பழம்பெரும் குணச்சித்திர நடிகரான எஸ்.வி.சுப்பையாவின் நூற்றாண்டு விழா கொண்டாப்படும் நிலையில், அதனை நினைவு கூறும் வகையில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிவகுமார் பேசியுள்ளனர். 

தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் முக்கியமானவர் எஸ்.வி.சுப்பையா. நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுப்பையாவுக்கு சிறு வயதிலிருந்தே கலைத்துறையின் மீது தீராக் காதல். அதன் விளைவு டி.கே.எஸ். நாடகசபா, சக்தி நாடகசபா உள்ளிட்டவற்றில் தன்னை இணைத்துக்கொண்டு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகக் கலையில் கிடைத்த பெயர் அவரை சினிமாவுக்கு அழைத்துச் சென்றது.

image

1952 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான அவர் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். எஸ்.பாலசந்தர், பானுமதி நடித்த ‘ராணி’ மற்றும் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சுப்பையாவுக்கு ஜெமினிகணேசன் அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ படம் திருப்பு முனையாக அமைந்தது. அப்படத்தில் சுப்பையாவுக்கு கிடைத்த வரவேற்பு, திரையுலகின் முன்னணி நாயகர்களான சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தந்தது.

image

குறிப்பாக சிவாஜி கணேசனுடன் எஸ்.வி.சுப்பையா இணைந்து நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்டப் படங்கள் பிரபலமடைந்தன. `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜிகணேசன் வ.உ.சிதம்பரனாராக நடிக்க, எஸ்.வி.சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார். இந்தக் கதாப்பத்திரம் சுப்பையாவுக்கு பெறும் புகழை பெற்றுத்தந்தது.

image

அதே போல எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ‘சவுபாக்கியவதி’ உள்ளிட்டப்படங்களிலும், நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் நடித்துள்ளார். 1955-ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் சகஸ்ரநாமம், டி.எஸ்.துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோருடன் சுப்பையா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்.வி.சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்.’எஸ்.வி.சுப்பையா, சவுகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில், கவுரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதற்கு பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் கதை வசனம் எழுதினார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கோமதி அம்மாளை திருமணம் செய்து கொண்ட சுப்பையாவுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர்.

நாடக கலைஞராக அறிமுகமாகி அசைக்கமுடியாத குணச்சித்திர நடிகராக வலம் வந்த சுப்பையா 1980 ஆம் ஆண்டு தனது 57 வயதில் காலமானார். சொல்லத்தான் நினைக்கிறேன்,மணிப்பயல், இதயக்கனி, யாருக்கு சொந்தம், வணக்கத்துக்குரிய காதலியே, களத்தூர் கண்ணம்மா, மங்கையர் திலகம் உள்ளிட்ட 90 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சுப்பையாவின் நூற்றாண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை நினைவு கூறும் வண்ணம் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிவக்குமார் பேசிய வீடியோக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.