“நாங்கள் எந்த பள்ளியை சேதப்படுத்தினோமோ அதனை மீண்டும் உருவாக்க வேண்டும் என நினைத்தோம். எங்கள் பிள்ளைகளுக்கு கல்வி மிக முக்கியம் என நினைக்கிறோம்” என்று வேதனையுடனும், உருக்கமாகவும் கூறினார் ஆயுதவழியை கைவிட்டு திருந்தி வாழ நினைத்த அந்த மாவோயிஸ்ட்.

இந்தியாவில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீகார், ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் தாக்கம் அதிக அளவில் காணப்படுவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுத வழிப்போராட்டத்தை பின்பற்றும் மாவோயிஸ்ட்கள் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்துவதோடு, ரயில்வே தண்டவாளங்கள், சாலைகளை சேதப்படுத்துவது, பாலங்களை தகர்ப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால், பல நேரங்களில் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

image

அப்படித்தான், சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஆரம்பநிலைப் பள்ளி ஒன்றினை மாவோயிஸ்டுகள் இரண்டு முறை இடித்து தரைமட்டமாக்கி இருந்தனர். இதனால், பள்ளியை நம்பி இருந்த ஏராளமான குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏற்கெனவே குக்கிராமத்தில் இருந்த அந்தப் பள்ளி நீண்ட தூரத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பள்ளி புனரமைக்கப்பட்டு அழகிய வண்ணங்கள் தீட்டப்பட்ட நிலையில் மாணவர்களின் வருகைக்காக தயார் நிலையில் உள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், எந்த மாவோயிஸ்டுகள் அந்தப் பள்ளியை சேதப்படுத்தினார்களோ அவர்களே ஒன்றிணைந்து அதனை சீரமைத்து கொடுத்ததுதான் ஹைலைட்.

ஆயுத வழிப்போராட்டத்தை கைவிட்டு திருந்தி வாழ நினைக்கும் மாவோயிஸ்டுகளுக்காக மத்திய அரசு சில திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் தண்டேவாடா மாவட்டத்தில் ஆயுத வழிப்போராட்டத்தை கைவிட்டு சரணடைந்த மாவோயிஸ்டுகள் சிலர் திருந்தி வாழ நினைத்ததோடு அர்த்தமுள்ள வகையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நினைத்தார்கள். அவர்களுக்கு போலீசார், மாவட்ட நிர்வாகமும் தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள மசபாரா கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி இந்த மாவோயிஸ்டுகளால் 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இடித்து சேதப்படுத்தப்பட்டது. சரணடைந்த மாவோயிஸ்டுகள் சிலர் அந்தப் பள்ளியை சீரமைக்க நினைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சரணடைந்த மாவோயிஸ்ட் சந்து குஞ்சம் டைம் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “ஆயுதங்களை கைவிட்ட பிறகு, எங்களால் அடைந்த சேதங்களை நாங்கள் கவனிக்க ஆரம்பித்தோம். எங்களால் சேதம் அடைந்த பள்ளியை மீண்டும் சீரமைக்க அந்த கிராமத்தினர் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தனர். மாவட்ட நிர்வாகமும் எங்களது ஒத்துழைப்பு அளித்ததால் 3 மாதங்களில் பள்ளியை தயார் செய்துள்ளோம். இப்போது எங்கள் பிள்ளைகளை நாங்கள் பள்ளிக்கு அனுப்புவோம். இப்பகுதியில் சாலைகள் வேண்டும் என்பதை உணர்கிறோம். குழந்தைகளுக்கு கல்வியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் தேவை. இந்த வளர்ச்சி எல்லாம் எங்கள் பங்களிப்புடன் நிச்சயம் நிறைவேறும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இதுகுறித்து பேசிய தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா, “பெண்கள் உள்ளிட்ட 18 கிளர்ச்சியாளர்கள் ‘நாங்கள் வீட்டிற்கு திரும்புவோம்‘ முகாம் மூலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி சரணடைந்தார்கள். அவர்கள் குழுவாக செயல்பட்டு சாலைகள், ரயில்வே தண்டவாளங்களை சேதப்படுத்தி வந்தவர்கள். தற்போது அந்த சேதங்களை எல்லாம் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வேண்டும் என நினைக்கிறார்கள் நாங்கள் அவர்களின் மறுவாழ்விற்கு உதவிட விரும்புகிறோம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.