செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் வரதராஜபுரம் பகுதி உள்ள ராயப்பா நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து விடும் என மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்துள்ளார்.

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், 22 அடிக்கு மேல் நீர் நிரம்பியதால் நேற்று பகல் 12 மணியளவில் முதற்கட்டமாக 1000 கன அடி அளவு தண்ணீர் திறக்கப்பட்டு நீர்வரத்து அடிப்படையில் படிப்படியாக 9000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் இரவு 9 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்ட நீரின் அளவு உடனடியாக 7000 கன அடியாக குறைக்கப்பட்டு படிப்படியாக இன்று காலை முதல் 1500 கன அடி அளவு நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் குன்றத்தூர், திருமுடிவாக்கம் மற்றும் வழுதளபேடு ஆகிய கிராமங்களில் கரையை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி மக்களை பாதுகாக்க, மொத்தம் 12 நிவாரண முகாம்களில் 852 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 385, பெண்கள் 302 மற்றும் குழந்தைகள் 165 நபர்கள் அடங்குவர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன.

குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை ஒட்டியுள்ள ராயப்பா நகர் மற்றும் மஹாலக்ஷ்மி நகர் ஆகிய இடங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உட்பட 8 பேர் கொண்ட குழு இணைந்து 40 HP மோட்டார் மற்றும் 70HP மோட்டார் ஒன்று மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர். மேற்கண்ட பகுதிகள் அடையாறு ஆற்றின் பகுதியைவிட தாழ்வான பகுதியாக அமைந்துள்ளதால் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. செம்பரபாக்கம் ஏரி உபரி நீர் நிறுத்தப்படுமாயின் தேங்கிய நீர் வடிந்துவிடும் என மாவட்ட ஆட்சியர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையை கடந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாகவே செம்பரம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதனால், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனாலேயே ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.