கடல் சீற்றம் காரணமாக 6 அடி முதல் 7 அடி வரை எழும்பும் கடல் அலைகளால் கரைப் பகுதியில் பத்து மீட்டருக்கும் அப்பால் தண்ணீர் வந்து செல்வதால் நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக, தொடர்ந்து மழைபெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய பெய்த மழையால், நாகைப் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக நம்பியார் நகரை சுற்றி கடல் நீருடன் மழைநீர் சூழ்ந்ததினால் மீனவ கிராமம் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. 6 முதல் 7 அடி உயரத்துக்கு கடலில் அலை எழுந்து, கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. நிவர் மற்றும் புரெவி புயல்கள் அச்சுறுத்தலால், நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்றிலும், கடற்கரைப் பகுதிகளிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். புதிய கடற்கரையில் கடல்நீர் உட்புகுந்ததால் பெரிய ஏரிபோல காணப்படுகிறது.
மேலும் கடல் அலை கரையை தாண்டி அடித்ததால், அதிலிருந்து கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் கரைப் பகுதிக்கு வந்துள்ளது.நாகை நகராட்சிக்கு உட்பட்ட வெளிப்பாளையம் பகுதியின் மழைநீர் வடிகால், புதிய நம்பியார் நகர் பகுதியில் உள்ள கடலில் கலக்கிறது. இந்த நிலையில் அலையின் சீற்றம் காரணமாக கடல் நீர் கரைப் பகுதியில் 10 மீட்டருக்கு மேல் வந்துசெல்வதோடு அங்கு தேங்கியுள்ளதால், வெளிப்பாளையம் பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல்சீற்றம் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் வடிய வைக்க முடியாமல் இயந்திரங்கள் திரும்பி சென்றது. இதனால் நம்பியார் நகர் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாகையில் 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பில் இரு வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பல்வேறு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM