வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடுவது குறித்த உறுதியான முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்து இருந்தார். இத்தகைய நிலையில்தான், வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அத்துடன், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என்றும் அந்த ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ரஜினி அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், “ரஜினி சிறந்த நடிகர். அவர் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். அரசியலில் எதுவும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ரஜினி கூறிய கருத்துக்களை கேட்டுவிட்டு பின்னர் பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM