கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் சிங்கப்பூரில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது, மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயதான பெண் செலின் ஜான். இவர் கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். இதன்பின் நாடு திரும்பிய இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோது, செலின் கருவுற்று 10 வாரங்கள் ஆகி இருந்தார். இதில் இருந்து அவர் குணமாகிய நிலையில், சில நாள்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

image

அந்தக் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போகினர். குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததே மருத்துவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம்.

செலினிடமிருந்து நோய் எதிர்ப்பாற்றல் குழந்தைக்கும் சென்றிருக்கும் என்று மருத்துவர்கள் யூகிக்கின்றனர். இதுவரை, கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பதற்கு சரியான விடை கிடைக்காமல் இருந்து வந்தது.

அதேபோல், கருப்பையைச் சுற்றியுள்ள திரவத்திலோ அல்லது தாய்ப்பாலிலோ இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதாக கடந்த அக்டோபரில் சீனா தெரிவித்திருந்தது.

இதற்கு எடுத்துக்காட்டாக செலினின் குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கொரோனா தொற்று தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

image

இதற்கிடையே, குழந்தைக்கு, அல்ட்ரின் எனப் பெயர் சூட்டியுள்ள செலின் தனது சந்தோஷத்தை பிபிசிக்கு பகிர்ந்துள்ளார். அதில், “மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பா சுற்றுப்பயணம் சென்று வந்தேன். மீண்டும் நாடு திரும்பியபோதுதான் கொரோனா பாதிப்பு எனக்கு கண்டறியப்பட்டது. என்னுடன் ஐரோப்பா வந்த என் கணவருக்கும், தந்தைக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் எனக்கு என் தாய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனக்கு பாதிப்பு உறுதி ஆனபோது நான் 10 வார கருவுற்றிருந்தேன்.

கருவில் உள்ள குழந்தைக்குக் கொரோனா வைரஸ் பரவாது என்பதை முன்பே நான் படித்திருந்தேன். அதனால் நான் பயம் கொள்ளவில்லை. எனக்கு முன்பாக சிங்கப்பூரில் நடாஷா, பீலே என்ற தம்பதியினர் இதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டபோது நடாஷா கர்ப்பம் தரித்திருந்தார். அதுவும், கருவுற்ற 36வது வாரத்தில் நடாஷாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஒருவேளை சிங்கப்பூரில் வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியுடன் சிங்கப்பூரில் பிறந்த முதல் குழந்தை அதுவாக இருக்கலாம்.

இதனால் என் மனதில் பயம் ஏற்படவில்லை. நான் தைரியத்துடன் குழந்தைப் பேறுக்கு சென்றேன். ஏற்கெனவே எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த முறை எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என்னுடன் பிறந்த மூன்று சகோதர்கள் உடன் நானும் ஆணுக்கு நிகராய் வளர்ந்ததால் எனக்கு இந்த ஆசை வந்தது.

கொரோனா பாதிப்பு இருந்தாலும் நான் தாய்மை அடைந்த காலமும், குழந்தைப் பிறப்பும் சுமூகமாகவே இருந்தன. எனது ஆசை மகனை நல்லவிதமாக பெற்றெடுத்ததில் பெரும் மகிழ்ச்சி” என்று நெகிழ்கிறார் செலின்.

செலினின் பிரசவமும் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தையும் மருத்துவத்துறையில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறியுள்ள மருத்துவர்கள், இது தொடர்பான ஆய்வுகளில் இறங்க உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.