ஹரியானா கிராமத்திலிருந்து தினமும் பால், கலிபோர்னியாவைச் சேர்ந்த சகோதரர்கள் அனுப்பும் பாதாம், போராட்டக்காரர்களின் சொந்த ஊர்களிலிருந்து வரும் உணவுப் பொருள்கள், என்.ஆர்.ஐ.க்கள், நில உரிமையாளர்கள் உதவிகள், இவற்றுக்கெல்லாம் மேலாக பாஜக பிரமுகர்கள் சிலரிடமிருந்து கிடைக்கும் உதவிகள்… இவையெல்லாம்தான் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்க காரணமாக இருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

image

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான தகவல் வெளியானபோது, ஜூன் மாதத்தில் பஞ்சாப், ஹரியானாவில் 10 உழவர் சங்கங்கள் அதை எதிர்த்து போராடத் தொடங்கின. செப்டம்பர் மாதத்திற்குள் இந்தப் போராட்டத்தில் 31 அமைப்புகள் இணைந்தன. இந்த அமைப்புகள்தான் தற்போது டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் ட்ராலிகளில் டெல்லியின் எல்லைகளுக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். வருகிறவர்கள் அனைவரும் பல மாதங்கள் தங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டே வருகின்றனர்.

image

இவர்களுக்காக போராட்டக் களத்தில் நாள் முழுவதும் அடுப்புகள் எரிந்துகொண்டே இருக்கின்றன. எந்தநேரமும் ஏதோ ஒன்று சமைக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப்பின் லங்கர் எனப்படும் கூட்டு சமையல் மூலம் தேவைக்கேற்ப உணவு சமைக்கப்பட்டு, போராடும் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கே இருந்து நிதி கிடைக்கிறது என்று நாம் ஒருமுறையாவது யோசித்திருப்போம். அதற்கு, விடை கொடுக்கிறது தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள். பெரும்பாலும், போராட வரும் விவசாயிகளே தங்களுக்கு தேவையானவற்றை கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு அவர்களின் கிராமம், சங்கத்தின் மூலமாகவும் உதவிகள் கிடைக்கின்றன. ஆனால் இதையெல்லாம் தாண்டி விவசாயிகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்து வருவதே அவர்களின் போராட்டத்தை இவ்வளவு நாட்கள் உயிர்ப்புடன் வைத்துள்ளது எனலாம்.

ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தின் ஃபுலான் கிராமத்தில் கிராம மக்கள் தங்கள் பசுவில் இருந்து பால் கறந்து கொண்டு வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள், 50 லிட்டர் சேகரிக்கப்பட்டு ஒரு வாகனத்தில் குண்ட்லி எல்லைக்கு அனுப்பப்படுகிறது. இதேபோல், இந்தக் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 35 கிராமங்களில் தினசரி 2,000 லிட்டருக்கும் அதிகமான பால் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் குண்ட்லி எல்லை வரை அனுப்பப்படுகிறது. இந்த குண்ட்லி எல்லையில்தான் ஹரியானா மாநில விவசாயிகள் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். போராட்டம் நடந்துவரும் இந்த 14 நாட்களும் தினமும் காலையில் இந்த பால் அனுப்பப்பட்டு வருகிறது.

image

குண்ட்லியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள லாகியன் கிராமத்தில் விவசாயி ப்ரார் என்பவர், ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் விவசாயிகளுக்கான நிதியை திரட்டி வருகிறார். என்.ஆர்.ஐ.க்கள், நில உரிமையாளர்கள் என பலர் அவரின் அமைப்பின் மூலம் விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களால் முடிந்த உதவியை கொடுத்து வருகின்றனர். இதில், இன்னொரு ஆச்சர்யமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், பாஜகவின் தலைவர்கள் சிலர்கூட விவசாயிகளின் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரிக்க முடியாத நிலையில், இந்த அமைப்புக்கு மறைமுகமாக நிதியுதவி கொடுத்துள்ளனர் என்கிறார் அந்த விவசாயி. இந்த அமைப்பின் மூலம் கிடைத்த பணத்தில், போராட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு எரிபொருள் வாங்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தங்கியுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த டட் சகோதரர்கள் டெல்லி எல்லையில் தங்கியுள்ள விவசாயிகளுக்கு பாதாம் அனுப்பி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளனர் அந்த சகோதரர்கள். இதுவரை 20 குவிண்டால் பாதாமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக அனுப்பியுள்ளனர். பஞ்சாப்பின் பதிந்தா பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பெட்ரோல் பம்ப் உரிமையாளர், போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்லும், விவசாயிகளுக்கு இலவசமாக எரிபொருள் அளித்து வருகிறார்.

சில டிராக்டர்கள் டெல்லி செல்லும் வழியில் கோளாறு ஆகி நின்றுவிட்டால், அதை உடனடியாக சரி செய்து அவர்களை போராட்டக் களத்துக்கு அனுப்பி வருகிறது ஒரு மெக்கானிக் டீம். இதற்காக சில மெக்கானிக் கடைக்காரர்கள் தங்கள் வேலைகளையும் விட்டுவிட்டு டெல்லி – பஞ்சாப் நெடுஞ்சாலைகளில் சுற்றி வருகின்றனர். ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த கின்னோ விவசாயிகள் விவசாயிகளுக்கு இலவசமாக பழங்களை வழங்குகிறார்கள், சில பெரிய விவசாயிகள் குவிண்டால் கணக்கில் சமையலுக்கு தேவையான கேரட் போன்ற காய்கறிகளை அனுப்பி வருகிறார்கள். பஞ்சாப் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று, தேவையான அரிசிகளை அனுப்பி வருகிறது.

லூதியானா தொழிலதிபர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு நோய் வாய்ப்பட்டிருக்கும் நபர்களுக்காக இரண்டு முறை மருந்து பொருள்களை வாங்கி அனுப்பி வருகின்றனர். இதுபோக விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையானவை கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன. முடிந்தவரை தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் நிதி, உணவு பொருட்களை திரட்டி வருகின்றனர். விவசாயிகள், அவர்களுக்கு உதவுபவர்கள் உட்பட அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான். அது சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்பதே. அது நீக்கப்படுமா என்பது மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவிலேயே தெரியவரும்.

தகவல் உறுதுணை: The Indian Express

தொடர்புடைய செய்திக் கட்டுரை > விவசாயிகளின் போராட்ட வியூகங்கள்: மோடி அரசு திணற 5 காரணங்கள்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.