நேரத்தைக் கணக்கிடும் ‘ஏழரை’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. மக்கள் தங்களுக்குள் விளையாடுவது மட்டுமல்லாமல் நேரத்துடனும் விளையாடி குழப்பியடித்துக் கொண்டிருந்தார்கள். மனிதன் தடுமாறி பிழை செய்தாலும் இயற்கை அது பாட்டுக்கு தன் கடமையை சரியான நேரத்தில் செய்து கொண்டுதான் இருக்கிறது. (என்னவொரு மெசேஜ் இல்ல?!)

இந்த ‘மணிகூண்டு’ டாஸ்க்கை நம் வாழ்க்கையிலும் பின்பற்றலாம். சிலர் என்னதான் திட்டமிட்டாலும், பணிக்கு தினமும் தாமதமாகவே கிளம்புவார்கள். (நானும் அதில் ஒருவன்… ஹிஹி). குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் அந்தந்த பணிகளை செய்து முடித்து முடித்து விட்டு ‘இத்தனை மணிக்கு’ டாண் என்று கிளம்பி விடுவேன் என்று ஓர் அட்டவணையில் எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது அதை பார்த்துக் கொண்டால் நாம் நேரத்தை எப்படியெல்லாம் வீணடிக்கிறோம் என்பது தெரிந்து விடும்.

ஓகே.. 45-ம் நாளில் என்ன நடந்தது?!

ஐந்தாவது அணி (ரமேஷ், ஆஜீத், ஷிவானி) கடிகார பணியைச் செய்து கொண்டிருந்தது. ‘குக்கூ.. குக்கூ..’ என்கிற இம்சையான ஒலியை யாரிடமிருந்து கேட்கக்கூடாது என்று நான் நினைத்திருந்தேனோ, அதைக் கேட்க வேண்டியதாகிவிட்டது. ஆம், ஷிவானி தன் இனிமையான குரலில் கூவி இன்றைய நாளின் நிகழ்ச்சியை ஆரம்பத்திலேயே களைகட்ட வைத்தார்.

நள்ளிரவு 01.00 மணிக்கு ‘குல்பி’ ஐஸை ‘சிறப்பு பரிசாக’ அளித்தார் பிக்பாஸ். அதை எடுத்து வரும் ராமசாமி அண்ணன் 30 விநாடிகள்தான் இருப்பாராம். (வடக்குப்பட்டி ராமசாமியோ?!) அனிதா ஐஸ் விற்பவராக மாற, கடைக்காரரிடமிருந்து பிடுங்கிச் செல்லும் போக்கிரியாக பாலாஜி மாறி அனிதாவிடம் குறும்பு செய்தார்.

மணிக்கூண்டு நேரம் 01:30 என்று கூவியது. ஆனால் அப்போது சரியான நேரம் 03:15. பாலாஜி அணி முதலில் சொதப்பியதால் இவர்கள் நேரத்தைக் கணக்கிடுவதில் பின்தங்கியிருக்கிறார்கள். அது இவர்களின் தவறில்லை. இவர்கள் தங்களின் பங்கை சரியாகச் செய்தால் போதும். இந்த அணி முடிக்கும் போது 3 மணி 15 நிமிடங்களைஎடுத்துக் கொண்டார்கள்.

இரண்டாம் சுற்றிற்காக, முதல் அணி (சனம், நிஷா, அனிதா) மீண்டும் கடிகாரமாக மாறியது. அமானுஷ்ய சக்திகளாக ரம்யா, கேபி, ரியோ ஆகியோர் பயமுறுத்துவார்களாம். இதை பொதுவில் அறிவித்து விட்டே செய்தார் நேர்மையான பிக்பாஸ். ஆனால் பேய் ஒப்பனைக்கு ரம்யாவைத் தேர்ந்தெடுக்க கல்நெஞ்சு வேண்டும். என்றாலும் அப்போதும் அழகான பேயாக இருந்தார் ரம்யா.

பேய் டாஸ்க் மேட்டர் வெளியில் இருந்த நிஷாவிற்கு தெரியாது போல. நிஷா அடிப்படையிலேயே பயந்த சுபாவம் உள்ளவர் என்று நினைக்கிறேன். பிக்பாஸின் அதிரடியான குரலே பல சமயங்களில் அவருக்கு தூக்கி வாரிப் போடும். எனவே ரியோ பேய் ஆடையில் அருகில் வந்து கத்திய போது உண்மையிலேயே அவருக்கு வெலவெலத்துப் போய் விட்டது. நீண்ட நிமிடங்கள் ஆகியும் படபடப்பு குறையவில்லை. என்றாலும் தன் கடமையைத் தொடர்ந்து செய்தார்.

சரியான நேரம் காலை 07:00 மணி. ஆனால் மணிக்கூண்டு நேரம் அப்போது 04:30 ஆக இருந்தது. விடிந்து வெளிச்சம் வந்து விட்டதால் இப்போதுதான் தாங்கள் பிழையாக கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது. அடுத்து பாலாஜி அணி பொறுப்பேற்க வேண்டிய நேரம். ஆனால் அவரோ ‘பெப்பரப்பே’ பொசிஷனில் சுகமாக தூங்கிக் கொண்டிருந்தார். அனிதா, சுச்சி, ரம்யா ஆகியோர் தொடர்ந்து எழுப்பியும் எல்கேஜி பையன் போல சிணுங்கி எழாமல் அடம் பிடித்தார். காலிடுக்கில் தலையணையைத் திணித்துக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தார்.

பின்பு மற்றவர்கள் தொடர்ந்து வற்புறுத்திய போது ‘இருங்க… போகலாம்.. இந்த டாஸ்க் பண்ணாம உலகம் நின்னுடவா போகுது… பிக்பாஸே கேனத்தனமா ஒரு டாஸ்க் கொடுப்பாராம். நாம தூக்கத்தை விட்டுட்டு போய் செய்யணுமாம்’ என்கிற ரேஞ்சிற்கு மிக நிதானமாக ஆடைகளைத் தேடி எடுத்து சாவகாசமாக கிளம்பினார்.

ஒவ்வொரு முறையும் தன்னால்தான் லக்ஷுரி பட்ஜெட் போகிறது என்பது பாலாஜிக்குத் தெரியும். அப்படித் தெரிந்தும் அவர் தொடர்ந்து அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தன்னை ‘நிகரில்லாத போட்டியாளர்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. விசாரணை நாளில் கமலும் இவரை அழுத்தமாக கண்டிப்பது போல் தெரியவில்லை. ‘‘என்ன பாலாஜி..?’’ என்று ஆரம்பித்து சிரித்து கடந்து விடுகிறார். “தூங்கறவங்களை எழுப்புறது சரியானதில்ல’’ என்று ஏற்கெனவே சப்போர்ட்டும் செய்திருக்கிறார். எனவே பாலாஜிக்கு குளிர் விட்டுப் போகிறது.

ஒருவழியாக பாலாஜியை எழுப்பி தலைசீவி பவுடர் தடவி வெளியே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அணி ஒன்று, நேரத்தைக் கணிக்க எடுத்துக் கொண்டது 4 மணி 27 நிமிடங்கள். அடுத்ததாக ரம்யா அணி பொறுப்பை எடுத்துக் கொண்டது. நன்கு விடிந்திருப்பதைப் பார்த்த பாலாஜி, ‘’நாம் சொல்றதுதான் டைம்… என்ன இப்ப?!” என்று அதற்கேற்ப நேரத்தை திருத்தும் ‘டகால்ட்டி’ வேலையில் இறங்கினார். கடிகார முள்ளைத் திருப்பினால் நேரமும் அதற்கேற்ப மாறி விடுமா என்ன? இவர் கடகடவென்று நேரத்தை இழுக்க சுச்சி சிரிப்பை அடக்க முடியாமல் தடுமாறினார். ரம்யாவும் வேறு வழியில்லாமல் பாலாஜியின் ‘டுபாக்கூர்’ வேலைக்குத் துணை போக வேண்டியிருந்தது. (மேயற மாட்டை நக்கற மாடு கெடுக்குமாம் என்பது ஒரு பழமொழி).

இந்த அணி மூன்று மணி நேரத்தைக் கணிக்க வெறும் 1 மணி நேரம் 26 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டது. இந்த அபத்தமான திருட்டிற்கு ரம்யா எப்படி உடன்பட்டார் என்று தெரியவில்லை. ‘நேர்மையான குக்கூ வருகிறார்’ என்று ரம்யாவை கிண்டல் செய்து கொண்டிருந்தார் பாலாஜி.

‘வாட் எ கருவாட்’ என்கிற அசைவப்பாடலுடன் 45-ம் நாள் விடிந்தது. மார்னிங் டாஸ்க். தொலைக்காட்சியில் ராசிபலன்களை அர்ச்சனா சொல்ல வேண்டுமாம். உண்மையிலேயே அர்ச்சனாவின் ஆருடங்கள் நகைச்சுவையாக அமைந்திருந்தன.

அனிதா அறிவும் அழகும் ஒருங்கே அமையப் பெற்றவராம். அவர் யோசிச்சு யோசிச்சு பல விஷயங்களை சொல்லும் போது எதிரே கேட்கிறவர் யோசிக்கும் திறனையே இழந்து விடுவாராம். சுச்சி ஒரு நிமிடத்திற்கு முந்நூறு எக்ஸ்பிரஷன் கொடுத்து கின்னஸ் சாதனை செய்திருக்கிறாராம். சோமிற்கு ‘ஆன்ட்டி ஹீரோ’ ராசி உள்ளதாம். ரமேஷ் ப்ரோ இப்பதான் முழிக்க ஆரம்பிச்சு ‘டாஸ்க்’கையெல்லாம் ஒழுங்கா செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்’.

நேரத்தை மாற்றியமைப்பதில் தான் செய்த தில்லாலங்கடித்தனத்தை பாலாஜி பெருமையுடன் கிச்சன் ஏரியாவில் சொல்லிக் கொண்டிருக்க ‘அடப்பாவி மனுஷா’ என்பது போல் அர்ச்சனா, சாம், ஆஜித் ஆகியோர் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். “ஜெயிக்கறது எங்களுக்கு முக்கியமில்ல… கொஞ்ச நேரம் வரைக்கும் ரம்யா நேர்மையா இருந்தாங்க… அப்புறம் நான் இருக்க விடலை” என்றார் பாலாஜி.

இந்த விஷயத்தை வெளியில் இருந்த ரியோவிடம் சோம் சொல்ல, ‘’பாலாஜி கதை நமக்குத் தெரியும். அவன் எந்த நேரத்துல எதைச் செய்வான்னே தெரியாது. கூடவே ரம்யாவும் சுச்சியும் இருந்தாங்களே’’ என்று ஆச்சரியப்பட்டார் ரியோ.

சமையல் மற்றும் வீட்டு சுத்தம் செய்வதற்கான நேரத்தை அறிவித்தார் ‘குக்கூ’ ஆரி. முள்கரண்டியை அன்னை அர்ச்சனாவின் தலையில் ஹேர்கிளிப் ஆக செருகி குறும்பு செய்தார் ‘தங்கமகன்’ பாலாஜி. திடீரென்று பொறுப்பு வந்து சின்சியர் சிகாமணியாக வீட்டு சுத்தத்தில் சுச்சி இறங்க, ‘ஹலோ.. நீ செஞ்சியன்னா.. நாங்களும் செய்யணுமே.. டாஸ்க் பண்ண எனர்ஜி வேணும்’ என்று தடுத்துப் பார்த்தார் சனம். ஆனால் சுச்சி கேட்கவில்லை. உண்மையில் சுச்சி செய்வது சரியான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்க்கின் விதி.

பத்து மணிக்கு கிளப்ப வேண்டிய ரயிலை 11:20-க்கு கிளப்பினார்கள். இந்தியன் ரயில்வே பாணியை பின்பற்றுகிறார்கள் போலிருக்கிறது. ஒரு வழியாக மூன்றாவது அணி தனது கடிகார பணியை முடித்தது. இவர்கள் எடுத்துக் கொண்டது மூன்று மணி 31 நிமிடங்கள்.

‘ரிவர்ஸில் நடக்க வேண்டும்’ என்கிற புதிய டாஸ்க்கை பிக்பாஸ் தந்தார். இதைச் சாக்காக வைத்து ரம்யாவிடம் குறும்பு செய்து கொண்டிருந்தார் சோமு. அப்போது தரப்பட்ட லெமன் ஜூஸை ‘இப்ப துப்பணுமா. குடிக்கணுமா?” என்று முக்கியமான சந்தேகமாக ரிவர்ஸில் கேட்டுக் கொண்டிருந்தார் ஆஜீத். (நல்லா வருவீங்க.. தம்பி).

“இந்த வீட்டை விட்டுப் போறதுக்கு எனக்கு மனசே வரலை.. என்னவொரு என்டர்டெயின்மென்ட்.. எப்படில்லாம் கூத்தடிக்கறாங்க. இந்த பாலாஜி மைசூர் மகாராஜா மாதிரி ஒய்யாரமா சாய்ஞ்சுக்கிட்டு ஜூஸ் குடிக்கறான். சினிமா ஹீரோயின் பெருக்கற மாதிரி சீன் போடறாங்க. நான் அவ்ளோ கஷ்டப்பட்டு பெருக்குறேன். இந்த ஆஜீத் பய வந்து குறை கண்டுபிடிக்கறான். பின்னாடி சாம் ஸ்க்ரூ ஏத்தி விடறாங்க. ஜித்தன் ப்ரோ ரெண்டு நிமிஷம் நடந்துட்டு ஒன்றரை மணி நேரம் அதுக்கு ரெஸ்ட் எடுக்கறாரு.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா பிக்பாஸ்” என்று படுக்கையில் படுத்தபடி கன்னாபின்னாவென்று ‘செம ஹாட்’ ஆக அனத்திக் கொண்டிருந்தார் சுச்சி.

ஆஜீத்திற்கு குடுமி போட்டு தானும் குழந்தையாக மாறி ‘கெக்கே பிக்கே’வென்று பேசிக் கொண்டிருந்தார் கேபி. வெளியே அர்ச்சனா அணி கடிகாரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. விநாடியை எண்ணும் சலிப்பான வேலையை தாளம் போட்டு உற்சாகமான வேலையாக மாற்றினார் சோம். அந்த தாளத்திற்கேற்ப கரகாட்டம் ஆடிக் கொண்டிருந்தார் சனம்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எதையோ பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவை முதலில் அவுட் ஆஃப் போகஸில் காட்டி, பிறகு ஃபோகஸ் செய்தது கேமரா. வருங்கால சினிமாக் கனவுடன் எவரோ ஒரு ஒளிப்பதிவாளர் பிக்பாஸ் டீமில் இருக்கிறார் போல. அது மட்டுமில்லை. அவர் ரம்யாவின் கொலைவெறி ரசிகராகவும் இருக்கிறார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அர்ச்சனா அணி கடிகார வேலையை ‘மூன்று மணி 4 நிமிடங்களில்’ முடித்துக் கொண்டது.

அணைத்து வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சோமும் ரியோவும் பாவனையாக வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தார்கள். சிற்றுண்டி பற்றிய அறிவிப்பு அப்போது தொலைக்காட்சியில் திடீரென வந்ததால் இருவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

வடக்குப்பட்டி ராமசாமி இப்போது தொழிலை மாற்றி விட்டார் போல. குல்பி ஐஸை விட்டு விட்டு மாங்காயும் மிளகாய்பொடியும் கொண்டு வந்திருந்தார். மெரீனா பீச்சில் இப்போது பொதுமக்கள் நடக்கத் தடை என்பதால் அங்கிருந்த வியாபாரிகளிடம் சகாய விலையில் பிக்பாஸ் மொத்த கான்ட்ராக்ட் போட்டு விட்டார் போலிருக்கிறது. சுண்டல், மாங்காய், குல்ஃபி என்று எல்லாமே பீச்சோர அயிட்டங்களாக பிக்பாஸ் வீட்டில் கிடைக்கிறது.

‘அஞ்சு மணிக்கு டாஸ்க் இருக்கு. எல்லோரும் முளிக்கவும்’ என்று தனது கந்தர்வ குரலில் அறிவித்து தமிழின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருந்தார் ஷிவானி. ‘’அந்த அங்கிள் ஏன் உள்பனியனை வெளியே போட்டிருக்கார்?!’’ என்று ஆரி அணிந்திருந்த உடையை ரகசியமாக கிண்டல் செய்து கொண்டிருந்தார் ரம்யா. (‘சூப்பர் மேன்’ கேட்டகிரி எல்லாம் அப்படித்தான் டிரஸ் பண்ணுவாங்க).

‘ராஜலஷ்மி, ‘மரகதம்’ ‘ஜூலி’ என்று ரம்யாவிற்கு விதம் விதமாக பெயர் வைத்து மகிழ்ந்து கொண்டிருந்தார் அர்ச்சனா. ரோஜாவை எந்தப் பெயர் வைத்து அழைத்தாலும் அது ரோஜாதானே? (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ… போய்த்தான் பார்ப்போமே!).

அணி ஐந்து கடிகார வேலையை முடித்தது. இவர்கள் இதற்காக 3 மணி 24 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்கள். இத்தோடு இரண்டாம் சுற்று முடிந்து மூன்றாம் சுற்று துவங்குகிறது.

“ஏழைகளின் நண்பன் ஆட்டோ’ என்கிற டாஸ்க்கின் மூலம் ஆட்டோவின் பாடியை மட்டும் எடுத்து வந்து விளையாட்டு காட்டினார்கள். போட்டியாளர்கள் இதில் பயணம் செய்யலாமாம். ரம்யாவிற்கு குழந்தை பிறந்திருக்கிறது போல (என்னது… எப்ப இது… சொல்லவேயில்ல.. ஆர்மியைக் கலைங்கடா). குழந்தை போன்ற பொம்மையுடன் ஆட்டோவில் ஏறியவர், ‘ஃப்ரீயா கூட்டிட்டு போகக்கூடாதா’ என்று டிரைவர் சம்யுக்தாவிடம் ராவடி செய்தார். (ஆட்டோ என்பது பிரசவத்திற்குத்தான் இலவசம். பிரசவம் முடிந்து குழந்தை காலேஜ் போகும் வரை அல்ல). ‘டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்கிற விநோத ஒலியுடன் ஷிவானி ஆட்டோ ஓட்டி வந்த காட்சியை ரிப்பீட் மோடில் பார்த்தால் நிறைய புண்ணியம் கிடைக்கும் என்று கருட புராணம் சொல்கிறது.

“அண்ணன் யாருன்னு தெரியும்ல.. எஸ்.ஐயா இருக்காரு” என்று ரமேஷை வைத்து சோம் சொல்ல ‘எஸ்.ஐ-ன்னா.. போலீஸ்னு நெனச்சியா.. ‘சும்மா இருக்கார்’ன்றதைத்தான் சுருக்கி SI -ன்னு சொல்வோம். ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல சும்மாதான் உட்கார்ந்திருப்பார்’’ என்று ரமேஷை பங்கம் செய்தார் அர்ச்சனா.

‘பிரிந்தாய்.. துறந்தாய்.. இணைந்தாய்’ என்று அடுக்குமொழியில் ‘ரொமான்ட்டிக்காக’ பேசி கேமராவில் தன் துணைவிக்கு மணநாள் வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி. (என்றாலும் அந்த முகத்தில் ரொமான்ட்டிக் எக்ஸ்பிரஷன் வர மறுத்து அடம் பிடித்தது). மூன்றாம் சுற்றான இறுதிச் சுற்றில் முதல் அணி தனது பணியை முடித்தது. (ஏதாவது புரியுதா?!) இவர்கள் இதற்காக 3 மணி 38 நிமிடங்களை எடுத்துக் கொண்டார்கள்.

திடீரென தொலைக்காட்சி உயிர் பெற்று அதில் ஆரியின் மனைவியும் மகளும் வந்து மணநாள் வாழ்த்துக்களையும் பிரியத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். இதற்கு மெலிதாக கண்கலங்கினார் ஆரி. கிளி வேடம் போட்டுக் கொண்டு சேவல் மாதிரி ‘கொக்கரக்கோ’ என்று கத்திக் கொண்டிருந்தார் பாலாஜி. (எதை எடுத்தாலும் அதில் ஒரு ஏடாகூடம்).

ரம்யாவை மழையில் நிறுத்தி விட்டு கூண்டில் பாதுகாப்பாக நின்று கூவிக் கொண்டிருந்தார் பாலாஜி. (ஏம்ப்பா… உனக்கு மனச்சாட்சியே இல்லையா?!) சோர்ந்து போயிருந்த மக்களுக்கு ‘சுக்கு காபி’ தந்து மகிழ்ந்தார் பிக்பாஸ். ஷிவானி கூவி கூவி விற்றதாலோ என்னமோ, வாடிக்கையாளர்கள் அருகில் வர பயந்து கொண்டு தொலைவிலேயே நின்று விட்டார்கள்.

இரண்டாவது அணி இப்போது தனது இறுதிச் சுற்றை முடித்தது. இவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் 2 மணி 42 நிமிடங்கள்.

அடுத்ததாக ரியோ இருந்த அணி கடிகாரமாக மாறி வெளியே நின்றிருந்த போதா அது நடக்க வேண்டும்? அவரது மனைவியும் மகளும் தொலைக்காட்சியில் தோன்றி தங்களின் பிரியங்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்க ‘வந்து தொலைடா’ என்று கத்தி அழைத்தார் அர்ச்சனா. ‘மூன்றாம் பிறை’ கிளைமாக்ஸ் கமல்ஹாசன் போல அடிபட்ட முகத்துடன் கலங்கிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ரியோ. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மக்கள் அவரை உற்சாகப்படுத்தி தேற்றுவதோடு இன்றைய நாள் நிகழ்ச்சி முடிந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களே பிக்பாக்ஸ் கொஞ்சம் மொக்கையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

காலை எட்டு மணிக்குள் இந்தக் கட்டுரையை முடித்து அனுப்பி விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது மணி 08:44. இப்படித்தான் திட்டமிட்டு செலவழிக்காமல் தங்கம் போன்ற நேரத்தை கண்டபடி வீணடிக்கிறோம். இதுவே இந்த டாஸ்க் நமக்கு சொல்ல வரும் நீதி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.