, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மும்பை மற்றும் மாநிலத்தின் அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை தடைவிதித்துள்ள நிலையில், இங்கிலாந்து தவிர வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தோ இந்தியா வரும் பயணிகள் 14 நாள்கள் அரசின் மையத்தில் தனிமைப்படுத்தபடுவார்கள், மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களும் இதேபோன்ற வீட்டுத் தனிமைப்படுத்தலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வ உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
PT Web Explainer: புதிய வகை கொரோனா வைரஸின் வீரியம் எத்தகையது?
முன்னதாக, இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸின் தொற்றும் தன்மை ஏற்கெனவே பரவி வைரஸை விட 70% அதிகம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் பெரும் அச்சம் எழுந்து கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 30 வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு யு.கே முழுவதுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது.
புதிய வகை கோரோனா வைரஸைப் பொறுத்தவரையில், இது பரவும் வேகம் அதிகம் என்பது அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டாலும், இந்த வகை வைரஸின் தாக்கத்தால் மனித உயிருக்கு அதிக அச்சுறுத்தல் இருக்கிறதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM