சாலைகளில் திரண்ட மாரடோனா ரசிகர்கள் – கால்பந்து நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி

மாரடைப்பால் உயிரிழந்த அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான மாரடோனாவின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

image

கால்பந்து நட்சத்திரம் டிகோ மாரடோனா மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவையொட்டி அர்ஜெண்டினாவில் 3நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. அர்ஜெண்டினா தலைநகர் பியுனஸ் அயர்ஸில் உள்ள அதிபர் மாளிகையில் மாரடோனாவின் உடல் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கூடிய லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். மாரடோனாவின் மறைவை ஏற்கமுடியாத அவர்கள் அழுது புழம்பிய காட்சிகள் காண்போரை நெகிழ செய்தது. அதேபோல் ரசிகர் ஒருவர் பாடல் பாடி மாரடோனாவிற்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

image

மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிபர் மாளிகை முன் ஒரு மைல் தூரத்திற்கு ரசிகர்கள் வரிசையில் நின்றனர். சிலர் விதிகளை மீறியதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர், ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

image

இதேபோல் மாரடோனாவின் உடல் கல்லறைக்கு கொண்டு செல்லும் வழி நெடுகிலும் திரண்ட ரசிகர்கள், “ஜாம்பவான் மறையவில்லை எங்கள் மனதில் வாழ்கிறார்” என கரதோஷத்துடன் முழக்கமிட்டனர். ரசிகர் ஒருவர் சிக்னல் மேல் அமர்ந்தபடி மாரடோனா உடலை காண முயற்சித்தார். தங்கள் தேசத்தின் ஹீரோவை இழந்துவிட்டோம் என்றும் அவரது ரசிகர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிட்டு, மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

image

படங்கள் நன்றி : REUTERS, AP

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM