ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தல் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு!

ஹைதராபாத் மாநகராட்சி மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட பெரிய மாநகராட்சி. இந்த மாநகராட்சிக்கு தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில், பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், பிரதான கட்சிகளான சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி, பாஜக, ஓவைசியின் எ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) ஆகியவை இடையேதான் கடும் போட்டி எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, பாஜக – ஓவைசி கட்சி இடையேயான வார்த்தைப் போர்தான் இந்தத் தேர்தல் களத்தை ரணகளமாக்கியுள்ளது.

ஓவைசியையும், அவரது கட்சியையும் குறிப்பிட்டு நேரடித் தாக்குதல் நடத்தி வருகின்றனர் பாஜகவினர். ஹைதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜகவின் ‘இளைஞர் முகம்’ என அறியப்படுகிற தேஜஸ்வி சூர்யா, “ஒவைசிக்கு வாக்களிப்பது முகமது அலி ஜின்னாவிற்கு அளிக்கப்பட்ட வாக்கு போன்றது. அவரை இங்கு தோற்கடிப்பது முக்கியம்” என்று குறிவைத்து பேசினார்.

இதேபோல் நேற்று ஹைதராபாத் வந்த அமித் ஷா, “அடுத்த ஹைதராபாத் மேயர் பாஜகவைச் சேர்ந்தவர்தான் வருவார். தெலங்கானா ராஸ்டிர சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகியவற்றுக்கு இடையே ஓர் அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி நிலவி வருகிறது. பாஜகவுக்கு வாய்ப்பளியுங்கள். ஹைதராபாத்தை நிஜாம் நவாப் கலாசாரத்திலிருந்து விடுவித்து காட்டுகிறோம். மேலும் பன்முகத்தன்மைகொண்ட சின்ன இந்தியாவை இங்கு உருவாக்குவோம்” என்றார்.

தெலங்கானா பாஜக தலைவர் சஞ்சய், ”பாகிஸ்தான், ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர். நகராட்சி தேர்தலில் பாஜக மேயர் பதவியில் வெற்றி பெற்றால், `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மூலம் ரோஹிங்கியாக்கள் மற்றும் பாகிஸ்தானியர்களை விரட்டப்படுவார்கள்” என்றும் பேசினார்.

image

இப்படி, ஓவைசியை குறித்து ஜின்னா, ரோஹிங்கியாக்கள், பாகிஸ்தானியர் என்றும் நடக்கவிருக்கும் தேர்தல் ஹைதராபாத் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றும் பாஜகவினர் பேசி அதிரவைத்தனர். ஆனால், இதற்கு பதில் கொடுத்த ஓவைசி, “பாஜக இனவாத பதற்றத்தைக் கிளப்ப முயற்சிக்கிறது. ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக உங்கள் கட்சி கூறினால், செகந்திராபாத் எம்.பி.யும் உங்கள் அமைச்சரவையில் உள்ள அமைச்சரும் திறமையற்றவர் என்பதை நிரூபித்துள்ளனர் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். பாகிஸ்தானியர்களையும் ரோஹிங்கியாக்களையும் சட்டவிரோதமாக ஹைதராபாத்தில் தங்க அனுமதித்ததற்காக அவர் தனது ராஜினாமாவை வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர் “இது மாநகராட்சித் தேர்தல்போல் தெரியவில்லை. பிரதமர் மோடிக்கு பதிலாக புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நடக்கும் தேர்தல்போல் இருக்கிறது. இன்னும் பாஜகவுக்கு ட்ரம்ப் மட்டும்தான் பிரசாரத்துக்கு வரவில்லை” என்று விமர்சித்தார்.

அவர் சொல்லியதுபோல், இந்தத் தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்று பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, தமிழகத்தின் வானதி சீனிவாசன் என பாஜக படையே ஹைதராபாத் தேர்தலுக்காக அங்கேயே மையம் கொண்டிருந்தனர். பிரதமர் மோடி மட்டும்தான் பாஜவுக்காக பிரச்சாரம் செய்யவில்லை.

இதைவிட, ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பொறுப்பாளராக பிரதமர் மோடி, அமித் ஷாவின் நம்பிக்கை பெற்ற புபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டார். மேலும், இந்தத் தேர்தலுக்காக தனி தேர்தல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது பாஜக.

image

பெயர் மாற்ற சர்ச்சை!

இதற்கிடையே, யோகி ஆதித்யநாத் ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்தபோது, ஹைதராபாத் பெயரை `பாக்யா நகர்’ என்று மாற்ற வேண்டும் என்று கொளுத்தி போட்டார். இந்தப் பிரச்னைக்கு ஆரம்ப புள்ளி வைத்தவர் தேஜஸ்வி சூர்யா. இவர் ட்விட்டரில் கோரிக்கை வைத்தபோதே நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும், `பாக்யா நகர்’ பெயர் மாற்றம் தொடர்பாக பேசப்பட்டது. இதே கருத்தை யோகி ஆத்யநாத்தும் பேசினார். மேலும் ஹைதராபாத்தை ஆளும் அரசை கடுமையாக குற்றம் சுமத்தி இருந்தார்.

ஆனால், “தரவரிசையில் 28-வது இடத்தில் பின்நோக்கி இருக்கும் உ.பி முதல்வர் யோகி 5 இடத்தில் முன்னேறி இருக்கும் என் மாநிலத்திற்கு பாடம் நடத்த தேவையில்லை” என்று பதிலடி கொடுத்து இருக்கிறார் சந்திரசேகர ராவ்.

தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் நாளை மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். 4-ம் தேதி முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.