இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 1947 முதல் சுமார் 73 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை சுமார் 12 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று முறை தொடரை சமன் செய்துள்ளது. கடந்த 2018 – 19 தொடரை மட்டுமே இந்தியா முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதனை படைத்திருந்தது. 

image

நூற்றாண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த கிரிக்கெட் வரலாற்றை கொஞ்சம் புரட்டுவோம்…

1947 – 48

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு கடந்த  1947இல் பயணம் மேற்கொண்டது. அது தான் ஆஸ்திரேலிய கண்டத்திற்கு இந்திய அணி மேற்கொண்ட முதல் பயணமும் கூட. இந்திய அணியை லாலா அமர்நாத் கேப்டனாக வழிநடத்தினார். ஆஸ்திரேலியாவிற்கு பிராட்மேன் கேப்டன். 0 – 4 என இந்தியா தொடரை இழந்து திரும்பியது. 

1967 – 68

பட்டோடி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த முறை வெற்றி வாய்ப்பை அப்படியே ஆஸ்திரேலியாவிடம் கொடுத்து விடாமல் முடிந்தவரை மோதி பார்த்தது இந்தியா. இருப்பினும் தொடரை 0 – 4 என இந்தியா இழந்தது. 

image

1977 – 78 

பிஷன் பேடி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. வாங்கிய அடியை திருப்பி கொடுக்கும் வகையில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. ஆஸ்திரேலிய மண்ணில் 1978 புத்தாண்டு பரிசாக இந்திய அணி முதல் வெற்றியை சுவைத்தது. குண்டப்பா விஸ்வநாத் 473 ரன்களும், கேப்டன் பேடி 31 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். இருப்பினும் தொடரை 2 – 3 என்ற கணக்கில் இழந்தது. 

1980 – 81 

கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி 1 – 1 என தொடரை சமன் செய்தது. 

1985 – 86

கபில் தேவ் தலைமையில் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி 0 – 0 என தொடரை சமன் செய்தது. கவாஸ்கர் இந்த தொடரில் அதிகபட்ச ரன்களை (356) குவித்த பேட்ஸ்மேன் ஆனார். 

image

1991 – 92 

அசாருதீன் தலைமையில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் அறிமுகமானார். மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் வார்னே அறிமுகமானார். இந்தியாவுக்காக சச்சின் 368 ரன்களை குவித்தார். மூன்றாவது போட்டியில் ரவி சாஸ்திரியின் இரட்டை சதத்தால் இந்தியா போட்டியை சமனில் முடித்தது. இருப்பினும் தொடரை 0 – 4 என இழந்தது. 

1999 – 2000 

சச்சின் தலைமையில் இந்திய அணி 0 – 3 என மூன்று போட்டிகளையும் இழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்புயல் பிரட் லீ அறிமுகமானார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

2003 – 04 

கங்குலி தலைமையிலான இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 1 என சமன் செய்தது. டிராவிட், ஷேவாக், லக்ஷ்மணன் என இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் கும்ப்ளே 24 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தி இருந்தார். 

image

2007 – 08 

அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 1 – 2 என தொடரை இழந்தது. மங்கி கேட் சர்ச்சையும் இந்த தொடரின் போது வெடித்தது. 

2011 – 12

தோனி தலைமையிலான இந்திய அணி 0 – 4 என தொடரை முற்றிலுமாக இழந்தது. இதில் இரண்டு போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றிருந்தது. 

image

2014 – 15 

கோலி மற்றும் தோனி என நான்கு போட்டிகள் இருவரும் தலா இரண்டு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தினர். தோனி இந்த தொடரின் பாதியில் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார். அதானல் கோலி முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடரை 0 – 2 என இந்தியா இழந்தது. 

2018 – 19 

கோலி தலைமையில் இந்திய அணி நான்கு போட்டிகளில் விளையாடியது. முதல் போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது போட்டியை இந்தியாவும், நான்காவது போட்டி சாமானிலும் முடிந்தது. அதனால் வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. வழக்கமாக இந்திய  அணியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை கொடுப்பர். ஆனால் பவுலிங்கில் (வேகப்பந்து வீச்சு) இந்தியா சொதப்பி விடும். ஆனால் அது போல இல்லாமல் பும்ரா, ஷமி, இஷாந்த் என பவுலர்கள் ஒரு கலக்கு  கலக்கி இருந்தனர். அது இந்தியாவின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தது. 

image

2020 – 21 

கோலி மற்றும் ரஹானே தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இந்த வெற்றியை தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடரட்டும்…

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.