ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கப் பெண்போல பழகி ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தாமரை குளம் அருகே உள்ள இரட்டையூரணி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவஹரி. இவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் இரண்டு பேரும் ஃபேஸ்புக் தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்கப் பெண் கிளாரா தனது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்துவிட்டதாகவும் அறுவை சிகிச்சைக்கு உரிய தொகை செலுத்தவேண்டும் என்பதால் அதனை தந்து உதவினால்தான் சென்னைக்கு வரும்போது கட்டாயம் திருப்பி தந்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சிவஹரி அவர் கூறியபடி ஆகஸ்டு 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நான்கு தவணைகளில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்தை ஆன்லைன் பரிவர்த்தனைமூலம் கிளாரா தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது ஃபேஸ்புக் இணைப்பை துண்டித்து விட்டார் அந்தப் பெண்.

image

இதனையடுத்து அந்த பெண், தன்னிடம் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளதை உணர்ந்த சிவஹரி இதுகுறித்து டிஜிபி அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் உத்தரவின்படி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் உண்மையில் அமெரிக்காவில் இருந்து பேசினாரா அல்லது அமெரிக்காவில் இருந்து பேசுவதுபோல ஏமாற்றி உள்ளாரா என விசாரித்து வருகின்றனர். அந்த பெண் வழங்கிய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது.

வெளிநாட்டில் பணிபுரியும் ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் அமெரிக்கப் பெண்போல பழகி ஃபேஸ்புக் மூலம் நிதி மோசடி செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.