தட்கல் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் ஒரு செயலியை உருவாக்கியவதற்காக, திருப்பூரைச் சேர்ந்த யுவராஜா (வயது 35) என்பவரை, ‘சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததாக’ கூறி ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

image

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.யுவராஜா. தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர். கணினி கோடிங் முறையை தேர்ந்தவர். படிப்பிலும் சிறந்து விளங்கிய அவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தனது கிராமத்திலேயே முதல் பொறியாளராக உயர்ந்தவர். இதே பேரார்வம் தொடர, கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) முதுகலைப் படிப்பை முடித்து, பெங்களூருவில் உள்ள ஒரு ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

பின்னர் அவர் 2014-இல் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க தனது வேலையை விட்டுவிட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ துறையில் கவனத்தை செலுத்தினார். ‘எந்த விஷயத்துல பிராப்ளம்னாலும், அதை சால்வ் பண்றதுல தீவிரமா இருப்பேன்’ என்று கூறும் யுவராஜா, இந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் சிறையில் தான் அடைக்கப்படுவோம் என்றும், தனது வாழ்க்கையே பிரச்னைக்குள்ளாகும் என்றும் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

image

“நான் வீட்டில் இருந்தபோது திடீரென ரயில்வே போலீசார் வந்து, ‘சூப்பர் தட்கல், சூப்பர் தட்கல் புரோ’ ஆகிய மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கினீர்களா?’ என்று கேட்டபோது, நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அவர்கள் உடனடியாக என்னைக் கைது செய்ய விரும்பினர். நான் செய்தது சட்டவிரோதமானது என்றும், ரயில்வே சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் சொன்னார்கள்” என்று கூறும் யுவராஜா, நீதித்துறை ரிமாண்டில் கைது செய்யப்பட்ட பின்னர், ஒரு வாரம் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வழக்கமாக நிரப்பப்பட்ட தரவை சேமிக்க பயனர்களை அவர்கள் அனுமதித்தனர். அதற்கு பதிலாக யுவராஜா உருவாக்கிய ஆப்பில் தரவை சேமித்தால், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயனர்கள் நேரடியாக விவரங்களை வலைதளத்திற்கு மாற்றமுடியும். 

“சுருக்கமாக, அவை தானாக நிரப்பும் பயன்பாடுகளாக இருந்தன, நான் முதலில் இதை எனது சொந்த வசதிக்காக உருவாக்கினேன். 2014 ஆம் ஆண்டில், எனது குடும்பம் திருப்பூரில் வசித்து வந்தபோது, நான் திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் வசித்து வந்தேன். ஆகவே, நான் தொடர்ந்து வீட்டிற்கு வர ரயிலில் சென்று கொண்டிருந்தேன். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் ரொம்ப மெதுவானது,  மிகவும் சிக்கலானது என்பதை நான் உணர்ந்தபோதுதான், இந்த அப்ளிகேஷனை உருவாக்கினேன். மிகவும் அடிப்படை மாடலில் உருவாக்கிய எனது ஆப், டிக்கெட் புக்கிங்கை விரைவாகச் செய்வதற்காகப் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆரம்பத்தில் இதில் குறைபாடுகள் இருந்தன. ஆனால். நான் அதைச் சரிசெய்து நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ள பகிர்ந்துகொண்டேன்” என்று விவரிக்கிறார்.

“என்னைப் போலவே நாடு முழுவதும் மக்கள் ரயில்வே ஆப் மூலம் சிரமங்களை சந்திக்கின்றனர். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது ரொம்பவே தாமதமாகின்றன. மக்கள் அனைவருமே பயன்பெறுவதற்காகவே நான் உருவாக்கிய ஆப்பை மக்கள் பயன்பாட்டுக்காக மாற்றினேன்” என்கிறார் யுவராஜா.

image

“எனது அப்ளிகேஷனை கூகுள் பிளேஸ்டோரில் இலவசமாக பதிவேற்ற முடிவு செய்தேன். அப்ளிகேஷனை பயன்படுத்த நான் யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. நான் உதவ முயற்சித்தேன். ஆனால், பயனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியபோது, சேவையகங்களின் பராமரிப்பு செலவு மாதத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அதிகரித்தது. நான் நன்கொடை கேட்க முயற்சித்தேன், ஆனால் யாரும் எதுவும் கொடுக்கவில்லை. ஆகவே, பெருகிவரும் செலவுகளை சமாளிக்க பயனர்களிடம்  குறைந்தபட்சம் கட்டணம் வசூலிக்க வேண்டியிருந்தது.

எனது அப்ளிகேஷன் ஐ.ஆர்.சி.டி.சியால் செயல்படுத்தப்பட்ட எந்த கேப்ட்சா அமைப்புகளையும் புறக்கணிக்காது. மேலும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவிய உள்ளார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் எதையும் புறக்கணிக்காது. முன்பே சேமிக்கப்பட்ட பயணிகள் விவரங்களை தானாக நிரப்புவதே இதன் செயல்பாடு” என்று கூறும் யுவராஜா தனது ஆப் மூலம் முதல் மூன்று முன்பதிவுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு முன்பதிவுக்கும் ரூ.10 பயனாளர்களிடம் இருந்து வசூலித்துள்ளார். அவரது பயனர் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் ஏழு லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் ரயில்வேயின் செய்திக் குறிப்பில், “தட்கல் டிக்கெட் ஆப் மோசடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுவராஜா மோசடி மூலம் பணம் திரட்டி வந்திருக்கிறார். விசாரணையின்போது, அவர் 2016 முதல் 2020 வரை ரூ.20 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக ஒப்புக் கொண்டார். குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு ரயில்வே சட்டத்தின் பிரிவு 143 (2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யுவராஜா போன்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ (ஏரோநாட்டிகல்) மற்றும் ஐ.ஐ.டி கரக்பூரிலிருந்து எம் டெக் (ஏரோஸ்பேஸ்) போன்ற உயர் படிப்புகள் படித்த நபர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது வருத்தமளிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

சாதாரண விவசாயி குடும்பத்திலிருந்து வந்து, கல்வியால் தொழில்நுட்ப நிபுணராக சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்த யுவராஜாவுக்கு கைது நடவடிக்கை, ரயில்வேயின் அறிக்கை, அதைத் தொடர்ந்து வந்த ஊடகங்களின் கவனம் ஆகியவை புதிதாக அமைந்தது. சிறையில் இருந்து வெளிவந்த பின் `தி நியூஸ் மினிட்’ தளத்துக்கு பேட்டியளித்த யுவராஜா, “நான் கோயம்புத்தூரில் உள்ள ஒரு சிறையில் அமர்ந்திருந்தபோது எனது கல்வி, எனது விருதுகள், எனது பணி மற்றும் மக்களுக்கு உதவ நான் செய்த முயற்சி ஆகியவை என்னை கைது செய்வதிலிருந்து காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்தேன். 

என் வாழ்நாள் முழுவதும், என் கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை கடினமாக உழைத்து என்னைப் போல ஆகச் சொன்னார்கள். மற்றவர்களுக்கு உதவுவதற்காக நான் சிறையில் இருந்தேன். ரயில்வே காவல்துறையினர் என்னைக் கைது செய்யவந்தபோது, எனது விளக்கத்தைக் கூட கேட்கவில்லை. நான் ஒரு குற்றவாளி என்று அவர்கள் ஏற்கனவே கருதினார்கள்” என வேதனை தெரிவித்து இருக்கிறார். 

image

 (photo –The News Minute)                                                                                

இதுபோன்ற ஆப் சட்டவிரோதமா?!

ரயில்வே சட்டம், 1989 இன் படி, பிரிவு 143 ‘ரயில்வே ஊழியர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அல்லாத நபர்களால் ரயில் டிக்கெட்டுகளை வாங்குவதற்கும் வழங்குவதற்கும் அங்கீகரிக்கப்படாத வணிகத்தை மேற்கொள்வது குற்றம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தண்டனை மூன்று ஆண்டுகள் வரை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும். 

“எந்தவொரு ஆப் மூலமாக மோசடி மற்றும் சிலரை விதிகளுக்கு புறம்பாக டிக்கெட்டுகளை விரைவாக எடுக்க உதவுவது சட்டவிரோதமானது. இந்திய ரயில்வே அனைத்து மண்டலங்கள் மற்றும் வேலைத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கிறது. பயணிகளை வைத்து சில ஆப்களுடன் மோசடி செய்வதற்கும், ஆப் பயன்படுத்துவதற்கான கட்டணம் வசூலிப்பதற்கும் நிச்சயமாக நியாயமில்லை, எனவே ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ரயில்வே குறிப்பிடுகிறது.

ஆனால், இணையம் மற்றும் சமூகத்திற்கான மையத்தின் கொள்கை இயக்குநர் பிரனேஷ் பிரகாஷ், “ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளவற்றின் அடிப்படையிலும், பொதுவில் கிடைக்கக்கூடியவற்றின் அடிப்படையிலும் ஆப் டெவலப்பர் எந்தச் சட்டத்தையும் மீறியதாகக் கூறப்படுவதை நான் காணவில்லை. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயல்முறையை இந்த ஆப் விரைவாகவும் குறைவான பிழைகள் நிறைந்ததாகவும் ஆக்குகிறது. பிரௌசர்களில் ஏற்கெனவே கிடைத்துள்ள “ஆட்டோ ஃபில்” போன்ற அம்சங்களைப் போன்ற முறைதான் இதுவும். 

டெவலப்பர் இந்த ஆப் மூலம் பணம் சம்பாதிக்க முயன்றது பொருத்தமற்றது. ஏனெனில் பணம் சம்பாதிப்பது ஒரு குற்றம் அல்ல, பயனர்கள் சார்பாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாதபோது ஒரு பயன்பாட்டிற்கு பணம் செலுத்துமாறு மக்களைக் கேட்பது அவரை ஒரு டிக்கெட் முகவராக ஆக்குகிறது, ஆனால் பயனர்கள் தங்கள் சொந்த பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விரைவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மட்டுமே உதவுகிறது. அதனால் ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் காவல்துறையினர் செய்திருப்பது கொடூரமானது. யுவராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கலை நீதிமன்றங்கள் ஈடுசெய்கின்றன. மென்பொருள் உருவாக்குநர்களை ஐ.ஆர்.சி.டி.சி மீண்டும் துன்புறுத்தாமல் இருப்பதை இது உறுதிசெய்கிறது என்றும் நம்புகிறேன்” என விளக்கியுள்ளார்.

இதற்கிடையில், ஆப்பை கூகுள் ஸ்டோரில் பதிவேற்றும்போது சட்ட சிக்கல்களுக்கான சாத்தியத்தை கவனிக்கவில்லை என்று யுவராஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவர் சேவைகளை இழுத்துச் செல்வதை உறுதி செய்ய ரயில்வேயின் ஓர் எளிய எச்சரிக்கை போதுமானதாக இருந்திருக்கும் என்று கூறுகிறார். 

“கோயம்புத்தூரில் நடந்த விசாரணையின்போது, நான் ஒரு முகவராக பதிவு செய்யப்படாததால் நான் செய்தது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் விளக்கினர். அவர்கள் உண்மையில் கைது செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் இந்த விஷயத்தை விசாரித்து வந்தனர்” என்று அவர் கூறுகிறார். 

“ஆனால் எனக்கு அஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது அப்ளிகேஷனைப் பற்றி கேட்டேன். நான் இந்த செயல்முறையை விளக்கி, நான் செய்ததற்கான கோடிங் உள்ளிட்டவற்றை அவர்களுக்குக் கொடுத்தேன். எந்தவிதமான தவறான செயலும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தினேன். வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தீங்கும் எனது ஆப் மூலமாக இல்லை என்றேன்.

நான் நேர்மையானவன், நான் பிசினஸ் செய்து வருகிறேன். இந்த ஆப் ஒருபோதும் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எனது குடும்பத்திற்கு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தருகின்றன. நான் கைது செய்யப்பட்டபோது என் மனைவியும் தாயும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். என்ன நடந்தது என்று நாங்கள் என் மகளிடம் கூட சொல்லவில்லை. எனது நோக்கங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் அதிர்ச்சியளிக்கின்றன. நண்பர்கள் எனது நோக்கத்தைப் புரிந்துகொண்டாலும், உறவினர்கள் உடனடியாக நான் தவறு செய்ததாகக் கருதினர். ரயில்வே விரும்பும் பட்சத்தில், அவர்களின் தற்போதைய முன்பதிவு முறையை மேம்படுத்த எனது யோசனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன். 

இந்த விவகாரத்தில் நான் பணத்தை மோசடி செய்ததாக ஆர்.பி.எஃப் கூறினாலும், ரயில்வேயை அடைவதற்கான கட்டணம் ஒருபோதும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்” என வேதனை தெரிவிக்கிறார் யுவராஜா. இப்போது தன் மீதான வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வருகிறார்.

– மூலம்: The News Minute

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.