பரபரப்பு பற்றி எரியும் 2020 ஐபிஎல்-ன் கடைசி கட்டங்கள்… 52 போட்டிகள் முடிந்தநிலையில், ப்ளே ஆஃப் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸில், மும்பை ஏசி கோச்சில் இடம்பிடித்து விட, மிச்சம் இருக்கும் மூன்றே பெர்த்தில் இடம் பிடிக்க, சென்னை தவிர்த்த ஆறு அணிகளும் மூச்சைப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

நடக்க இருக்கும் நான்கு போட்டிகளும், மூன்று இடங்களுக்கான முக்கியப் போட்டிகளாய் கருதப்பட, சிஎஸ்கே பஞ்சாப் போட்டியில் அனல் தெறிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பத்தாண்டுகள் பிளே ஆஃபிற்கு போனோம், இந்த ஆண்டோ பிளே ஆஃபிற்குச் செல்ல வேண்டியவர்களையே நாங்கள்தான் முடிவு செய்வோம் என்பது போல் கேகேஆர், ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பை ஆட்டம்காண வைத்திருக்கும் சிஎஸ்கே, இப்போது பஞ்சாபின் கையிலிருந்த வாய்ப்பையும் தட்டிவிட்டிருக்கிறது.

#CSKvKXIP

டாஸ் வென்ற தோனிக்கு இதே பிட்சில், பஞ்சாபை பஞ்சராக்கி அற்புதமான சேஸிங்கை செய்து காட்டிய ராஜஸ்தானின் வெற்றியும், முந்தைய போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை பஞ்சாபைப் புரட்டிப் போட்டதும், கண்முன் வந்து செல்ல பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

பஞ்சாப்பிற்குகாக பேட்டிங் செய்ய ராகுலுடன், அணிக்கு யானைப்பலம் வந்ததைப்போல, காயத்திலிருந்து மீண்ட மயாங்க்கும் உள்ளே வந்தார். வழக்கம்போல அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த இந்த கூட்டணி ஓவருக்கொரு பவுண்டரியாய் விளாசி பெளலர்களை மிரட்ட, எங்கிடியை தோனி உள்ளே கொண்டு வர, கைமேல் பலனாய், மயாங்க்கை 27 ரன்களுடன் திரும்ப அனுப்பினார். அடுத்ததாய் உள்ளே வந்ததோ கெயில்‌. பவர்பிளேயில் 53 என்ற ஒரு நல்ல ஸ்கோரை பஞ்சாப் எட்டியிருந்தது. இந்த இரட்டையர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என நினைத்துக் கொண்டிருந்த தருணத்திலேயே எங்கிடி, தன்னுடைய இரண்டாவது ஓவரிலேயே ராகுலையும் போல்டு ஆக்கி, அணிக்குத் தேவையான பிரேக் த்ரூவைக் கொடுக்க, அடுத்ததாய் வந்த பூரனோ, இரண்டே ரன்களில் தாக்கூரின் பந்தில் வெளியேற, ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

#CSKvKXIP

ஓப்பனராய், கடந்து சில போட்டிகளில் கலக்கிய மந்தீப் உள்ளே வர, அணியோ 11 ஓவர்களில் வெறும் 69 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. மறுமுனையில் கெயில் புயல் சூறாவளியாக மாறப்போகும் திக்திக் தருணத்தை எண்ணி சென்னை ரசிகர்கள் கதிகலங்கி இருக்க, தாஹிர் தன் சுழலில் சிக்க வைத்து கெயிலை வெளியேற்றி அவர்களை ஆனந்தக் கூத்தாட வைக்க, நான்கு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப்பிற்கு நெருக்கடி ஆரம்பமானது. அடுத்ததாய் உள்ளே வந்த ஹூடா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்து பந்துகளை விளாசத் தொடங்க, அதே தருணத்தில் ஜடேஜா மந்தீப்பை அருமையாக போல்ட் ஆகி அனுப்பி வைக்க, 16.2 ஓவர்களில் வெறும் 113 ரன்களை மட்டுமே பஞ்சாப் எட்டியிருந்தது. அடுத்து உள்ளே வந்த நீஷமும், எங்கிடி வீசிய பந்தில் சிக்ஸருக்குத் தூக்க முயன்று, கெய்க்வாடிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, இதனைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மறுபக்கம் ஹூடா மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை ஆடினார்.

2015-ம் ஆண்டு, ராஜஸ்தானுக்காக ஆடிய போது டெல்லிக்கு எதிராய், 25 பந்துகளில் 54 ரன்களைக் குவித்த, அவருடைய இன்னிங்ஸை மீண்டும் ஒருமுறை ஆடிக் காட்டினார். ‘ஹுடா நட்பு கேடாய் முடியவில்லை பஞ்சாப்பிற்கு’. 30 பந்துகளில் 62 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர். கடைசி 7 ஓவர்களில் 76 ரன்கள் குவிக்கப்பட, அணி 153 என்ற ஒரு கௌரவமான ஸ்கோரை எட்ட அது உதவியது.

இன்றைய போட்டியின் போக்கும் கிட்டத்தட்ட நேற்று நடந்த இரண்டு போட்டிகளின் பேட்டனை அப்படியே பின்பற்றியது போலத்தான் இருந்தது. முதல் பாதியில் பெளலர்களின் பேரடைசாக இருக்கும் களம், இரண்டாம் பாதியில் பேட்ஸ்மேன்களின் புனிதஸ்தலமாக மாறி விடுகிறது. இதையேதான் நேற்று கோலியும் குறிப்பிட்டிருந்தார். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி எங்கிடி தந்த நெருக்கடி, ரன் குவிப்பில் ஈடுபட விடாமல் மற்ற பெளலர்கள் தடுப்பணை கட்டியது, அருமையான ஃபீல்டிங் என எல்லாமே சென்னைக்கு சாதகமாய் அமைய பஞ்சாப்புக்கோ சொல்லிக்கொள்ளும்படி அமைந்தது, ஹூடாவின் இன்னிங்ஸ் மட்டுமே!

#CSKvKXIP

154 என்ற இலக்கை எட்டக் களமிறங்கியது கெய்க்வாட் டுப்ளெஸ்ஸிஸ் கூட்டணி, தொடக்கத்தில் நிதானமாகவும் பிறகு அதிரடியாகவும் ஆடியது. அவுட் எனச் சொல்லப்பட்டு இருவருக்குமே ஒரு முறை தேர்ட் அம்பயர் மூலமாய் இரண்டாம் வாய்ப்புக் கிடைக்க, அதனைப் பயன்படுத்திக் கொண்டது இந்த கூட்டணி. 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து, அணியைப் பாதிக் கிணற்றுக்கு மேல் தாண்ட வைத்திருந்த போது, ஜோர்டனின் பந்தில் 48 ரன்கள் குவித்திருந்த டுப்ளெஸ்ஸிஸ் வெளியேறினார். அடுத்து உள்ளே வந்தார் அம்பதி ராயுடு. இந்த கூட்டணியும் வெற்றி பெறும் உத்வேகத்துடனே தொடர்ந்து விளையாடியது. அம்பதி ராயிடுவின் ஸ்டம்பிங் வாய்ப்பு ஒன்றை ராகுல் தவறவிட்டார். அற்புதமாய் ஆடிய கெய்க்வாட் 38 பந்துகளில் தன்னுடைய ஹாட்ரிக் அரைச்சதத்தைத் தொட்டு, சென்னை அணிக்கு அடுத்த ஐபிஎல்-ல் ஆடுவதற்கு ஓப்பனிங் ஸ்பாட்டிற்கு ஒரு ஸ்டார் பிளேயர் கிடைத்து விட்டார் என்பதை ஆணித்தரமாகப் புரிய வைத்தார்.

சிஎஸ்கேயின் சார்பில் தொடர்ந்து மூன்று அரைச்சதங்களை அடித்த முதல் வீரராகி இருக்கிறார் கெய்க்வாட். தீப்பொறியைக் கேட்ட தோனிக்கு, அணைக்க முடியா அக்னி ஜுவாலையாய், காட்டுத்தீயே கிடைத்திருக்கிறது! 49 பந்துகளில் 62 ரன்களைக் குவித்த கெய்க்வாட்டால், ஏழு பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே சிஎஸ்கே இலக்கை எட்டி வெற்றிக் கனியையும் கூடவே பஞ்சாப்பின் பிளே ஆஃப் வாய்ப்பையும் தட்டிப் பறித்தது‌.

Also Read: அழுகை எனும் அருவியில்… ஆனா கெத்தை விடாதீங்க கோலியன்ஸ்! #RCBvSRH

முதல் பாதியில் அதள பாதாளத்தில் இருந்த பஞ்சாப், ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி முத்திரை பதித்து, நல்ல கம்பேக்கைக் கொடுத்திருந்தது. கடைசி இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் பஞ்சாப் அணி மற்ற அணிகளுக்கு அச்சமூட்டும் அணியாகவே இருந்து வந்தது.

#CSKvKXIP

சிஎஸ்கேயோ கடந்த பல ஆண்டுகளாய் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்திருந்தாலும், இந்த சீசனிலோ காயம்பட்ட சிங்கமாய் கலங்கியதோடு பல கேலிகளையும் கேள்விகளையும் எதிர்கொண்டது. இருப்பினும் கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, பாயின்ட்ஸ் டேபிளில் பல மாற்றங்கள் நடக்கக் காரணமாய் இருந்துள்ளது. இந்த சிஎஸ்கேயைத்தானே தேடிக் கொண்டிருந்தோம்… இப்படி தொடரின் தொடக்கத்திலிருந்து விளையாடி இருந்தால், எப்போதோ அணி பிளே ஆஃபிற்குச் சென்றிருக்கும் என்ற ஆதங்கம் ரசிகர்களின் மனதில் இருந்தாலும், தோல்வியிலிருந்து பாடம் கற்று அடுத்த சீசனில் பழைய வலிமையுடன் சிஎஸ்கே திரும்பும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் விடை கொடுத்தனர்.

போட்டியில் வென்றதைவிட ரசிகர்களுக்கு இன்று தித்திக்கும் விஷயமாய் அமைந்தது, இதுதான் உங்களை மஞ்சள் ஜெர்ஸியில் பார்க்கும் கடைசி போட்டியா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இல்லை” என்ற தோனியின் பதில்தான். சிங்கத்தின் வேட்டை அடுத்த ஆண்டு தோனியின் தலைமையில் தொடரும் என நம்பலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.