மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிரமடைந்துள்ள டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு நடிகர் விவேக் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார். ‘நேரடியாகவே ஆதரிக்கலாமே’ என்று அவருக்கு நெட்டிசன்கள் பதிலளித்துள்ளனர்.

டெல்லியில் விவசாயிகள் போராடிவரும் நிலையில், “தினமும் உணவு உண்ணும்போதும், அதை விளைவித்தவரை, நன்றியோடு நினைத்தல் வேண்டும்” என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

image

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ’சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்ற குறளைப் பகிர்ந்து ’தினமும் உணவு உண்ணும் போதும் அதை விளைவித்தவரை, நன்றியோடு நினைத்தல் வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். அந்தக் குறளின் விளக்கம் ”பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது” என்பதாகும்.

image 


இந்நிலையில், விவேக்கின் ட்விட்டிற்கு ’மறைமுகமாக விவசாயிகளுக்கு ஆதரவு தருவதற்கு பதில் நேரடியாகவே டேக் போட்டு தெரிவிக்கலாமே அண்ணே?’ என்று உரிமையுடன் விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

சின்ன கலைவாணர் என்று திரையுலகினரால் அழைக்கப்படும் விவேக் நகைச்சுவையோடு சமூக சிந்தனையுள்ள கருத்துகளையும் துணிச்சலுடன் வெளிப்படுத்துபவர். ஏற்கெனவே, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் வழிகாட்டுதலில் தமிழகம் முழுக்க மரக்கன்றுகளை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட சமூக சிந்தனையுள்ள விவேக், விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிப்படையாகவே, ஆதரவளித்திருக்கலாம் என்று பலரும் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.