கேரள ‘ஹீரோ’, மேற்கு வங்க ‘ஐகான்’… மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்?!

மாரடோனா மறைவுக்கு இரண்டு நாட்கள் துக்கம் கடைபிடிக்கிறது கேரள அரசு. மேற்கு வங்கமும் மாரடோனா மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. இரு மாநிலங்களும் மாரடோனாவைக் கொண்டாடுவதன் பின்புலம்தான் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்!

 கேரள மக்களின் சமூக வலைதள பதிவுகள் அனைத்துமே மாரனோடவுக்கான RIP மெசஜ்தான். மக்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் தங்களது ஆஸ்தான நாயகனை இழந்து தவிப்பதாக மாரடோனாவுக்காக உருகுகின்றனர்.

 கேரளாவைப்போலவே மேற்கு வங்கமும் மாரடோனா மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. கங்குலி, “எனது ஹீரோ இனி இல்லை” என்று வேதனை தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும், தங்களது சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

image

 இவற்றில், ஒரு ட்வீட் தனித்து நின்றது: “பெங்காலும் கேரளாவும் நாடுகளாக இருந்தால், அவற்றின் கொடிகள் இன்று அரைக்கம்பத்தில் பறக்கும்.”

 இந்தப் பதிவை அந்த மனிதர் கற்பனையாக போட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் சொன்னதுபோல பெங்காலும் கேரளாவும் தனி நாடுகளாக இருந்ததால் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுசரித்திருப்பார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் மாரடோனாவை ஹீரோவாக பார்க்கிறது. கால்பந்து அந்த மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளது.

1986 ஃபிஃபா உலகக் கோப்பையில் டியாகோ மாரடோனாவின் இங்கிலாந்துக்கு எதிராக `கடவுளின் கையின் உதவி’யால் அடிக்கப்பட்ட கோல் கேரளா, மேற்கு வங்கம் முழுவதும் கருப்பு – வெள்ளை தொலைக்காட்சித் திரைகளில் பூரணமாக ஒளிபரப்பப்பட்டது. மாரடோனாவுக்கும் இந்த மாநிலங்களுக்கும் உள்ள மற்றொரு கனெக்‌ஷன், கம்யூனிசம். மாரடோனா சே குவாராவின் தீவிர ரசிகர். பிடல் காஸ்ட்ரோவின் அன்பைப் பெற்றவர்.

image

 இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்கெல்லாம் ஆண்டனவோ, அங்கெல்லாம் கால்பந்தையும் கையோடு அழைத்து வந்திருக்கின்றன. சே-வைப்போல ஓர் அடையாளமாக. அது, அம்மாநில மக்களின் வாழ்வியலோடு இயைந்த ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. கேரளாவில் எங்கு போனாலும் கால்பந்து விளையாடுபவர்களைப் பார்க்கலாம். இது ஒன்று போதும் இம்மக்கள் ஏன் மாரடோனாவை ரசிக்கிறார்கள் என்பதற்கு.

அர்ஜென்டினா தலைநகர் பினோ ஏர்ஸ்ஸில் எப்படி ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாரடோனா நம்பிக்கையாக இருக்கிறாரோ, அதே அளவு இந்த மாநில இளைஞர்களுக்கும் மாரடோனா ஒருவரே ‘நம்பிக்கை’. தங்கள் ஹீரோ மாரடோனாவின் நீல மற்றும் வெள்ளை ஜெர்சிகளில் அணிந்துகொண்டு இளைஞர்கள் கால்பந்து விளையாடும் காட்சிகளை இன்றளவும் கேரளத்தின் அனைத்து பகுதிகளிலும் பார்க்கலாம்.

 2012-ல் கண்ணூருக்கு விஜயம் செய்தபோது மாரடோனா வசித்த ஹோட்டல் ரூம் தற்போது அருங்காட்சியாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அவர் பயன்படுத்திய சிகரெட் துண்டுகள் உட்பட அனைத்தும் கண்ணாடி பெட்டிகளில் பாதுகாக்கப்படுகின்றன. கண்ணூருக்கு அவர் வந்தபோது கேரள மக்கள்அவருக்கு கொடுத்த வரவேற்பு சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்தது.

மாரடோனா இந்தியா வந்தது அப்போது மட்டுமல்ல, 2008ல் மேற்கு வங்கத்துக்கும் வந்திருக்கிறார். அங்கு வந்தபோதும் அவருக்கு வரவேற்பு ஏகபோகமாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, மாரடோனாவை தனது வீட்டுக்கே அழைத்து கௌரவித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கொல்கத்தாவில் 12 அடி உயர மாரடோனா சிலையை அவராலேயே திறக்கப்பட்டது. 

image

 கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் மாரடோனா இந்த அளவுக்கு புகழ்பெற்றதுக்கு கம்யூனிச கோட்டைகள் காரணம் என்பதில் சந்தேகமில்லை. கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பன்னியன் ரவீந்திரன் கால்பந்து குறித்த மூன்று புத்தகங்களை எழுதியவர். ‘தி நியூஸ் மினிட்’ தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இதை மிகவும் பொருத்தமாக, “கால்பந்து என்பது ஏழைகளின் விளையாட்டு. இது ஒரு பந்து மற்றும் 22 பேர். கம்யூனிசம் என்பது ஏழைகளின் பிரச்னைகள் பற்றியது” என்று கூறி இருப்பார்.

 இதேதான் மாரடோனாவின் மனதிலும் இருந்திருக்கிறது. கம்யூனிசக் கொள்கைகளில் பற்றுகொண்டவர் மாரடோனா. ஏழ்மைப் பின்னணியில் இருந்து இளம் வீரர்களை எப்போதும் ஊக்கப்படுத்துவார் அவர். ஏழ்மை இளைஞர்களின் நிதி பற்றாக்குறையைவிட அவர்களின் சொந்தத் திறமையை நம்பும்படி செய்தவர். இதனால்தான் அவர் போற்றப்படுகிறார்.

மாரடோனா, புரட்சியாளர் சே குவாரா மீதான பிரியத்தால் காரணமாக கையில் அவரையும், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவையும் இடது காலிலும் பச்சை குத்தி இருக்கிறார். மேலும், மாரடோனாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று அவர் எப்போதும் நினைவுகூர்வது, ஃபிடல் காஸ்ட்ரோ உடனான சந்திப்பைதான்.

மாரடோனா பிடல் காஸ்ட்ரோவை சந்தித்த நாளில் பின்வருமாறு கூறினார்: “அவரைச் சந்திப்பது என் கைகளால் வானத்தைத் தொடுவது போன்றது. அவர் எனக்காக என்ன செய்தார் என்பது விவரிக்க முடியாதது. கடவுளுடன் சேர்த்து நான் உயிருடன் இருப்பதற்கு அவர்தான் காரணம்.”

 பிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினமான நவம்பர் 25 ல் தான் மரடோனாவின் இறுதிமூச்சும் நின்றிருக்கிறது! 

– மலையரசு

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM