அனுமதி பெறும்வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்று பாஜக தரப்பினருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி சரமாரியான கேள்விகளை பாஜக தரப்பினருக்கு முன் வைத்தனர். வேல் ஒரு ஆயுதம், ஆயுத சட்டப்படி அது தடை செய்யப்பட்டது எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட பின், நவம்பர் 16ம் தேதிக்கு பின் மத நிகழ்ச்சிகளுக்காக நூறு பேர் வரை கூடலாம் என அரசாணையாக தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அக்டோபர் 15க்கு பின் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வழிகாட்டு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி, மத்திய அரசு அனுமதித்துள்ளது.
கடந்த அக்டோபர் 30 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். நவம்பர் 8 முதல் துவங்க உள்ள வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது என அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டும். அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது. வேல் யாத்திரை சுமூகமாக செல்ல ஏதுவாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டும்” கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரித்து வருகிறது. இன்றும் அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசு அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும். அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கொரோனா விதிகளை கண்டிப்புடன் அனைத்து கூட்டங்கள், மத கூட்டங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர்.
பாஜகவின் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஒசூரில் பாஜக மேற்கொள்ளவிருந்த வேல் யாத்திரை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தமிழக டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாஜகவினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே என டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை அனுமதிக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை டிச.2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM