ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கத்தின் உயிர் மூச்சாகவும், அதிமுக தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதா மானுட வாழ்வில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக கட்சி கடந்து வந்த பாதையை இந்தச் செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு, திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் பலன் எட்டாமல் டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழத்தொடங்கின. ஜெயலலிதா மறைவிற்குபின் உட்கட்சி பிரச்னை பூதாகரமாக வெடித்ததால், மூன்றே மாதங்களில் தன்னுடைய முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

image

அதிமுக நிர்வாகிகளால் பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். பின்னர் அதிமுக இரண்டாக ஆக உடைந்தது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. இரட்டை இலையும் முடக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனி இயக்கம் தொடங்கி நாள்தோறும் தொண்டர்களை சந்தித்து வந்தார். அதன் பின்னர் ஓபிஎஸ் ராஜினாமாவைத் தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்பார் என்றிருந்த சூழ்நிலையில் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

image

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில், நீதிமன்ற தீர்ப்பில் சசிகலா சிறைசெல்ல வேண்டிய சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைகோரும் தீர்மானத்தில் வெற்றிபெற்று பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் 36 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நிகழாத காட்சிகள் எல்லாம் அவர் மறைந்த 3 மாதங்களில் அதிமுகவில் அரங்கேறின. இரண்டாக உடைந்த அதிமுக மீண்டும் ஒன்றாகி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதலமைச்சராகவும் ஓபிஎஸ் பொறுப்பேற்றார். இரட்டை இலையும் மீட்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியல் களத்தில் கட்சிகளின் காட்சி மாற்றத்தோடு 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தமிழகம் சந்தித்தது.

image

அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி கண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. ஓராண்டுகால அமைதிக்குபிறகு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கிளம்பியது. ஒரு மாதம் நீடித்த சர்ச்சைக்கு முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பி.எஸ்.

image

ஜெயலலிதா மறைவிற்கு பின் பல்வேறு ஏற்ற இறக்கங்களை அதிமுக சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4 ஆண்டுகளாக ஆட்சி செயல்பட்டு வரும் நிலையில், அவரை முன்னிறுத்தியே அடுத்த ஆண்டிற்கான சட்டப்பேரவை பொதுத்தேர்லை சந்திக்க இருக்கிறது அதிமுக.

– செய்தியாளர் ஸ்டாலின் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.