அரசியல் இயக்கமாக மாறுகிறதா விஜய் மக்கள் இயக்கம்…?

 “விஜய் மக்கள் இயக்கம், விரைவில் அரசியல் இயக்கமாக மாறும்”. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உதிர்த்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்த, இதனைத்தொடர்ந்து  “கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே தமிழகத்தின் நாளைய முதல்வரே” என்ற வரிகளோடு திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களும் அடுத்தக்கட்ட சலசலப்பை ஏற்படுத்தின. 

image

இந்த நிலையில்தான், பனையூரில் உள்ள தனது இல்லத்தில் திருச்சி, மதுரை, குமரி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய்.

image

விஜய் தனது ரசிகர்களை சந்திப்பதும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதும் ஒன்றும் புதிதல்ல என்றாலும், கொரோனா காலத்தில் யாரையுமே சந்திக்காத விஜய், திடீரென நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது சினிமாவை கடந்து அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், ஒரு பக்கம் ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவாரா அல்லது இல்லையா என்பது ஊர்ஜிதமாக தெரியாத நிலையில், நடிகர் விஜயும் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறார் என்ற தகவலால், பற்றி எறியத் தொடங்கியிருக்கிறது அரசியல் களம்.

அதற்கான தீச்சுடரை சர்க்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலேயே கொளுத்தினார் விஜய்.

image

“இந்தத் தேர்தலில்  எல்லாம் போட்டியிட்டு, பிரச்சாரம் செஞ்சு,…, அதுக்கப்புறம் `சர்க்கார்’ அமைப்பாங்க… ஆனா, நாங்க முதல்ல சர்கார் அமைச்சுட்டு தேர்தல்ல நிக்கப்போறோம்” என்றார். இந்தக் கருத்தின் மூலம் விஜய் தேர்தல் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுகள் கச்சைக்கட்ட தொடங்கின.

அதன்பின்னர், அமைதியான விஜய் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் , பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து பேசும்போது “யாரை எங்கு உட்கார வைக்கணுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்” என்று அதிமுகவை மறைமுகமாக தாக்கியது அரசை உஷ்ணமாக்கியதாக தெரிகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார் முதல் கடம்பூர் ராஜூ வரை விஜய் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்தனர்.

அதே நிகழ்வில், அரசியல்ல புகுந்து விளையாடுங்க ; விளையாட்ல அரசியல் பாக்காதீங்க என்று விஜய் பேசிய பேச்சு, அவர் இந்த முறை நிச்சயம் அரசியல் எண்ட்ரி கொடுத்துவிடுவார் என்றே நினைக்க வைத்தது. இதனையடுத்து, நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய் “உண்மையை பேச வேண்டுமென்றால், சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும்போல இருக்கு என பொடி வைத்தார்” பின்னர், 20 வருடங்களுக்கு முன்னர் உள்ள விஜயிடம் இப்போதைய விஜய் என்ன கேட்பார் என்ற கேள்விக்கு “ரெய்டு இல்லாத அமைதியான வாழ்கை என்றார் விஜய் ; இருந்தாலும், இதுவும் ஜாலியாகதான் இருக்கு என பஞ்ச் கொடுத்தார்”

image

விஜய் மக்கள் இயக்கம், அரசியல் இயக்கமாக மாறும் என இப்போது அந்த “பஞ்சை” மீண்டும் பற்ற வைக்க முயன்றிருக்கிறார் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். அதற்கு காரணம் விஜய் பாஜகவில் சேரப்போகிறார் என யாரோ கொளுத்திப்போட்டதுதான். விஜயின், அரசியல் பஞ்சு பற்றுமா இல்லை தலையணைக்குள் அடங்கி கேரவனிலே பதுங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

– இராஜா சண்முகசுந்தரம்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM